காசுக்கு இரண்டு பக்கங்கள்…

குழந்தைப் பருவத்தில் 
தத்துக் கொடுக்கப்பட்டேன்!
தளிர் ஆக இருந்த நான்
துளிர் விட்டு வளர்ந்தேன்.
ஓர் ஆறேழு வயதிருக்கும்…
வம்பில் வாய் வளர்ப்போர்
அம்பில் நஞ்சு கலந்து
“நீ ஒரு தத்துப் பிள்ளை”
என…
அங்ஙனமாயின் எங்ஙனம்
நான் தத்துக் கொடுக்கப்பட்டேன்?
என் அம்மா அப்பா யார்?
பெற்று எடுத்து என்னைத்
தத்து கொடுத்தது ஏன்?
தடுமாற்றத்துடன் தகவல் தெரிய…
ஒருநாள்…
அவர்களைக் கண்டு ஆர்ப்பரித்தேன்.
பாசம் எல்லை மீற பரிதவித்தேன்.
அன்னையே! ஆசைத் தந்தையே!
என்னை நெஞ்சோடு அணைப்பீரா?
மடியில் கிடத்திக் கொஞ்சுவீரா?
தலைவலிக்குத் தைலம் தடவுவீரா?
காணாத உம்மைத் தேடி
வீணான நாட்களை அறிவீரா?
என…
அன்னையும் அப்பனும் ஆட்கொள்ள
அன்புக் கடலில் திளைத்தேன்.
ஆனந்தக் குளத்தில் மிதந்தேன்.
பெற்றத் தாயினும் தந்தையினும்
உற்றத் தாயாக தந்தையாக
வளர்த்தப் பெற்றோர் நினைவால்…
நெஞ்சம் மிகவும் நெக்குருகி
வஞ்சனையின்றி அன்புப் பாராட்டினேன்.
இந்தப்பக்கம்…
“எங்களை விட்டுப் பிரிவையோ?”
என…
தத்து எடுத்தோர் தத்தளிக்க,
அந்தப் பக்கம்…
“பெற்றோரே உனக்கு உற்றவர்”
என…
பெற்றுப் போட்டவர் கதற,
குடும்பங்களின் போராட்டத் தீயில்
இருதலைக் கொள்ளி எறும்பானேன்!
பேசிப் பேசிப் பேதலிக்கப்பட்டு
ஒரு சமயம்
பெற்றோர் பக்கம் சாய்கிறேன்.
மற்றோர் சமயம்
தத்துப் பக்கம் சாய்கிறேன்.
மொத்தத்தில் நான் நானாகவே இல்லை!
பேச்சுக்குக் கூப்பிட்டால் நீவீர்
மூச்சுக்கு முன்னூறு குற்றம் கூறி
ஏச்சுக்கும் பேச்சுக்கும் எனை
ஆளாக்கி அவதிப்படச் செய்கிறீர்.
விக்கிரமாதித்த ராசா போல்
பெற்றோரிடம் ஓர் ஆறுமாதம்
வளர்த்தோரிடம் ஓர் ஆறுமாதம்
இளைப்பாறுகிறேன் என்று இயம்பினால்,
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
பழுது கண்டு பரிதவிக்கச்
செய்வது நியாயமா?
என் பாசம் இருவருக்குமே…
என் நேசம் இருவருக்குமே…
காசுக்கு இரண்டு பக்கம்!
இதில் நான்…
பேசுவது எந்தப் பக்கம்?

பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!

எங்கள் காலத்தில் ஐந்து வயது நிறைவடைந்த பிறகுதான் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் என்னையும் என் பெற்றோர் சேர்த்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே ஆர்வமிகுதியால் ஒரு சிறுகதை எழுதி அதனால் நான் கந்தலாகிப் போன கதைதான் கீழே வருவது!

என் தந்தை தான் தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். அந்நாளில் அரசியல் முதற்கொண்டு உலக நடப்புகளை எங்களிடம் உரையாடுவார்.

வாரப் பத்திரிகைகளை படிக்கும் பழக்கம் எங்களது சீனு அண்ணாவினால் தான் ஏற்பட்டது.

பத்திரிகைகள் வந்த உடனேயே யார் முதலில் படிப்பது என்பதற்காக என் அக்கா சாந்தாவிற்கும் அண்ணன் விஜிக்கும் எனக்கும் இடையே பலத்தப் போட்டியே நடக்கும். சில சமயம் சீட்டுக் குலுக்கிப் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அதற்குப் பிறகு அங்கே-இங்கே என்று பத்திரிகை விழுந்து கிடப்பதைப் பார்த்து என் அம்மா “வந்தப்போ இதுக்கு இருந்த வாழ்வென்ன… இப்போ இருக்கற நெலமை என்ன!” என்று அங்கலாய்ப்பார்.

இப்படியாகப் பத்திரிகைகள் படித்ததின் விளைவாக என்னுள் புகைந்து கொண்டிருந்த கதை எழுதும் ஆர்வம் நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, நானா சும்மா இருப்பேன்? பேனாவை எடுத்தேன். என் கற்பனைகளை கதை மாலையாகத் தொடுத்தேன். அந்த மாலையை அப்படியே கசங்காமல் உதிராமல் ‘குமுதம்’ இதழுக்கு அனுப்பி வைத்தேன்.

அப்போது எனக்கு வயது பன்னிரண்டு தான்!

சில நாட்கள் சென்றன…

“போஸ்ட்!”. திடீரென்று ஒரு குரல்.

என் தந்தை தான் அதை வாங்கினார். என் நல்ல காலம், அம்மா உள்ளே ஏதோ வேலையாக இருந்தார்.

“என்னம்மா இது?” என்று சொல்லியவாறே அந்தக் கவரை என்னிடம் கொடுத்தார். கவரின் மேலேயே(!!) இருந்த ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற முத்திரை என்னைப் பார்த்துச் சிரித்தது!

நான் படபடப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்ட போது, என் தந்தை திரும்பவும் கேட்டார்…

“என்னம்மா அது… ராணி?”

“இல்லப்பா… (தயங்கியவாறு)… நான் ஒரு கதை எழுதி குமுதத்துக்கு அனுப்பியிருந்தேன்… அதைத் திருப்பி அனுப்பி இருக்காங்க.” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு உள்ளே போக முயற்சித்தேன்.

“கதையா? எங்க, குடு பாக்கலாம்!”

‘பார்க்கலாம்’ என்பது அவர் வார்த்தையில் ‘படிக்கலாம்’ என்று அர்த்தம் என்பது அவர் படிக்க உட்கார்ந்தபோது தான் எனக்குப் புரிந்தது!

சட்டதிட்டமாக உட்கார்ந்து கண்ணாடிப் போட்டுக்கொண்டு நிதானமாக அவர் வாசிக்க ஆரம்பித்த போது… சத்தியமாகச் சொல்கிறேன், நான் பட்ட அவஸ்தை அதற்குப் பிறகு நான் குழந்தை பெற்றபோது ஏற்பட்டத் தவிப்பைவிட சொல்லமுடியாத அவஸ்தை… அவஸ்தையிலும் அவஸ்தை.

‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற வாசகத்தில் அவர்கள் வருந்துகிறார்களோ இல்லையோ, அதைப் பெறுகின்றவர்கள் வருந்துகின்ற வருத்தம் இருக்கிறதே… சொல்லி மாளாது, சொன்னால் புரியாது!

என் தந்தை ‘படிக்கப்படிக்க’ என் நெஞ்சு ‘படபட’வென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

வீட்டிலுள்ள ஹாலுக்கும் நடைக்கும் என்று மாற்றி மாற்றி திரிந்துகொண்டிருந்தேன். ஐயோ! இந்தக் கதையைப் படித்தால் அப்பா… என்னைப்பற்றி என்ன நினைப்பார்? கதையில் வரும் கதாநாயகியைப் போல்தான் நானும் என்று நினைத்து விடுவாரே! சத்தியமாக நான் அப்படி நடக்க மாட்டேன் என்று அவருக்கு எப்படிச் சொல்வது? யார் சொல்வது? அல்லது எப்படிப் புரியவைப்பது?! மேலும் நான் எப்படிப்பட்ட கதையை எழுதியிருக்கிறேன் என்பது என் அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான்… என் தாவு தீர்ந்துவிடும்! உயிருக்குயிரான என் அம்மா என்னைக் கொன்றே போட்டுவிடுவாரே! ஐயோ கடவுளே! நான் தெரியாமல் இப்படி ஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு. சத்தியமாக இனிமேல் நான் இந்த மாதிரி கதையெல்லாம் எழுதமாட்டேன். விநாயகா – ஒரு இரண்டணாவுக்கு (அந்தக் காலத்தில் அதிக காசுதான்!) கற்பூரம் வாங்கி உனக்கு ஏற்றிவிடுகிறேன்! (இந்த மாதிரி இரண்டணா கற்பூரங்கள் விநாயகருக்கு நான் நிறைய பாக்கி வைத்திருக்கிறேன்!)

அப்பா படித்து முடித்து விட்டாரா என்று மெல்ல எட்டிப் பார்த்தேன். ஊஹூம். அவர் படித்தார்… படித்தார்… படித்துக்கொண்டே இருந்தார். நிச்சயாமாக நான் தொடர்கதை எழுதவில்லை… சிறுகதைதான் எழுதியிருந்தேன். நெஞ்சு படபடக்க திரும்பவும் திரும்பவும் தவிப்புடன் அங்கேயும் இங்கேயும் நடக்கத் தொடங்கினேன்.

நடுநடுவில் என் அம்மா ஏதோ பேசினார். இப்போது நினைவில் இல்லை! அப்போதும் என் நினைவில் இருந்திருக்காது! ஏனெனில் நான் அரண்டு மிரண்டு போயிருந்த நேரம் அது.

திரும்பவும் என் கற்பனைகள் என்னை கலங்கடித்தன. என் தந்தை நான் எப்படிப்பட்ட சிறுகதை எழுதியிருக்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது திரைப்படம் போல் விஷூவலாக நான் பார்க்க முடிந்ததில் சின்னாபின்னமாகிப் போனேன்.

என் தாய் ஓர் அற்பப் புழுவாக என்னைப் பார்ப்பது போலவும் ஏகத்துக்கும் என்னை ஏசுவது மாதிரியும் கண்டு திண்டாடிப் போனேன்.

ஏனெனில் சாதாரணமாக தந்தை எங்களையெல்லாம் எப்போதுமே எதுவும் கேட்கமாட்டார். கண்டிக்க மாட்டார். அவரின் உருவமும் ஒரு மரியாதைக்கான உருவமாக இருக்கும். அந்தக் காலத்திலேயே அவரை ‘ஜென்டில்மேன்’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் மெத்தை போட்ட வில் வண்டியில் அவர் கம்பீரமாக ஏறி அமர்ந்து செல்வதைப் பார்க்கவே அழகாக இருக்கும். வில் வண்டியின் சத்தம் மத்தியான நேரங்களில் கேட்டாலே பெரும்பாலும் சரியாக மணி ஒன்றரை இருக்கும் என்று என் பள்ளித் தோழிகள் சொல்லும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். தவறாமல் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொள்வதைப் பார்த்து ‘நம்ப எம்.ஜி.ஆர். போகிறார்ப்பா…’ என்பார்கள். விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்துடன் நிமிர்ந்தப் பார்வையோடு குடும்பச் சண்டைகளை நொடிப்பொழுதில் தீர்த்து வைப்பதிலாகட்டும், ஏழைகளுக்கு பகட்டின்றி கல்வி தர முயன்றதாகட்டும், பதவிகள் தேடிவந்த போதும் அதை மறுத்ததாகட்டும், தருமத்தை எங்கள் தலையில் ஏற்றியதாகட்டும், எல்லா விதத்திலும் ஓர் ஒப்பற்றத் தந்தையாக இருந்து எல்லா பண்புகளையும் அன்புகளையும் நாங்கள் அரவணைக்கக் காரணமானவர். ஆரம்ப காலங்களில் என் தந்தை நீதிக் கட்சியில் (Justice Party) இருந்து, பின் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தைப் பெரியார் அவர்களிடம் இருந்து பிரிந்த உடனே 1949-ல் வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பட்டி தொட்டியெல்லாம் திரண்டுவரும் அளவிற்கு நண்பர்கள் திரு.தரும கவுண்டர், திரு. பொன்னுசாமி கவுண்டர் அவர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் மாநாடு நடத்தியவர்! மேடையில் நகைச்சுவை வேந்தர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கடத்தைத் தட்டிக்கொண்டே பாடியது நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் காலத்திலேயே குடுமி தேவையில்லை என்று கிராப் வைத்துக்கொண்டவர்!

அதனாலேயே இப்படிப்பட்ட தந்தையின் மதிப்பில் நான் குறைந்துவிடுவேனோ என்ற தவிப்பு என்னைத் தடுமாறச் செய்தது.

என் அம்மா அப்படியே அப்பாவிற்கு நேர் எதிர். கொளுத்திப் போட்ட ஊசிப் பட்டாசுதான்! படபடவென்று வெடிப்பவர். அப்போதைக்கு அப்போதே பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்! முகத்துக்கு நேராக எதையும் கேட்டு எகிறிவிடுவார்! அந்தக் கால பெண்மணி என்பதால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். குற்றம் செய்தவர் யாராயினும் குற்றவாளிக் கூண்டில் நின்றே ஆகவேண்டும். அன்பை ஆறாக… இல்லை இல்லை… கடலாக… இல்லை இல்லை… வானமாகக் காட்டித் திக்குமுக்காட வைப்பவர். அவர் மடியில் நாங்கள் புரண்ட காலத்தை மறக்கமுடியுமா? நான் எம்.ஏ. படிக்கும்போது கூட எங்கள் ஐந்து பேருக்கும் சோறு ஊட்டியவர். ஆனால் தவறு என்று வரும்போது ரொம்பவுமே ஸ்ட்ரிக்ட் ஆனவர்.

ஹூம். இந்தச் சிறுகதையை நான்தான் எழுதினேன் என்று தெரிந்தால் அவர் எவ்வளவு வருத்தப்படுவார் என்பதுடன்… வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் முதுகில் ‘டின்’ கட்டிவிடுவார் என்ற பயமும் ஆட்டிப்படைத்தது!

“எப்படியெல்லாம் வளர்த்தேன்… இப்படி எழுதிவிட்டாயே…?” என்று நினைப்பதுடன் விடமாட்டாரே… “எப்படி இப்படி எழுத உனக்கு மனத்துணிவு வந்தது?” என்று வேறு கேட்பாரே… இதற்கு நான் என்ன பதில் சொல்வது! எப்படிச் சொல்லப்போகிறேன்? என்னால் நிச்சயமாக உண்மையான பதிலைச் சொல்லமுடியும்… சொல்லுவேன்… ஆனால் அம்மா அதை ஏற்றுக்கொள்வாரா?

அது கிடக்கட்டும். அப்பா படித்து முடித்துவிட்டாரா… எட்டிப் பார்க்கிறேன்! ம்ஹூம்… இன்னும் முடிக்கவில்லை. ‘ஐயோ… அப்பா! என்னப்பா… எழுத்துக் கூட்டியா படிக்கிறீங்க… சீக்கிரம் படிங்களேன்… என் கஷ்டம் எனக்கு. அவர் சரியாகத்தான் படித்துக்கொண்டிருந்தார்!’

திரும்பவும் திரும்பவும் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து என் கழுத்து ஒட்டகச் சிவிங்கி போல் அப்போது நீண்டிருக்குமோ?

அப்பாடா! ஒருவழியாக படித்து முடித்து விட்டார்! ஆஹா… என்ன மகிழ்ச்சி! விறுவிறுவென்று அவரை நோக்கிச் சென்றேன்.பலிஆடுபோல் இருந்தேன். என்ன சொல்லப் போகிறாரோ என்று திருதிருவென்று முட்டைக் கண்கள் பிதுங்க விழித்தவாறு நிற்க… அவர் “இந்தாம்மா!” என்று கதைத் தாள்களைக் கொடுத்துவிட்டு, இயல்பாக… மிகவும் இயல்பாக… அவரது வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்!

நான் திகைத்து நின்றேன். என்னால் நம்பவே முடியவில்லை!

அன்றைக்கு மட்டுமல்ல… அதற்குப் பிறகு வந்த நாட்களில் கூட அவர் அந்தக் கதையைப் பற்றி ஒன்றுமே கூறவுமில்லை கேட்கவுமில்லை. அப்படியும் என்றோ ஒருநாள் என் அம்மாவிடம் இதைச் சொல்லப் போகிறார்… அதனால் பூமி கிடுகிடுக்கப் போகிறது என்று பலநாட்கள் காத்திருந்தேன்.

ஊஹூம். ஒன்றுமே நடக்கவில்லை!

அதை நினைக்கும் போதெல்லாம் என் தந்தை உண்மையாகவே ஒரு ‘ஜென்டில்மேன்’ தான் என்று நினைத்து மகிழ்வதுண்டு.

சரி… ஒரு சின்னக் கதையை எழுதிவிட்டு நான் ஏன் இப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டேன்?

அப்படி என்னதான் அந்தக் கதையில் இருந்தது?

இருபது நூறாண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் காதல் திருமணங்கள் கிழிந்த நிலையில் இருக்கும்போது… சுமார் ஓர் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன்பே காதலர்கள் குடும்பத்தின் அனுமதி கிடைக்காததால் ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் அவர்களாகவே சென்று திருமணம் செய்துக்கொள்வதுபோல் கதை எழுதியிருந்தேன்! இது இப்போது மிகச் சாதாரண ஒரு கதைதான். ஆனால் அப்போது அது தலையைப் பலியாக எடுக்கக் கூடிய கதை! அக்காலத்தில் குமுதத்தின் தாக்கம் எனக்கு அதிகம் இருந்தது. ரெஜிஸ்ட்ரார் திருமணம் என் குடும்பத்தில் உறவினர் ஒருவர் அப்போது செய்திருந்தார். அதைக் கதையில் சேர்த்துக் கொண்டேன். அப்படியே ஈயடிச்சான்-காப்பி மாதிரியான ஒரு கதை!

புரட்சிகரமாக கதை எழுதிவிட்டதாக நினைப்பு! இன்னொன்று… யாருக்கு தெரியப் போகிறது என்று நினைத்தேன்! கதையைத் திருப்பி அனுப்புவார்கள் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது!

முக்கியமாக… நான் அந்தக் கதையில் வரும் கதாநாயகி போல் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்வேன் என்று பெற்றோர்கள் நினைத்துவிடுவார்களே என்பதுடன்… பன்னிரண்டு வயதிலேயே இப்படி எழுதிவிட்டேனே என்று என் அம்மா நினைத்து விடுவார் என்ற கவலை தான் என்னை வாட்டி எடுத்துவிட்டது! நல்ல காலம். என் தந்தை என்னைக் காப்பாற்றி விட்டார்! (ஏழு வயதிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா… நீங்கள் நினைப்பதுபோல் அது காதல் கதையல்ல, துப்பறியும் கதை!)

இப்போதெல்லாம் சிறுவயதிலேயே எழுத்தாளர் ஆவதெல்லாம் போற்றப்படுகிறது. போதிய வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.

விளையும் பயிரின் ஆர்வம் தெரியாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்களே… பாவம் நான்!

‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்கிற முத்திரையுடன் கதைகள் திரும்பி வந்தால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளர் ஆகப்போகிறீர்கள் என்பதற்கு அதுதான் முதல் படி!

ஏறுங்கள்… நீங்களும் ஏறுங்கள்!

அரசன் அன்று கொல்வான்…

தாங்காத துயர் பட்டு
அல்லல்பட்டு அவதிப்பட்டு
குற்றுயிரும் குலை உயிருமாய்
முற்றுகை இட்ட நாளில்
பற்றுவதற்கு கையில்லா நிலையில்
தூற்றுவதற்கு யாருமில்லா நிலையில்
நடவுகளைப் பார்க்காமல்
கடவுள் கடல் கடந்து
சென்றுவிட்டான் என்றேன்!
இல்லை…
இப்போதுதான் அவன்
திரும்பவும் மெல்ல
எட்டிப் பார்க்கிறான்…
பரிதவிப்புடன் பயந்து
பாழும் மக்கள் பட்ட
அவதிக்கு ரணம் ஆற
மருந்து கொடுத்துள்ளான்!
நீதி வென்றது!
அநீதி தோற்றது!
தர்மம் தழைத்தது!
அதர்மம் அழிந்தது!
ஆட்டம் முடிந்தது!
அநியாயம் வீழ்ந்தது!
அரசன் அன்றே கொல்வான்…
தெய்வம் நின்று கொல்லும்!
இனி எல்லாம் சுகமே.
உடும்பு போன்ற
பிடிவாதம் வென்றது
அதனால்…
கடிவாளம் போட்ட குதிரைபோல்
கூட இல்லாமல்
அறம் மீறியதால்
ஆளுமை துறந்து அரசப் பதவி இழந்து
அரியணை ‘சரிய’ணையாக
கம்பீரம் கலகலத்து
அழிச்சாட்டியம் ‘அமர’மாக
அறிவு சொன்னது
ஆண்டவன் இருப்பது உண்மையே!
நான்…
உள்ளுக்குள் அழுதவள்
உயிருக்குள் துடித்தவள்
உயிர்ப்பிக்கும் வழி தெரியாமல்
பாசத்தால் பரிதவித்தவள்
நேசத்தால் நெக்குருகியவள்
இன்று…
ஆடுகின்றேன் பாடுகின்றேன்…
குதிக்கின்றேன் கும்மாளமிடுகின்றேன்…
யாரைப் பார்த்தாலும் சிரிக்கின்றேன்…
ஊரே அழகாகத் தெரிகிறது…
உலகமே கண்ணுக்கு விருந்தாக
இன்றுதான் எனக்குத்
தீபாவளி!
இல்லை… இல்லை…
பொங்கல்!!
இல்லை… இல்லை…
தமிழர் திருநாள்!!!
எனினும்…
யாரிடமும் பகையில்லை
எம்மதமும் சம்மதமே
இனியாவது எங்களை
மனிதர்களாக உணருங்கள்.
நாங்கள் என்றுமே உங்களுக்கு 
எதிரிகள் இல்லை.
சூழ்நிலை எதிரியாக்கியது.
மூச்சுத் திணறுகிறது
அதற்கு…
முதலில் நாங்கள்
முழு சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டும்.
யாரும் யாருக்குமே அடிமை இல்லை
இருபதாம் நூற்றாண்டைக் கடந்தும்
இருளில் இருப்பது நியாயமா?
சகோதரர்களே சகதியில் தள்ளலாமா?
நாம்…
நாட்டு மனிதர்கள்
காட்டு மனிதர்கள் அல்ல
உதிரங்கள் ஒன்றுதான்
உறுப்புகளும் ஒன்றுதான்
இதில்…
உயர்வென்ன? தாழ்வென்ன?
கைக்கொடுத்தோம் நம்பி
கைக்கொடுங்கள்
காத்திருக்கிறோம்!

பழுத்த ஓலை!

சிறுகதை

“ஓய்… எம்மோவ்… அதென்னது இந்த ஏரியில மீன் புடிக்கிறவங்கள்ளாம் நம்மள மாதிரிப் பேசாம வேறமாதிரிப் பேசறாங்க?” தாய் நாகாத்தாளைப் பார்த்து அவளது மகள் சின்னப்பொண்ணு கேட்டாள்.

“அதா… தாயீ… நாம இந்தக் காஞ்சீபுரத்துல சீரும் சிறப்புமா நல்லா வாள்ந்தவங்க… ஒங்க அப்பாரோட அப்பாரு நீரு, நெலம், ஆளு, அம்புன்னு கொடிகட்டி வாள்ந்தவரு… ஆனா… பொம்பள சகவாசத்துல சொத்தெல்லாம் அளிஞ்சி… குடும்பமே நாசமாப் போச்சு. பாவம் ஒங்கப்பாரு என்னைய இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு இந்தக் காஞ்சீபுரம் நத்தம்பட்டு ஏரிக்கு வந்து முன்னப் பின்னத் தெரியாத இந்த மீன் புடிக்கிற வித்தயைக் கத்துக்கிட்டு கஷ்டப்பட்டாரு. இடையில வந்து இந்த சனங்களோட சேர்ந்துக்கிட்டதால முளுசா அவங்க பேசுறமாதிரி நமக்கு வரல இல்ல… மகராசன் என்ன மவராணி மாதிரிதான் வெச்சுருந்தாரு. ஒனக்கும் எனக்கும் கொடுத்து வெக்கல. ஒனக்கு நாலு வயசாகும்போதே ஏதோ சீக்கு வந்து மேல போய் சேந்துட்டாரு. சரி… சரி… கெளம்பு ஏரிக்குப் போவலாம்.”

“என்ன ஏதுக்குக் கூப்பிடற?”

“அடியே… கண்டாங்கிச் சிறுக்கி! பேருதான் சின்னப்பொண்ணு… ஆனா நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோ… மத மதன்னு நீ நிக்கறதப் பாத்தா எனக்குப் பயமாருக்கில்ல? சீக்கிரமா ஒன்ன ஒருத்தன்கிட்டப் புடிச்சுக் குடுத்துட்டேன்னா நான் நிம்மதியாய் ஊருப் போய்ச் சேருவேன். அதுக்கு முன்னால ஒனக்கு இந்த மீன் புடிக்கிற தொளில கத்துக் குடுத்திட்றேன். கெளம்பு… கெளம்பு.”

காற்று நிறைந்த இரண்டு டயர் டியூபுகளையும் கூடவே கில்நெட் எனப்படும் மீன் வலைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

சின்னப்பொண்ணுக்குக் கடல் மாதிரி தெரியற ஏரியைப் பார்க்கவே எப்போதும் பயமாக இருக்கும். நெறைய ஆண்களும் பெண்களும் படகுகளிலும்… சிலர் காற்றடித்த டயர் டியூபுகளின் உள்ளே உடம்பை நுழைத்துக்கொண்டும்… கால்களில் தள்ளியவாறே ஏரியின் உள்ளே செல்வதைப் பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.

“அடி ராசாத்தி… அங்கென்னத்தப் பாக்கற? இந்தா… இப்பிடிக்கா வா. பொடவைய மேல தூக்கிக் கட்டிக்கோ.”

“அய்யோ… எம்மோவ்… கூச்சமா இருக்கு. அல்லாரும் பாக்கறாங்கல்ல?”

“அவ(ன்) பாக்கறான் இவ(ன்) பாக்கறான்னு இருந்தியானா இன்னக்கி நாம மீன் புடிச்சி வெளங்கினாமாதிரிதான். இந்தா… ஒடம்புல இந்த டியூப மாட்டிக்கோ. தோ பாரு… என்னமாதிரி அப்டியே கால்ல தண்ணிய தள்ளிக்குனு உள்ள ஊடாற போகணும். ஏரியக் காக்கற அந்த மகமாயி நம்மளக் காப்பாத்துவா.”

“என்னா… நாகா‍‌யீ… புதுசா பொண்ணுக்குத் தொளில கத்துக் குடுக்கறியா?” கேட்டது அண்ணாச்சி அருமை நாயகம்.

“ஆமா அண்ணாச்சி.”

“சரி… சரி… ஒரு வெஷயம். நாளைக்கி மீன் டிபார்ட்மெண்ட் ஆபீச சீக்கிரமே மூடிப்புடுவாங்களாம்ல. மீன் புடிக்கறதுக்கு டோக்கன் வாங்கனுமில்ல. அதனால நேரத்துலயே போயி டோக்கன் வாங்கிடுங்க… இந்தச் சேதிய அல்லார்கிட்டையும் சொல்லிப்புடு புள்ள.”

“சரிங்க அண்ணாச்சி…”

நாகாத்தாளும் சின்னப்பொண்ணும் அப்படியே டயர் டியூபில் நீந்திக்கொண்டு ஏறக்குறைய ஏரியின் நடுப்பகுதிக்கே வந்து விட்டனர்.

“இத… இதப் பாரு… இத மாதிரித் தான் இந்த கில்நெட்டைப் போடணும்… கொஞ்ச நேரத்துல இதுல நிறைய மீனுங்க உளும்.”

ஒரு நாலு மணிநேரம் மீன் பிடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இப்போதெல்லாம் நாகாத்தாளை விட சின்னப்பொண்ணுதான் மீன் பிடிப்பதில் கெட்டிக்காரி!

சின்னப் பொண்ணு மீன் பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து நத்தம்பட்டி ஏரியே கலகலத்தது.

தினமும் கண்டாங்கிச் சேலையுடன் அவள் நடந்து வருவதே நாட்டியம் போல இருந்தது.

அவள் சேலையைத் தூக்கி மேலே இடுப்பில் கட்டும்போதெல்லாம் கட்டிளங் காளைகள் தலை கிறுகிறுத்துப் போனார்கள்.

இதையெல்லாம் சட்டை செய்யாமலே இருந்தாள் சின்னப்பொண்ணு.

…………………………………………………………………………………………………

கொஞ்ச நாட்களாகவே அவளது தாய் நாகாத்தாளுக்கு உடம்பு முடியாமலே இருந்தது.

அதனால் சின்னப்பொண்ணு கொஞ்ச நாட்கள் மீன் பிடிக்கப் போகாமல் இருந்தாள்.

“எத்தனை நாளுக்குத் தான் தொளிலுக்குப் போகாம இருப்பே? எனுக்கு ஒண்ணும் ஆயிப்புடாது. அதான் வைத்தியன் வந்து மருந்து குடுத்திருக்கான்ல? அல்லாம் சரியாப் போயிடும். நீ கெளம்பு.” நாகாத்தாள் சத்தம் போட்டாள்.

கொஞ்ச நாட்கள் என்றதுபோய் மாதக் கணக்கில் படுத்தப் படுக்கையானாள். அவளுக்குப் பணிவிடை செய்துவிட்டு விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மீன் பிடிக்கச் சென்றுவிடுவாள் சின்னபொண்ணு. ஏதோ… குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று சின்னப்பொண்ணுக்கு உடம்பை என்னமோ செய்தது.

சமாளித்தவாறு டயர் டியூபை கால்களால் தள்ளிக்கொண்டே சென்றவள் ஏரித் தண்ணீரில் கில்நெட்டையும் போட்டுவிட்டாள். மீன்கள் விழத் தொடங்கின. பிறகு அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

விழித்தபோது அவளது குடிசையில் இருந்தாள்.

அவளையே பார்த்தவாறு அழகிய கட்டு மஸ்தான ஒரு வாலிபன் நின்றிருந்தான்!

அவசர அவசரமாக எழப்பார்த்தவளை, “எளாத… எளாத… ஒனக்கும் ஒங்க தாயி மாதிரியே வெஷ ஜுரம். இப்பத்தான் வைத்தியர் வந்து போனாரு. பக்கத்துல கஞ்சி இருக்கு. சாப்டுட்டு… இந்தா இந்த மாத்திரையை போட்டுக்குனு நல்லாத் தூங்கு. ஒங்க ஆத்தா சாப்டுடுச்சி. அதுக்கும் மாத்திரைய நானே குடுத்துப்புட்டேன். சூரியன் சாஞ்சதும் வாரேன்!”

அவன் கிளம்பிவிட்டான்.

சொன்னது போலவே பொழுது சாய்ந்ததும் அவன் வந்தான்… பேசினான்… சென்றான்…

திரும்பவும் வந்தான்… அவளது தாய் மூலமாக அவனது பெயர் அர்ச்சுனன் என்பதும் மீன் பிடித் தொழிலில் கெட்டிக்காரன் என்பதும் ஒரு படகுக்குச் சொந்தக்காரன் என்பதும் தெரிய வந்தது. மயக்கமாக ஏரியில் விழுந்தவளை அவன்தான் காப்பாற்றி வீடு சேர்த்திருக்கிறான்.

அவள் பிடித்த ரோகு, கட்லா, திலப்பியா, வெரால் மீன் மூட்டையையும், கில்நெட் டயர் டியூபையும் தூக்கிக்கொண்டு வந்ததோடு, மீன்களையும் அவனே விற்றுப் பணத்தையும் கொடுத்திருக்கிறான் என்பது தெரிந்து மனம் நெகிழ்ந்து போனாள்.

சின்னப்பொண்ணும் அவளது தாய் நாகாத்தாளும் அவன் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

சின்னப்பொண்ணுவின் நோய் கொஞ்சங்கொஞ்சமாக குணமாகிய அதே நேரத்தில் நாகாத்தாளின் நோய் முற்றத் தொடங்கியது.

எதிர்பாராத ஒரு நாளில் நாகாத்தாள் இறந்து போனாள்.

தாயை இழந்த அதிர்ச்சி நீங்க சின்னப்பொண்ணுவிற்கு நிறைய மாதங்கள் ஆகின.

அந்தச் சமயங்களில் எல்லாம் அர்ச்சுனன் தான் அவளுக்கு ஆதரவாக இருந்தான்.

………………………………………………………………………………………….

நாகாத்தாள் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.

ஏரியைப் பார்த்தவாறு ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருந்தாள் சின்னப்பொண்ணு.

“எந்தக் கோட்டைய புடிக்குறாப்புல?” கேட்டது அர்ச்சுனன்.

“அர்ச்சுனன் கோட்டையைத்தான்!”

“ஆரு? இந்தச் சின்னப்பொண்ணா புடிக்கப்போறது?”

“இல்ல… இல்ல… நான்… இப்போ பெரீய்ய்ய்ய்யப் பொண்ணு. அதென்னது பேரு அர்ச்சுனன்னு? இந்தக் காலத்துல ஆரு ராசா பேரெல்லாம் வெச்சுக்கிறாங்க?”

“நானா வெச்சுக்கிட்டேன்? என்னப் பெத்தவங்க வெச்சப் பேரு.”

“அர்ச்சுனன்னா… வில் அம்பு விடுவியரோ?”

“முன்னாலேயே உட்டுட்டேன்!”

“எப்போ?”

“இப்போதான்!”

‘இப்போவா? யார் மேல?”

“ஒன் மேலதான்… அதான் சாச்சிட்டேன்ல?”

“ஐயே… ரொம்ப வம்படிக்கிறவங்கதான் நீங்களோ?”

“வம்படிக்கச் சொல்றது ஒங்கக் கண் அம்புதாங்கோ!”

“நல்லா இருக்கே நீங்க சொல்றோது… நானே சிவனேன்னு இருக்கேன்!”

“ஐயையோ… யாரது அந்தச் சிவன்?”

“ஐயே… ச்சீ… நான் சொன்னது சாமிய!”

“நீ என்னமோ சிவனேன்னு இருந்தாலும் ஏன் ஜீவன் ஒன்னிட்டுல்ல இருக்கு!”

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் படபடப்புடன் குடிசையை நோக்கி ஓடலானாள். குடிசைக்குள் வந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

“ஏய்… அளாத!”

“இல்ல… என்னோட ஆத்தாளும் போய்ச் சேர்ந்துட்டா. குடிசைல தனியா இருக்க பயமா இருக்கு.”

“ஒண்ணும் பயப்படாத. நா இருக்கேன். தாள்ப்பாள கெட்டிமா போட்டுட்டுத் தூங்கு. எங்க அப்பாரு அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுடறேன்.”

கொஞ்ச நாட்களாக அர்ச்சுனனைக் காணவில்லை. அதனால் வயதான கிழவன் மாணிக்கத்தை காவலுக்கு வைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் – திடீரென்று அவளது பின்புறம் யாரோ நிற்பது போன்ற பிரமை. திரும்பிப் பார்த்தாள்… அர்ச்சுனன்!

அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. வெட்ட வெளியைப் பார்த்தவாறு பாடினாள்.

“தண்ணி மேல போனாலும்
குடிக்கத் தண்ணி கிடைக்கல
அதுபோல
பக்கத்துலையே பாசமா இருந்தாலும்
பளகறதுக்கு ஆசையே இல்ல
நெஞ்சமெல்லாம் நீ இருக்கேன்னு
நெக்குருகி நான் நின்னாலும்
நெடுந்தூரம் போன மச்சானுக்கு
படுந்துயரம் தானா தெரியலையே
ஊரு சனம் என்ன சொல்லுமோ
பாருன்னு என்னைப் பரிதவிக்க
வெச்ச மச்சான்!
வெளியத்தான் கழுகுகள்னா
உள்ளேயும் கிழங்கழுகு
பாழுங் கெணத்துல நான்
விளுந்தப் பின்னாடி நீ
ஓடி வந்தா என்னா…
நடந்துவந்தா என்னா…
இருக்கப் போவது என்னோட
உசிரில்லா ஒடம்பு தானே…
என்னத்த செய்யப் போற?”

அவனுக்கு சிரிப்பு வந்தது. என்றாலும் அவளது பாட்டின் கனம் தெரிந்து அவளைச் சாடுகிறான்.

“அடிக் கிறுக்கி
அழிச்சாட்டிக் கிறுக்கி
ஆலமரத்தைச் சுத்திப்புட்டு
அடிவயத்தைத் தொடறவளே
அவசரம் ஏதுக்கடி
ஆயாளோடப் பேத்தியே
ஒன்ன நெனச்சியே
ஓடி ஓடி ஒளைக்கிறேன்
பின்ன எதுக்குடி
பிச்சிப் பிச்சித் திங்கறே
மச்சான் நான் வருவேன்
மருக்கொளுந்து வாசனையோட
மனம் மகிழ சனம்பார்க்க
ஊரு கூட்டி ஓலகங் கூட்டி
ஒன்ன என்னவளாக்கி
தென்னைப் புன்னை மரத்தூடே ஓடி
என்னை ஒனக்கே கொடுப்பேன்
அதுவரை மாமனுக்காக
காத்திரு மாமரத்துக் கிளியே
மச்சான் இதோ வந்துட்டேன்
அச்சாரம் போடவே
ஆடிக் களிச்சிரு
அரச மரத்தடியில்
முரசு கொட்டி ஒன்ன
முல்லை மலர் மாலையோட
மூச்சுத் திணற திணற
கட்டி அணைப்பேன்
கட்டி முத்தம் தருவேன்
உயிர் பொழச்சி இரடி
உன்மத்தம் புடிச்சவளே
ஓடி வாரேன் இதோ!”

இப்படிப் பாடியவன் “இதோ பார்… திரும்பவும் நான் படகு வாங்கற விஷயமா நாகப்பட்டினம் போற சோலி இருக்கு. சட்டுன்னு வந்துடுவேன். காவலுக்குத் தான் கிழவன் இருக்கான்லே…” சொல்லியவன் அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான்.

…………………………………………………………………………….

“எலேய்… அர்ச்சுனா! ஊருக்கு எப்படா வந்தே?” கேட்டது இன்னொரு மீன் பிடிக்காரன்.

“இப்பத்தேன் வந்தேன்… என்னோட சின்னப்பொண்ணு எப்டி இருக்கா?” இப்படி அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே…

“அடேய் அர்ச்சுனா… அங்கன என்னடா சோலி? ஒன்னோட சின்னப்பொண்ணு காவக்கார கெழவன போட்டுத் தள்ளிட்டா!”

“அய்யோ… அம்மாடீ!” என்றவன் காற்றைவிட வேகமாகச் சென்று அவள் குடிசையை அடைந்தான்.

ஊர் மக்கள் கூடியிருந்தனர்.

காவல்கார கிழவன் மாணிக்கம் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான்.

உடம்பெல்லாம் ரத்தம் தோய சின்னப்பொண்ணு காளி மாதிரி ஆவேசத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

அர்ச்சுனனைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதாள்.

அவள் சொல்லாமலேயே காமக்கிழவனை அவள் வெட்டிய காரணம் புரிந்தது.

பதட்டத்துடன் அர்ச்சுனன் அவளது கையிலுள்ள வெட்டுக் கத்தியை வாங்கிக் கொண்டான்.

“பயப்படாத… இந்தக் கொலையை நீ செய்யலப் புள்ள. நான் செஞ்சிட்டேன்னு போலீஸ் கிட்டச் சொல்றேன்.”

“இல்ல மச்சான்… நான் செஞ்சேன்னு தான் சொல்வேன்.”

“புத்திக் கெட்டுப் போச்சா ஒனக்கு?”

“இல்ல மச்சான்… நீ சொல்றாமாதிரியான வெஷயத்தை சினிமா டிராமாவிலே எல்லாம் பாத்திருக்கேன். ஆனா நா ஏன் நானே செஞ்சதா சொல்லணும்னு நெனக்கறேன்னு தெரியுமா? இந்தா மாதிரியான ஆம்பளைங்கள தயவு தாட்சணியம் இல்லாம பொம்பளைங்க என்ன மாதிரி தகிரியமா வெட்டிச் சாக்கோணம் மச்சான். அப்போதான் காமந்தக்காரனுங்க பயப்படுவானுங்க.”

“அடியே… மதி கெட்டவளே! ஒன்னப் பாத்துதான் பொம்பளைங்க இந்தா மாதிரி செய்வாங்கன்னு நெனச்சுக்காத… மானத்துக்குப் பங்கம் வர்ற போது சாதுவா இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் பொங்கி எளுந்துடுவா.” என்றவன் யாரும் எதிர்பாராத நிலையில் வெட்டுக்கத்தியை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் உடலில் செலுத்தினான்.

“இதோ… இப்போ நானும்தான் அவனை வெட்டிப்புட்டேன்!”

சின்னப்பொண்ணு கதறியவாறு… “ஐயோ, நீ ஜெயிலுக்குப் போனபின்னால பொம்பளச் சிறுக்கி எனக்கு என்னய்யா சோலி இருக்கு இந்த ஒலகத்துல?”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர்த் தலையாரி கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ சமிக்ஞையுடன் பேசினார். எல்லோரும் அவர் சொல்வதற்கு சரி… சரி… எனத் தலையாட்டினர்.

“மாணிக்கம் கெட்டவன்தான்னாலும் அவன் உயிர் துடிக்க நாம பாத்துக்கிட்டிருக்க முடியாது.” என்று சொல்லியவாறு தலையாரி வெட்டுக் கத்தியை எடுத்து இன்னும் கூட உயிர் போகாமலிருந்த மாணிக்கத்தின் உடலை வெட்ட முற்பட, அப்போது குறுக்கிட்ட ஒரு இளைஞன் “ஐயா, எப்ப பதவி கிடைக்கும்… கிராமத்தையே கொள்ளை அடிச்சுடலாம்னு நினைக்கிறவங்க மத்தியில நீங்க பொடம் போட்ட தங்கமா எங்களுக்குக் கிடைச்சிருக்கீங்க. இந்த கிராமத்துக்கு நீங்க வேணுமய்யா… இதோ நாங்க இப்போ ஒவ்வொருத்தரும் கொண்டாந்திருக்கிற வெட்டருவாளைக் கொண்டு மாணிக்கத்தின் உடலை கூறு போட்டுடறோம்…” என வேறு சில இளைஞர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர்.

துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தின் உயிர் மொத்தமாக பிரிந்தது.

இப்போது தலையாரி பேசினார். “அர்ச்சுனா… நீயும் சரி, சின்னப்பொண்ணும் சரி… யாரும் இந்தக் கொலைய செய்யல… ஊரே செஞ்சிருக்கு. வள்ளுவச் சாமியே நம்ப பாட்டன் பூட்டன் காலத்துலேயே சொல்லிப்புட்டாரு… நல்ல காரியத்துக்கு பொய் சொன்னா தப்பில்லையாம். இப்ப இல்லனாலும் சடுதியில நீங்க ரெண்டுபேரும் கல்லாணம் கட்டி வாளறதுக்கு நம்ம ஊரு சனங்க மட்டுமில்ல… நம்ம ஊரு குலதெய்வம் மகமாயியும் உங்கள காப்பாத்துவா…”

அர்ச்சுனன் ஆதுரத்துடன் சின்னப்பொண்ணுவின் கையைப் பிடித்து நிற்க… போலீஸ் வேன் வந்து நின்றது!

தத்துப் பிள்ளைகள்

பத்து மாதம் சுமக்காத
தத்துப் பிள்ளை எனினும்…
பார்த்துப் பார்த்து வளர்த்து
பூச்சு கடிச்சுதா புழு கடிச்சுதா
கொசு கடிச்சுதா வண்டு கடிச்சுதான்னு,
வாஞ்சையா வாளமீனும் வஞ்சிரமும்
வெராலும் வக்கணையா வடிச்சுப் போட்டு,
எம்புள்ள எம்புள்ளன்னு
எட்டு உலகம் கேக்க…
தத்துப் பிள்ளை
சொந்தப் பிள்ளைப் போல்
அம்மா! அப்பா!ன்னு
அழைப்பதைப் பார்த்து
புளகாங்கிதப் பூரிப்புடன்
குதூகலித்து கும்மாளமிட்டு
இன்புற்று அன்புற்று
அனைத்தும்
இழந்து துறந்து
இனிதே வளர்த்த
சிறார்…
சீறுங்காளை
அல்லது
கன்னிப் பெண்ணாய்
ஓங்கி வளர்ந்து
ஒய்யாரமாய் நிற்க…
இளங்காளை எனில்
கடிமணம் செய்து களிக்க…
கன்னி எனில்
கன்னிகாதானமாய்,
ஓராயிரங்களுடன்
நகை நட்டு சீர் என
வகை வகையாய் செய்து
வாலிபன் கையில் ஒப்படைத்து…
வாழ்வதைப் பார்த்துப்
பொங்கிப் பூரிக்கும்
தத்தெடுத்தத்
தாயினும் தந்தையினும்…
இந்தத் தரணியில்
யார் உயர்ந்தார்?

அவர்கள் அழுகிறார்கள்…

old srilankan photo
Photo by DFAT photo library
பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த சிசுவைப்
பலிகொடுத்தத் தாயும்…
சிறுவன் சிறுமியைப்
பலிகொடுத்தத் தாயும்…
சிங்க நடையுடன்
சீறிப் பாய்ந்த
இளைஞனை இளம் பலி
கொடுத்தத் தாயும்…
கல்யாணம் ஆகாத
கன்னிப் பெண்ணை
காவு கொடுத்தத் தாயும்…
கதறக் கதற
கற்புச் சீரழிக்கப்பட்ட
வயதானத் தாயும்…
உள்ளம் துடிக்க
உயிர் துடிக்க
கண் முன்னே கணவன் களபலி ஆக
அத்துணைத் தாயரும்
ஆற்றாது அழுத கண்ணீர்
மொத்தமும்…
அலைகடலென ஆர்ப்பரித்து
அவனியைச் சூழ்ந்து
அல்லலைத் தரும் போது
நாம் அதில் மிதப்போமா?
அல்லது…
மடிந்து மண்ணாகிப் போவோமா?

கடவுளே கடல் கடந்து ஓடிவிட்டான்!

தந்தையை இழந்தோம் தவித்தோம்
தாயை இழந்தோம் துடித்தோம்
அண்ணனை இழந்தோம் அவதியுற்றோம்
அக்காளை இழந்தோம் அலறினோம்
தங்கையை இழந்தோம் தள்ளாடினோம்
தம்பியை இழந்தோம் தடுமாறினோம்
அப்படியும்…
தாய் நாட்டை மீட்க முடியவில்லையே…
கண்ணிழந்து காலிழந்து
கையிழந்து கையறு நிலையில்
நிற்கும் எங்களை
இங்கிருக்கும் எம் மனிதர்களே
காப்பாற்றவில்லையெனில்
எங்கோ இருக்கும் கடவுளா
காப்பாற்றப் போகிறான்?
அரசுக் கட்டிலில்
இருந்த கலைஞர்கள்
கொலைஞர்களாக மாறியதால்
எங்கள் இனம் பூண்டோடு
ஒழிக்கப்பட்டுவிட்டதே!
பரவாயில்லையா?
ஆனாலும்…
நீங்கள் நன்றாக இருக்க
ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்.
ஆனால் ஒன்று…
எரிதணலில் வீழ்ந்த
எங்களையே காப்பாற்ற
அவன்
வரவில்லை…
உங்களை மட்டும் காப்பாற்ற
வரவா போகிறான்?
அவன் கடல் கடந்து…
ஓடிவிட்டான்!
ஆனாலும்…
நாங்கள் சத்தியமாக
உங்களுக்காக
வேண்டிக்கொள்கிறோம்!

எங்கள் கற்பு எங்கே?

கற்புடைப் பெண்டிர்
பெய்யெனப் பெய்யுமாம் மழை!
எம் நாட்டுப் பெண்டிர்
பெய்யெனச் சொன்னால் பெய்யாதா?
ஏன்?
எங்கள் கற்பு கொள்ளையடிக்கப்பட்ட
இலங்கை ராணுவத்திடம் இருக்கிறதே அதனாலா?
வீரத் தமிழன்
எங்கள் கற்பு பறிபோக
ஈனத் தமிழர்கள் ஆனார்களே…
ஏன்?
பெற்ற வயிறு எரிய
பிள்ளையைப் பறிகொடுத்த
தந்தையும் தாயும்
சகோதர சகோதரிகள் சாக
சந்தோஷத்தை இழந்த குடும்பமும்
விடும் சாபங்கள்
இலங்கையைத் தாண்டி
சுனாமியாக சுழற்றியடிக்க
ஆயிரம் மைல் வேகத்தில்
அலறியடிக்க வருகிறதே
அப்போது…
நாம் என்ன செய்யப் போகிறோம்?
மனிதர்களே!
மனிதர்களாக மாறுங்கள்…
அவர்கள்
உமது பாட்டன், பூட்டன்
சொத்துக்களையா கேட்கிறார்கள்?
அவர்தம் தாய் மண்ணைத்தானே?
சுதந்திரத்தைத் தானே?
அதைத் தர
கையில் என்ன சுளுக்கா?
சுளுக்கெடுத்து
சுபம் கொடுப்போம்!

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தது…

சென்ட்ரல் ஸ்டேஷன்.

லண்டனில் இருந்து தோழி சாந்தா சென்னை வந்திருந்தாள்.

புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் தீவிர பக்தையான சாந்தா, பாபாவின் பிறந்தநாளன்று பெங்களூருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

சென்னை வரும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டில் தங்குவாள்.

அவளை ஷதாப்தி ரயிலில் ஏற்ற விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் நானும் எனது பெரிய பெண் கவிதாவும் சென்ட்ரலுக்குச் சென்றோம்.

அங்கே பிளாட்ஃபாரத்தில் இருந்த பெஞ்சில் நல்ல முழு மேக்கப்புடன் சிவந்த நிறமுள்ள வட இந்தியப் பெண்மணி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் கூட வாட்டசாட்டமாக அவரது கணவரும் இருந்தார்.

இருவரும் மாற்றி மாற்றி இந்தியாவில் உள்ளக் குறைகளைச் சுட்டிக் காட்டி ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

திட்டுவது சரி… ஆனால் ஏன் மெனக்கெட்டு உணர்ச்சிகளைக் கொட்டிப் பேசி உடம்பைக் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

ரொம்ப டென்ஷனாக இருந்தார்கள்.

இடையில் அவரது கணவர் ஏதோ வேலையாக எழுந்து போனார்.

ரயில் வருவதற்கு நிறைய நேரம் இருந்ததனாலும் ஏற்கெனவே காலில் சுளுக்குடன் முந்தினநாள் காய்ச்சலும் இருந்ததால் அந்தப் பெஞ்சில் உட்காரலாம் என்று நான் போனேன்.

உட்கார்ந்தும் விட்டேன்!

ஏற்கெனவே உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சத்தமாக வசை பாட ஆரம்பித்தார். “போன என் கணவர் வந்தால் உட்கார வேண்டும். அதுமட்டுமல்ல, என் பையனும் இதோ வந்திடுவான். அதுக்காகவே நான் இந்த இடத்தைப் புடிச்சி வெச்சிருக்கேன்… உட்காராதீங்க… எழுங்க…”

இப்படி அவர் சொன்னதும் என் பெண் கவிதா “பாருங்க… எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல, இப்ப நீங்க மட்டும் தானே உட்கார்ந்து இருக்கீங்க… கொஞ்ச நேரம் உட்கார விடுங்க” என்றாள்.

“உங்களுக்கு நான் சொல்றது புரியலையா? இப்பவே என் பையனும் கணவனும் வந்தா எங்கே உட்காருவாங்க?”

நான் அப்போது குறுக்கிட்டு, “கவலையேபடாதீங்க… அவங்க வந்ததும் கண்டிப்பா நான் எழுந்திடறேன்” என்றேன்.

ஊஹூம்… அந்த அம்மா நாங்கள் சொன்னதையே காதில் போட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டே இருந்தார். அதனாலேயே நானும் விடாப்பிடியாக உடக்கார்ந்துக் கொண்டிருந்தேன்.

எங்கோ சென்ற அவரது கணவரும் பையனும் திரும்பி வந்தார்கள்.

நான் எழுந்துக் கொண்டேன்.

அப்போது பார்த்து ரயில் வந்து பிளாட்ஃபாரத்தில் நின்றது.

திடீரென்று ஓர் அதிர்ச்சி…!

ரயில் பெட்டியில் ஏறப்போன அந்த வட இந்தியப் பெண்மணி மயங்கிக் கீழே விழுந்து விட்டார்!

இதைப் பார்த்த நாங்களும் அதிர்ச்சியுற்று உடனே செயல்பட ஆரம்பித்தோம். என் பெண் கவிதா ஓடிப்போய் உடனே அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து “இதோ பாருங்கம்மா… ஒண்ணும் பதட்டப்படாதீங்க… அப்படியே மூச்சை நல்லா உள்ளிழுத்து மெல்ல நிதானமா வெளியே விடுங்க” என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போதே நான் “கவி! நான் போய் உடனே டாக்டர கூட்டிட்டு வரேன். நீயும் சாந்தா ஆன்ட்டியும் அந்த அம்மாளைக் கவனிச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகளி’ல் வந்த நடிகர் சந்திரசேகரைப் போல் காலில் முந்தின நாள் இருந்த சுளுக்கின் காரணமாக நான் ‘லொடுக்குப் பாண்டி’ நிலையில் இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது…!

நடக்கிறேன்… நடக்கிறேன்… (விந்தி… விந்திதான்!) சென்ட்ரலின் முன்பகுதி வரவே மாட்டேன் என்கிறது! அப்போதுதான் பிளாட்ஃபாரம் ரொம்ப நீ…ளம் என்பது புரிந்தது. எரிச்சலாக இருந்தது.

என்ன அவசரமாக நடந்தாலும் தூரம் விடியவில்லை.

எட்டி… எட்டிக் காலை வைத்தால் முட்டி வலிக்கிறது.

அந்த அம்மாளின் நிலையை நினைத்தாலோ பாவமாக இருந்தது.

உலகத்தில் உள்ள கடவுளரை எல்லாம் (அவர்கள் என்னென்ன வேலையில் பிசியாக இருந்தார்களோ தெரியாது!) அந்த அம்மாளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொண்டு ஒரு வழியாக அவசர உதவிக்காக இருந்த டாக்டரின் அறையை அடைந்தேன்.

அறையில் இருந்தவரிடம் நான் பதற்றமாக “ஒரு அம்மா மயக்கமா கீழே விழுந்துட்டாங்க… டாக்டர் எங்கே? சீக்கிரமா கூப்பிடுங்க. ரொம்ப அவசரம்” என்றேன்.

மாடிக்குச் சென்றுவிட்டுக் கீழே வந்தவர் சர்வ சாதாரணமாக… “டாக்டர்லாம் வரமுடியாது. வேணும்னா நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க” என்றாரே பார்க்கலாம்!

ஓர் உயிருக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை சிறிது கூட இல்லாமல், அபாய நேரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் சாவதானமாக பேசுகின்ற ஆளிடம் நானும் அதேபோல் நிதானமாகப் பேசிக்கொண்டு இருக்க முடியாது என்பதால்,”இதோ பாருங்க. நான் ஒரு பத்திரிகைக்காரி. போய் உங்க டாக்டர் கிட்ட கேளுங்க… மயக்கமா விழுந்து கிடக்கிற ஒருத்தர நீங்க இருக்கிற இடத்துக்கு எப்படி கூட்டிட்டு வரமுடியும்னு? இப்போ டாக்டரால வரமுடியுமா முடியாதா? அந்த அம்மாளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா… இந்த விஷயத்தை அப்படியே விடமாட்டேன். சீக்கிரம் மாடிக்குப் போய் டாக்டர கூட்டிட்டு வாங்க”.

நான் போட்ட சத்தத்திலும் பத்திரிகைக்காரி என்ற வார்த்தையையும் கேட்டு அடுத்த நிமிடம் டாக்டர் தட… தடவென்று மேலேயிருந்து கீழே இறங்கி ஓடி வந்தார்.

வேக… வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

டாக்டரும் கூடவே உதவிக்கு வந்த ஆளும் என்னைத் தாண்டி வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.

லொடுக்குப் பாண்டியான நான் என்ன முயற்சி செய்தும் அவர்களுடன் சமமாக நடக்க முடியவில்லை!

மனதில் இருந்த வேகத்தை உடம்பில் எவ்வளவு கூட்டிப் பார்த்தும் என் வேகம் என்னவோ ஆமையளவுதான்!

அவர்களுக்கும் எனக்கும் ஒரு நூறடி வித்தியாசம் இருந்துகொண்டே இருந்தது.

நாங்கள் செல்வதற்குள் ரயில் பெட்டியில் மயக்கமுற்ற பெண்மணியின் குடும்பத்தாருடன் என் பெண் கவிதா பேசிக்கொண்டிருந்தாள்.

டாக்டர் அந்த அம்மாளைப் பரிசோதனை செய்தார். “ஒன்றும் பயப்பட வேண்டாம். இப்போது எல்லாம் நார்மல் தான். பெங்களூர் போனதும் டாக்டரிடம் சென்று பீ.பி., சர்க்கரை இதெல்லாம் செக் செய்துக் கொள்ளுங்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை.” என்றதும் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.

நல்ல உறக்கத்திலிருந்த டாக்டர் ஏற்கெனவே கூப்பிட்டவுடன் தான் வரவில்லையே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு நன்றி சொல்லியபோது ‘அவசர காலத்தில் யார் என்ற பேதமில்லாமல் செயல்படவேண்டும்’ என்பதை நாசுக்காகவே சொன்னேன். முற்றிலும் உணர்ந்தவர் போல் கேட்டுக்கொண்டார்.

நான் அடுத்தப் பெட்டியில் இருந்த டி.டி.இ.யை அழைத்து வந்து வடநாட்டுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டி அவருக்கு நேர்ந்ததைச் சொல்லி, “தயவு செய்து இந்தப் பெட்டியிலோ அல்லது வேறு எந்தப் பெட்டியிலோ டாக்டர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உங்கள் சார்ட்டில் பார்த்துத் தப்பித் தவறி இந்த அம்மாளுக்குத் திரும்பவும் இதுமாதிரி ஏற்பட்டால் உடனே கவனியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தேன். டி.டி.இ. நல்ல மனிதர். “கவலையேபடாதீங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்தீங்க… இனிமேல் நாங்க பார்த்துக்கறோம். அதுவும் இல்லாம எந்த உதவின்னாலும் எங்கிட்ட கேக்கச் சொல்லுங்க. நான் போய் டாக்டர் யாராவது இருக்காங்களா என்று பார்த்து வைக்கிறேன்” என்றாரே பார்க்கலாம்!

எல்லாம் முடிந்தவுடன்… அந்த வடநாட்டுப் பெண்மணி, அவரது கணவர், மகன் மூவரும் நன்றிப்பெருக்குடன் என் பெண் கவிதா மற்றும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்க “ஆப் மாஃப் கர்தீஜியே… ஆப் மாஃப் கர்தீஜியே… என்றவர்கள் தொடர்ந்து… “தப்பா நினச்சுக்காதீங்க… நாங்க தப்பு செஞ்சிட்டோம். அவசரத்துக்கு நீங்க இந்த அளவு உதவி செய்வீங்கன்னு நாங்க நினைக்கலை” என்று ஆங்கிலத்தில் கூறியபோது, நான் கூறினேன், “பரவாயில்லை. உலகத்துல நமதுன்னு நினைக்கிற குழந்தைகள், பெற்றோர், வீடு, சொத்து, சுகம்னு எதுவுமே நம்ம கிட்ட கடைசி வரைக்கும் இருக்கப் போவதில்லை. இதுல நடுவுல வந்து போகிற ரயிலோ, பஸ்ஸோ, நாம உட்கார்ந்திருந்த பெஞ்சோ மட்டும் நிரந்திரமா என்ன? நிச்சயமா இல்ல… முடிந்த வரைக்கும் நாம மத்தவங்களுக்கு உதவியா இருந்தா எப்போதும் நல்லதே நடக்கும். ஒங்களையும் தப்பு சொல்ல முடியாது. ஒங்களுக்கும்… ஒடம்பு சரியில்லை போலிருக்கு… பரவாயில்லை, ஒடம்பைப் பார்த்துக்கோங்க.”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தோழி சாந்தா, ‘அப்பாடா… எல்லாம் நல்லபடியாக முடிந்தது’ என்ற அர்த்தத்தில் பெருமூச்சுடன் கையசைக்க, ஷதாப்தி எக்ஸ்பிரஸ் புஸ்… புஸ்… என்று புகையின்றி ஸ்டேஷனை விட்டுக் கிளம்பியது.

நமக்கும் யாரிடமும் பகையில்லை!

பின் குறிப்பு: இதைப் படித்துவிட்டு வட இந்திய மக்களே இப்படித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனெனில், பிரயாணங்களில் நாம் கண் கூடாகப் பார்க்கிறோம்… தென் இந்தியர்கள் கூட டிக்கட் வாங்கிவிட்டாலே ரயிலே அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல் நினைத்துச் செயல்படுவார்கள். மனிதாபிமானம் ஈவு இரக்கம் இல்லாமல் நடப்பதைப் பார்க்கும் போது சில சமயங்களில் வட இந்தியர்களே பரவாயில்லையோ என்று தோன்றும். பொதுவாக நாம் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்!

உபதேசங்கள்

நாட்டில் உபதேசம்
வீட்டில் உபதேசம்
பள்ளியில் உபதேசம்
கல்லூரியில் உபதேசம்
கடைத்தெருவில் உபதேசம்
கண்டகண்ட இடங்களில் உபதேசம்
ஊரைவிட்டு ஓடிப் போய்விடலாம்
எனில் இயலவில்லை.
ஏன்?
கேட்ட உபதேசம் தடுக்கிறதே!
Page 1 of 512345