இப்போது காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் எளிமையான வாழ்க்கையைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
ஆனால் இப்போது ஆடம்பரம் அதிகமாகிவிட்டது.
ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. உண்மைதான். ஆனால் அதற்காக… தொலக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாகனம், எல்லாமே ‘பெரியதாக’ அதிக விலை உயர்ந்ததாக வாங்கவேண்டும் என்று நினைக்கலாமா?
தெரிந்தவர், உறவினர், தோழர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே போட்டிபோட்டுக்கொண்டு வாங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
செல்வேந்திரர்கள் வாங்கி விட்டார்கள் என்பதற்காக, கையேந்திரர்கள் வாங்க நினைப்பது தவறில்லையா?
கடனை வாங்கியாவது ஒரு பொருளை அடம் பிடித்து வாங்குவதன் விளைவு என்ன ஆகும்? ஒன்றுமில்லை… நீங்கள் கடனாளியாக இருப்பீர்கள்!
வரவுக்கேற்ற செலவு செய்யாமல் எல்லை மீறியதன் விளைவால் தெருவில் நின்றவர்கள் பல பேர்.
ஊர்ப் பெருமைக்காக ஊரையே திருமணத்திற்கு அழைத்து ‘தாம் தூம்’ என்று செலவு செய்துவிட்டுப் பிறகு செல்லாக்காசாகி, கடனாளியானவுடன் ஊர் முகத்தில் விழிக்க முடியாமல் முகத்துக்கு முக்காடு போட்டுக்கொண்டு போவதைப் பார்த்திருக்கின்றேன்…
கடன் வாங்கிக் கையில் காசிருக்கின்ற வரை வீடே கல்யாணக்களைதான்! கடன்காரன் வந்து காசு கேட்டு நெருக்கும்போது கவலை மனிதனை காவு கொள்கிறது.
கடன்காரனின் சுடு சொற்களால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் கதைகளைக் கேட்டதன் பின்பும் திருந்தாதவர்கள் திருந்தவேண்டும் என்பதற்காக திரும்பித் திரும்பிக் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்…
எந்தக் காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காதீர்கள்.
திருப்பிக் கொடுக்கின்ற சக்தி இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.
விரும்பி வாங்குகின்ற பணத்தைத் திருப்பி அளித்தால் தானே திரும்பி வராத உலகத்திற்கு போனாலும் நம் சந்ததிகள் நம்மை வாழ்த்தும்.
உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கடனைச் சேர்த்து அவர்களையும் கடனாளியாக்கிவிடாதீர்கள்.
1950-60களில் சென்னைக்குப் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைப்பது என்பது மிகப் பெருமையாகக் கருதப்பட்டக் காலம்!
என் மாமாக்களில் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகளில் இருவரை சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.
ஊரிலேயே பெரிய வீடாகக் கட்ட வேண்டுமென்று சக்திக்கு மீறி பெரிய பங்களா ஒன்றைக் கட்டினார். கடனை அடைக்க வேண்டிய நேரத்தில் காசு வரக்கூடிய வாசற்கதவு அழுத்தமாக சாத்திக்கொண்டது! இதற்கிடையில் இரண்டாவது பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. பங்களாவை விற்றார். பிள்ளைகள் ஆளுக்கொரு வேலையைத் தேடி சென்னைக்குச் சென்றார்கள். சிலருக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையைச் செய்தார்கள்.
மாமா சிங்கம் போல் வாழ்ந்தவர்… சிறுத்துப் போனார். ‘சீற’வேண்டிய சிங்கம் ‘வேற’மாதிரிப் போனது. பிள்ளைகள் இவரைச் சார்ந்து நின்றதுபோய், பிள்ளைகளைச் சார்ந்து இவர் நின்ற நிலையில் சுயம் இழந்து, வெந்து, நொந்து, நூலாகி இறந்து போனார்.
உறவினர்கள் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.
ஏன்?
தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கலாம். உறவினர்களை அவர் மதியாமல் இருந்திருக்கலாம்… சேர்க்காமல் இருந்திருக்கலாம்… எவ்வளவோ குறைகள் இருந்திருக்கலாம்… குறையில்லா மனிதர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. உறவினர்களுடன் உறவு இல்லாத வாழ்க்கை வீண்.
எந்த அளவுக்கு இராவணன் வருத்தப்பட்டிருந்தால் ‘கடன் பட்டாற் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் எழுதியிருப்பார். அதே நிலையில் இருந்த என் மாமாவுக்கு உறவினர் செய்யத் தவறியது என்ன தெரியுமா? ஆளுக்குக் கொஞ்சம் முதல் போட்டு அவரது தொழிலுக்கு உதவி செய்திருந்தால் அந்தக் குடும்பமும் உருப்பட்டிருக்கும்… செய்த உறவினர்களுக்கும் புண்ணியம் சேர்ந்திருக்கும்…
அப்படியும் அவர் எக்கேடுகெட்டால் எங்களுக்கு என்ன, அவருக்கு ஏன் நாங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் இன்னொரு வழியில் உதவியிருக்கலாம்… திருமணத்திற்கு மொய் எழுதுவதுபோல் பணத்தை மொத்தமாக வட்டியில்லாமல் கொடுத்துவிட்டு, அவருக்கு எப்போது முடியுமோ அப்போது திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் அல்லது மாதம் இவ்வளவு பணம் என்று கொடுக்கும்படியும் கேட்டு வாங்கியிருக்கலாம். அப்படியும் அவர் திருப்பி அளிக்க மாட்டார் என்று தோன்றினால் ‘காந்தி’ கணக்கில் எழுதி விட்டிருக்கலாம்.
வசதியானவர்கள் தர்மம் செய்வது தவறா?
ஒருவரின் வயதான காலத்தில் ஒன்றுமே இல்லாமல் நிற்கும்போது முடிந்தவரை உதவவேண்டும். அவரது பழைய வாழ்க்கையைக் கிளறி குற்றங்களைக் கண்டுபிடிப்பதைவிட கை தூக்கி விட்டால் போகின்ற இடத்திற்குப் புண்ணியமாக போகமுடியும்.
எதுவாகினும் “கஞ்சி கால்வயிறு குடித்தாலும் பரவாயில்லை, கடனில்லாத வாழ்க்கை போதும்!” என்ற தெளிவும், மனவுறுதியும் இருந்தால் அதுவே நிம்மதி!