கூடும் வீடும்

சிறுகதை

Bird-Nest

சாலையின் வெகு தூரத்தில் ஓர் உருவம் மெல்ல… மிக மெல்ல… வந்துகொண்டிருந்தது.

அருகே வரவரத்தான் தெரிந்தது, ஒரு முதியவர் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார்.

கையில் ஒரு பை. அருகே சென்று பார்த்தேன். பையில் காய்கறிகள். கூடவே மாம்பழம் இரண்டு.

சரக்… சரக்கென்று கார்களும் பஸ்களும் செல்கின்ற இந்த நகரத்தில், அதுவும் காட்டுத்தீயாக கொளுத்துகின்ற இந்த வெயிலில் இந்த முதியவருக்கு அப்படி என்ன தேவை… இதையெல்லாம் வாங்கவேண்டுமென்று?

விழப்போன அவரைச் சட்டென்று பிடித்தவாறு “எங்க போகணும்னு சொல்லுங்க… உங்க வீட்டுக்குக் கொண்டுபோய் நானே விட்டுட்றேன்.”

“வீடா? அது வீடில்லே, நாங்க வசிக்கும் கூடு.”

“சரி… சரி… சிறிசோ பெரிசோ, வாங்க போகலாம்… ஆமா இப்படித் தனியா கடைக்கு வந்திருக்கீங்களே, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?”

“ஏன் இல்லாம? நாலு பிள்ளைகள். ரெண்டு ஆண். ரெண்டு பெண்.”

“எங்க இருக்காங்க?”

“பையங்க ரெண்டுபேரும் இங்கதான் சென்னையில இருக்காங்க. பொண்ணுங்க ரெண்டு பேருமே பெங்களூர்ல இருக்காங்க.”

“ஏன், அவங்க வீட்ல நீங்க இருக்கலாமே?”

“பெரிய பையன் எஞ்ஜினீயர்… பெரீசா அரண்மனை மாதிரி வீடு கட்டி இருக்கான். என்ன இழவோ, எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பாத்ரூம் சரியா யூஸ் பண்ணத் தெரியலையாம்… சாப்பாட்ட சிந்தாம சாப்பிடத் தெரியலையாம்… சோஃபாவுல உக்காந்தா அங்கங்க திட்டு திட்டா அழுக்காயிடுதாம்… இப்படி நெறைய… குறைய எங்க மருமக சொல்லிக்கிட்டே இருந்தா. நீங்களும் சரி, உங்க வீடும் சரின்னு எங்க கூட்டுக்கே வந்துட்டோம்.”

அவரே தொடர்ந்தார்… “இப்படி ஆயிடுச்சேன்னு கேள்விப்பட்டு ரெண்டாவது மகன் ஓடோடி வந்து எங்கள அவனோட வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனான். ஒரு ஆறு மாசம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் தான் அவதி ஆரம்பமாச்சு. பெரிய மகனே பரவாயில்லை. அவனோட மனைவி தான் எங்கள வறுசெட்டியில் போட்டு வறுத்தா… ஆனா இங்க… ரெண்டாவது மகனும் அவனது மனைவியும் கொஞ்சம்கொஞ்சமா குறை சொல்ல ஆரம்பிச்சாங்க… ஒரு நாள் வந்து, “அப்பா! நானும் உங்க மருமகளும் ஒரு ஆறு மாசம் அமெரிக்கா, லண்டன் என்று சுத்திப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம். அதுவரை நீங்க போய் நம்ம வீட்லயே தங்கி இருங்க. நாங்க வந்த உடனே உங்கள அழைச்சுக்கறோம்!” என்றான்.

“ஓ, அதுக்கென்னப்பா, அப்படியே செய்யுங்க” என்று மனைவியை அழைத்துக்கொண்டு புறப்படும்போது, என் மனைவி… “கண்ணா! மறக்காம போற இடத்துல எல்லாம் போட்டோ புடிச்சுனு வா… பாக்கறோம். எப்படா எங்களுக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து குடுக்கப்போறே?” என்றவளை, “சரி… சரி வாடி லூசு” என்று வலுக்கட்டாயமாகத் திரும்பவும் கூட்டுக்கு அழைத்து வந்தேன். பாவம் எம்பொண்டாட்டி. புள்ள சொல்றத நம்பிக்கிட்டிருக்கா. அவங்க அமெரிக்காவும் போகல, லண்டனும் போகல. இங்கே இருக்கிற அவனோட மாமியார் வீட்டுக்குத் தான் போயிருக்காங்க என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதோ ஆறு மாசத்துக்கும் மேலேயே ஆச்சு… இன்னும் வர்றான், எங்களை அழைச்சுட்டுப் போக.”

“சரிங்க பெரியவரே! புள்ளைங்க தான் உங்களை வெச்சுக்கலே, ரெண்டு பொண்ணுங்களுமா வெச்சிக்க மாட்டேங்கிறாங்க…”

“அதை ஏன் கேக்கறீங்க… பெரிய பொண்ணு எங்கிட்ட ‘அப்பா! பெங்களூரு ரொம்பக் குளிரு ஊரு… அதனால உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்காது’ ன்னு சொல்லிட்டா… ரெண்டாவது பொண்ணு ‘கூட மாமியாரும் மாமனாரும் இருக்கிறதுனால ஒங்கள எங்க வீட்டுல சீராட முடியல… இன்னுங் கொஞ்ச காலந்தாம்ப்பா… அவங்க ரெண்டு பேரும் சீக்கிரமே மண்டையப் போட்டதும் உங்களை’ ன்னு அவ சொன்ன போதே என் மனம் பதறுச்சு… ‘வேணாம்மா, அவங்க செத்தாதான் எங்களுக்கு விடிவுன்னு சொல்றது தப்புமா… எங்களுக்கென்ன ராசா ராணி மாதிரி கை கால் நல்லா இருக்கு… பார்த்துப்போம்… அவங்கள மனங்கோணாம கவனிம்மா’ன்னு சொல்லிட்டு எங்க கூட்டுலேயே என் மனைவியோடு இருக்கிறேன். இதுல யாரக் குறை சொல்ல முடியும்?”

ஏதோ ஓர் இனம் புரியாத வேதனை என் நெஞ்சைப் புரட்டிப் போட்டது.

பெரியவர் சொன்ன விலாசத்துக்கு அருகே நான் நின்றபோது அவர் கூடு… கூடு… என்று சொன்ன இடம் மாட மாளிகையாக இருந்தது. “ஐயா பெரியவரே! நீங்க கூடுன்னு சொன்னீங்க… ஆனா என்ன இது இவ்வளோ பெரிய பங்களாவா இருக்கு…”

“ஆமாம்ப்பா… கொஞ்சம் பெருசுதான். இது ஒண்ணுதான் எங்ககிட்ட மீதம் இருக்கிற சொத்து. எனக்கும் பென்ஷன் வருது. ஒரு பக்கம் வாடகைக்கு விட்டிருக்கேன். பணத்துக்குப் பஞ்சமில்லை. ஆனா என்ன, குழந்தைங்க நம்ம கிட்ட நாம பாக்கறா மாதிரி இல்லையேன்னு கவலைதான். இந்தச் சொத்து வேற யாருக்கு? எல்லாம் நம்ம பிள்ளைகளுக்குத்தான். ஆ, சொல்ல மறந்துட்டேன்… பறவ கூடுங்கிறது சின்னது… மிஞ்சிப் போனா ரெண்டு பெரிய பறவைங்க, அது கூட ரெண்டு மூணு குஞ்சு பறவைங்க இருக்கலாம்… அவைகளும் பறந்துவிட்டால் அது வெறும் கூடுதான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள்னு நெறஞ்சதுதான் வீடுங்கிறது. யாருமே இல்லாத என் வீட்ட கூடுன்னு சொல்றதுதான் சரி… சரியா?”

“சரிதான் பெரியவரே!” என்று சொல்லிய நான், திருச்செந்தூருக்குப் போகும் பஸ்ஸை அவசரமாகப் பிடிக்க ஓடினேன்.

ஏனெனில், அங்குதான் ஒரு கூட்டில் என் பெற்றோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!