சிறுகதை
ட்ரிங்… ட்ரிங்… ஃபோன் அலறியது.
“ஹலோ!”
“உம்… வந்து… நான் ராமபத்ரன். லண்டன்ல இருந்து பேசறேன்….”
“அடடே… சொல்லுங்கோ மிஸ்டர் ராமபத்ரன்… நான் தான் பொண்ணோட ஃபாதர் கல்யாணம் பேசறேன்… சொல்லுங்கோ…”
“ஓங்கப் பேருக்கு ஏத்தா மாதிரி நம்மப் பிள்ளைகளோட கல்யாணத்தைப் பத்தி தான் பேசலாம்னு… நாங்க அடுத்த வாரம் பெண் பார்த்துட்டு அப்படியே கல்யாணத் தேதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டு திரும்பிடலாம்னு இருக்கோம்.”
“ஓ… அப்படியா? பேஷ்… பேஷ்… அப்படியே செஞ்சுடலாம். முதல்ல வாங்க. நீங்க சொல்றா மாதிரியே எல்லாத்தையும் முடிச்சுடலாம்… சரிங்க… சரிங்க… பை பை…”
ஃபோனை வைத்தவாறு… “அடி… கோமு… மாப்ள வீட்லேர்ந்து ஃபோனு… அவாள்லாம் அடுத்த வாரம் இந்தியா வர்றாளாம்… கல்யாணத்தை சட்டுப் புட்டுன்னு முடிக்கணும்ங்கறா…” என்று மனைவியிடம் கூறினார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க… அவா என்ன கேட்டாலும் செஞ்சுடலாம்… ஒங்கப் புள்ளாண்டான் வந்ததும் அவன் காதுலயும் போடுங்க. நாம வேற ஆச்சாரக் குடும்பம்! அவா எப்படி இருப்பாளோ தெரியல.”
“அவாளும் ஆச்சாரக் குடும்பம் தான்டீ… ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட பேசும் போது சொல்லிண்டு இருந்தார்… அவாள்லாம் லண்டன்ல இருந்தாலும் எந்த ஆச்சார அனுஷ்டானத்தையும் விடறதில்லையாம். எல்லாம் நேர்த்தியா செஞ்சிண்டிருக்காளாம். நாம தான் இங்க மாடர்ன்… மாடர்ன்னு சொல்லிண்டு நாட்டையும் வீட்டையும் கெடுத்துண்டிருக்கோம்!”
………………………………………………………………………………………………
“மாப்ள ஆத்துலேர்ந்து எல்லாரும் வந்துண்டிருக்காளாம்… ஏம்மா பூர்வி! ரெடியா?” கல்யாணம் பதற்றத்துடன் கேட்டார்.
“இதோ… ரெடிப்பா… இந்த வாசு அண்ணாவைக் கொஞ்சம் கவனியுங்களேன். என்னைப் பாடாய்ப் படுத்தறான். பட்டுப் புடவையைக் கட்டிண்டு, தலை நிறையப் பூவை வெச்சுண்டு, கழுத்து நிறைய நகையைப் பூட்டிண்டு வந்து நில்லுங்கிறான்பா… என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது! கொஞ்சம் சொல்லுங்கோ அவனாண்ட.”
“டேய் வாசு… அவளைப் படுத்தாதேடா. எம்.ஏ. படிச்ச அவளுக்கு அதெல்லாம் தேவையில்லைன்னு தோணறதோ என்னமோ… விடுடா. நோக்கு பொண்ணப் பார்க்கும்போது அப்படியே செஞ்சுடலாம். அவளை இப்போதைக்கு விடு.”
“உலகத்துல நடக்காததையா நான் சொல்லிட்டேன்! எப்படியோ போங்க…” சலித்துக் கொண்டான் வாசு.
வீடே அமர்க்களமாக இருந்தது. இப்போதே வீடு கல்யாணக் களை கட்டியது.
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பூர்வியை மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“ஓங்கப் பொண்ணு அப்சரஸ் மாதிரின்னா இருக்கா. அதான் கிருஷ்ணா சரண்டர் ஆயிட்டான்…” ராமபத்ரன் கூறினார்.
“ஏன்… ஓங்கப் புள்ளாண்டான் மட்டும் என்னக் குறைச்சலா… அப்படியே ‘கிருஷ்ணா … முகுந்தா… முராரே’ன்கிறா மாதிரியில்ல திவ்யமா இருக்கார்! படிச்சிருந்தும் நெத்தில நாமத்த வரிச்சுண்டு வந்திருக்காரே… அப்படியே சாட்சாத் ராமபிரானைப் பார்த்தா மாதிரி இருக்கு. எம்பொண்ணும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கா” – கல்யாணம் பதிலுக்குக் கூறினார்.
இதற்கிடையில்…
கல்யாணத்தின் மனைவி கோமு அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்…
“என்னம்மா பூர்வி… என்ன விஷயம்?”
“அப்பா… இல்லப்பா… அவரு லண்டன்ல இருக்கார்… நமக்கு அவா குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியாது… அதனால… அதனால…”
“அதனால?”
“ஹெல்த் வைஸ் அவர் பர்ஃபெக்டுங்கிறா மாதிரி ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வாங்கித் தந்தார்னா நன்னா இருக்கும்.”
“என்ன சொல்லிண்டிருக்கே நீ… அவா அதுக்கெல்லாம் ஒத்துப்பாளா?”
“ஒத்துக்க வைக்கணும்பா… பின்னால ஏதாச்சும் பிரச்சினை வந்தா பாதிப்பு எனக்குத் தானே? அதுவும் இல்லாம இதுக்கு ஒத்துக்கிட்டா தான் கல்யாணத்துக்கு சரிம்பேன்… நானும் எனக்கான ஹெல்த் சர்டிஃபிக்கேட்டை அவா சொல்ற டாக்டர் கிட்டேயே வாங்கித் தந்துடறேன்!”
கண்டிப்பு அவள் குரலில் தெரியவே ராமபத்ரனிடம் கூறினார்.
ராமபத்ரன் மகனிடம் கூறினார்.
“ஓ… அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சு” என்றவன், “நான் கொஞ்சம் தனியாப் பொண்ணோட பேசணுமே” என்றான்.
பேச அனுமதிக்கப்பட்டனர்.
“பூர்வி… அப்படியே என்னைக் கிறங்கடிச்சுட்ட…”
“நீங்க மட்டும் என்னவாம்?”
“உண்மையாவா?”
“உண்மையாதான்!”
“அது சரி… அதென்ன, என்னமோ டாக்டர் சர்டிஃபிக்கேட் அது இதுன்னு கேக்கறதா அப்பா சொன்னாரே…”
“ஆமா… நான் தான் சஜஸ்ட் செய்தேன்!”
“ஏன்… என்மேல நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை எல்லாம் இருக்கு. ஆனாலும் ஓங்கப் ஃபேமிலி பத்தி முக்கியமா உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே… அதனாலத்தான்… அதுவுமில்லாம… நாம ரெண்டு பேருமே படிச்சிருக்கோம். இப்போவெல்லாம்… மத்தவாளே டிமாண்ட் பண்றா… நாம இன்னும் சிரத்தையா இருக்கணும்ல…?”
“ஆமாமா… நீ சொல்றதும் சரிதான்… அதெல்லாம் செஞ்சிடலாம்… சரியா? நான் ஒண்ணு கேக்கறேன்… மறுக்கக் கூடாது.”
“மறுக்கக் கூடாததைக் கேளுங்களேன்!”
“பாருடா… கெட்டிக்காரத்தனத்தை! சரி… சரி… நம்மக் கல்யாணத்துக்கு இடைவெளி ரெண்டு மாசம்கிறது கொஞ்சம் அதிகமாகவே தெரியுது. அதுவரைக்கும் எனக்குப் பொறுமையில்ல. அடுத்த மாசம் நீ லண்டன் வர்றதுக்கு டிக்கட் அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாள் என்னோட இருந்திட்டு நீ இந்தியா திரும்பிடலாம்.”
“ஐயய்யோ… எனக்கு லீவு கிடைக்காது… ஆபீஸ்ல நிறைய வேலையிருக்கு… அதுவுமில்லாம…”
“இதோ பார், பொறுப்புகளை தவிர்த்துட்டு வான்னு சொல்லல… ஒன்னோட வேலை செய்யற பிரண்ட்ஸ்களிடம் வேலைகளை ஒப்படைச்சுட்டு வா. இந்த இளமைக் காலத்துல இதையெல்லாம் அனுபவிக்கலைன்னா எப்போதான் அனுபவிக்கிறது? கல்யாணமானதும் எதுக்குமே நேரமிருக்காது. ஏன் ஒனக்கு என்னைப் பிடிக்கலையா?”
“ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லை.”
“பிடிச்சிருக்கில்லே?”
“உம்.”
“பின்ன என்ன?”
“ஒண்ணும் இல்ல. சரி. ட்ரை பண்றேன்.”
பூர்வி ஒரு மாதத்தில் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸில் பறந்தாள்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் கிருஷ்ணா நின்றிருந்ததைப் பார்த்ததும் பூர்விக்கு என்னவென்று சொல்லமுடியாத ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.
கிருஷ்ணா அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.
அவசர அவசரமாக அவனிடமிருந்து விலகிக் கொண்டவள் “எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“எனக்கென்ன… ராஜாவாட்டம் இருக்கேன்… நீ?”
“நானும் ராணி மாதிரி தான் இருக்கேன்.”
இருவரும் ஓவென்று சிரித்தனர்.
டாக்சியில் ஏறினர்.
டாக்சி லண்டனிலிருந்து பிரிஸ்டலை நோக்கிச் சென்றது. அங்கே ‘ப்ரிமியர் இன்’ ஹோட்டலின் முன் நின்றது.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் ஹோட்டலுக்கு?”
“பயப்படாத. நான் ஒண்ணும் புலி இல்லை. கடிச்சித் தின்னுட மாட்டேன்.”
“எத்தனை நாள் தங்கப் போறோம்?”
“ஒரு ரெண்டு நாள் தான்.”
“ஒங்க பேரண்ட்ஸுக்குத் தெரியுமா?”
“ஓ… தெரியுமே.”
அதைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
இதற்கு இடையில் அவன் செல் ஃபோன் அலறியது.
“ஓ மை காட். ஐயம் சாரி… ஐ ஹாவ் கம்ப்ளீட்லீ ஃபர்காட்டன். சாரி… சாரி… ஐ எம் ரஷிங் நவ். வில் பி தேர் இன் தர்ட்டி மினிட்ஸ்.”
“பூர்வி… நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. ரெண்டு மணி நேரத்துக்குள்ள ஃபோன் பண்றேன்.”
ஏதோ ஆபீஸ் வேலையாக அவசரமாகப் போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் குளித்துவிட்டு நன்றாகத் தூங்கினாள்.
அவளது செல் ஃபோன் ட்ரிங்கியது.
எடுத்தாள். அடுத்த முனையில் கிருஷ்ணா!
“பூர்வி… சாரி… நீ ஒண்ணு செய்… ஒரு டாக்சி புடிச்சு…”
“ஐயையோ… இந்த ஊர்ல எனக்கு ஒண்ணும் தெரியாது… டாக்சி நம்பர் கூட…”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு… நீ படிச்சப் பொண்ணு தானே? நான் சொல்ற டாக்சி நம்பரை குறிச்சு வச்சிக்கோ… ஃபோன் செஞ்சு நீ ‘ப்ரிமியர் இன்’ல தங்கியிருக்கேன்னு சொல்லி அட்ரஸ் விவரங்களைச் சொல்லி டாக்சி வந்ததும் ரிசப்ஷன்ல சொல்லச் சொல்லு. அவங்க ஒண்ணோட ரூமுக்கு ஃபோன் செய்வாங்க. நீ டாக்ஸில ஏறி ‘க்ரிப்ஸ் காஸ்வே’ போகணும்னு சொல்லு. அங்க ‘மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்’ மால் கிட்ட இறக்கி விடச் சொல்லு. அந்த கட்டடத்துக்கு உள்ளே நுழைஞ்சி லெஃப்ட்ல திரும்பி நீளமா நடந்து வந்தா அங்கே ‘ரிகிஸ்’ என்கிற சலூன்ல நான் ஹேர் கட்டிங் செஞ்சுண்டிருக்கேன். நீ வந்ததும் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுட்டு ஹோட்டலுக்கு திரும்பிடலாம்.”
அவளுக்குப் பட… பட… வென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. எதற்காக இவன் என்னை இப்படி அலைக் கழிக்கறான். இவன் பேச்சைக் கேட்டு வந்திருக்கவே கூடாதோ. எப்படிப் போய்ச் சேரப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தவள் தத்தக்கா பித்தக்கா என்று வந்து சேர்ந்தாள்.
சொன்னமாதிரியே ‘ரிகிஸ்’சில் அவன் ஹேர் கட் செய்து கொண்டிருந்தான். அவளைக் குறும்பாகப் பார்த்தபடி “உன்ன இந்த ஊர்ல இருக்கிற இடங்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ட்ரெய்னிங் குடுக்கறேன்” என்றான்.
அவள் பதில் பேசவில்லை. ‘பாழாய்ப் போச்சு’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அங்கே இருந்த வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்றவன் அவள் மலைத்துப் போகின்ற அளவிற்கு விலையில் உள்ள டைமண்ட் ரிஸ்ட் வாட்ச் ஒன்றை வாங்கினான். அவள் எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை.
ஹோட்டலுக்குத் திரும்பினார்கள்.
அவன் குளித்து முடித்தான். சாப்பிட்டார்கள். சென்ட் வாசம் ரூம் எங்கும்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்குக் கூச்சமாக இருந்தது.
பின்பு ரிஸ்ட் வாட்சை எடுத்து அவள் கையில் கட்டினான். கையைப் பிடித்தவன் பிடித்தவன்தான்.
அவள் விடுவிக்க… அவன் பிடிக்க… என்ற நிலையில்… “ப்ளீஸ்… எனக்கு இதெல்லாம் பிடிக்கல…”
“நீ என்ன பழைய பஞ்சாங்கமா? நம்ம ரெண்டுபேர் குடும்பமும் ஆச்சாரக் குடும்பம் தான்… எனக்கும் தெரியும்… ஆனா காலம் மாறிடுச்சு… கொஞ்சம் புரிஞ்சுக்கோ…” என்றவன் அவளை நெருங்கினான்.
எதிர்பாராத நிலையில் அவளைக் கட்டித் தழுவியவனை அப்படியே பிடித்துத் தள்ளினாள்.
“மிஸ்டர் கிருஷ்ணா! கல்யாணத்துக்கு முந்தியே நீங்க இப்படிச் செய்யறது இங்க இந்த நாட்டுல எல்லாம் சரியா இருக்கலாம். ஆனா என்னால இதைக் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது.”
“ஏய்… நாளைக்கே நீ என்னுடைய மனைவியாகப் போகிறவள் தானே.”
“நான் மனைவி ஆகலன்னா?”
“ஏய்… நீ என்ன சொல்ற?”
“ஆமா… இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நிச்சயா நமக்கு கல்யாணம் ஆயிடும்னுல்லாம் நான் பாசிடிவா நினைச்சுட்டு இருக்க முடியாது. தயவு செய்து உடனே நான் இந்தியாவுக்குப் போக ஏற்பாடு செய்யுங்க.”
“ஓ… நீ என்னை ரொம்பத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். ஒகே… ஒகே… நாளைக்கே டிக்கட் கிடைச்சதும் நீ போகலாம். நான் எப்படியாவது ஏற்பாடு செய்யறேன்.”
அவள் இந்தியாவுக்குத் திரும்பினாள். கல்யாணத் தேதி நெருங்கியது.
இரண்டு நாட்கள் முன்பாக மாப்பிள்ளை வீட்டார் சென்னை வந்து இறங்கினார்கள்.
வந்த உடனே கிருஷ்ணா பூர்விக்குப் ஃபோன் செய்தான்.
“ஹாய் டார்லிங்… எப்படி இருக்கே?”
“நல்ல இருக்கேன்!”
“கோபமெல்லாம் போச்சா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே… என்னோட பாதுகாப்புக்குத்தான் நான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன். தப்பா நினைக்காதீங்க.”
“ச்சே… ச்சே… அதெல்லாம் பரவாயில்லை… ஸீ யூ ஸூன்!”
……………………………………………………………………………………………
பூர்வி நிம்மதியற்று அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தாள்.
“அப்பா… கிருஷ்ணாவோட அப்பாகிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் என்னாச்சுன்னு கேட்டீங்களா?”
“ஆமாமா.. கல்யாணக் கலாட்டால நான் கூட மறந்துட்டேம்மா. இதோ இப்பவே ஃபோன் செஞ்சு கேக்கறேன்.”
பத்து நிமிடம் கழித்து அவர் வந்தார். “பூரு… நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கறதுனால முழு டெஸ்டும் பண்ண நாள் போறாதாம். அப்படியே செஞ்சி முடிச்சாலும் மறு நாள் தான் லேப் ரிப்போர்ட் கிடைக்குமாம். அவா இதைப் பத்தி கம்ப்ளீட்டா மறந்துட்டாளாம். ‘அதனால என்ன சம்பந்தி, கல்யாணத்துக்கு மறுநாள் ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைச்சுடும்’கிறார் கிருஷ்ணாவோட அப்பா.”
“இல்லப்பா… கல்யாணத்துக்கு முந்தியே கிடைச்சா தான் நான் கேட்டதுக்கு அர்த்தமிருக்கும். நாளைக்குள்ள என் கைல ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கலைன்னா கண்டிப்பா கல்யாணத்தையே நிறுத்த வேண்டியிருக்கும்.”
அதிர்ச்சியுற்றவராக அவர் ஓடிப்போய் சம்பந்தியிடம் சொல்ல… அவர் கிருஷ்ணாவிடம் சொல்ல… என்று அவர்களுக்குள்ளே பெரிய சர்ச்சையே நடந்தது.
இதற்கிடையில் பூர்வியின் அப்பா கல்யாணத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.
என்ன அது?
பூர்வ காலத்து நம்பிக்கைதான்!!
மாபிள்ளைக்கு ‘சர்வாங்கம்’ செய்வது என்பதுதான் அது!
அதென்ன சர்வாங்கம்?
அந்தக் கா…லத்தில் வெகு… வெகு… வருடங்களுக்கு முன் ஒரு வழக்கம் இருந்தது.
பெண் வீட்டார் ஏற்பாடு செய்து தர, நாவிதர் திருமணத்திற்கு முந்தின நாள் மாப்பிள்ளையின் தலையைத் தவிர சில சமயம் தலையிலேர்ந்து உடம்பு பூராவும் இருக்கின்ற முடியை மொத்தமாக மழித்து விடுவார். அப்படி மழிக்கும் போது மாப்பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. கூச்சப் படக்கூடாது. உடம்பைத் தப்பித் தவறி கொஞ்சம் நெளித்தால் கூட படக்கூடாத இடத்தில் கத்தி பட்டு விடும்…
………………………………………………………………….
“என்னங்க… ஏன் ஒரே டென்ஷனா இருக்கேள்?”
“இல்லேடீ… நேத்து தான் கும்பகோணத்துல இருக்கானே என்னோட ஃபிரண்டு நடேசபாண்டியன் ருக்மாங்கதனுக்குப் ஃபோன் பண்ணேன். ‘சர்வாங்கம்’ பண்றவங்கள்ளாம் ரொம்பவே குறைஞ்சிட்டாங்களாம். அந்த ஊர்ல கூட ரெண்டொருத்தர் தான் இருக்காங்களாம். எப்படியும் அனுப்பி வைக்கிறேன். காலைல பத்து மணிக்கெல்லாம் வந்துடுவான்னு சொன்னான். அதான் காத்துண்டிருக்கேன்… அந்த ஆளோட பேர் கூட மணின்னு சொன்னான். நான் தப்பு பண்ணிட்டேன்னு தோன்றது கோமு. என்னோட ஃபிரண்டு, அதான் உனக்கு தெரியுமே, கிச்சா கூட ‘இதென்ன கேலிக் கூத்தான்னா இருக்கு, இந்த யோசனைக்கு மாப்பிள்ள ஆத்துல ஒத்துக்க மாட்டாளே… காதும் காதும் வெச்சாப்ல நாவிதனை ஊருக்கு அனுப்பி வையுடா’ன்னு சொன்னான். இதக் கேள்விப்பட்டா பூர்விக்கும் பொல்லாத கோபம் வந்துடும். அதான் மணி வந்ததும் மொதல்ல அவனை ஊருக்கு மூட்டைக் கட்டணும்னு பார்த்துண்டிருக்கேன்.”
அதே சமயம் – “சார்… இங்க… கல்யாணம் சார்ன்னு… ஒருத்தர்…” என்று கேட்டுக்கொண்டு மணி வந்தான்.
“வாப்பா… வாப்பா மணி… தப்பா நினைச்சுக்காதப்பா… இப்போதைக்கு மாப்பிள்ளைக்கு ‘சர்வாங்கம்’ செய்யறது முடியாமப் போச்சு. இந்தாப்பா, இந்தக் கவர்ல செலவுக்கு ரூபா ஆயிரம் வெச்சிருக்கேன். நீ உடனே கிளம்புப்பா…” என்றபடி அவனை அவசரப்படுத்தினார்.
அந்தச் சமயம் பார்த்து அங்கே வந்த பூர்வி… “யாருப்பா இவரு? என்ன… ஏதோ பணம் கூட கொடுத்த மாதிரி இருக்கு?”
“ஓ… அதுவா? உனக்குச் சொல்லவே இல்லை… இல்லையா? மறந்துடுச்சி.”… என்று ஆரம்பித்துத் தயங்கியவாறு… ‘சர்வாங்கம்’ பற்றி யாருக்கும் தெரியாமல் அவர் எடுத்த முடிவு பற்றி அவளிடம் தெரிவித்தார்.
அவள் மிகவும் அதிர்ச்சியுடன்… “அப்பா! நீங்க என்ன சொல்றேள்? நல்ல காலம் மாப்பிள்ளை ஆத்துல பகிர்ந்துக்கலை. வெளிய தெரிஞ்சா பலபேர் வாயில நீங்க விழுந்து எழுந்திருக்க வேண்டியிருக்கும். இது ரொம்ப அநியாயமா தெரியலையா ஒங்களுக்கு?”
“அதான், நானே வேண்டாம்னுதான் மணியை ஊருக்குப் போகச் சொல்லிட்டேனே…”
அதற்குள் இடைமறித்த மணி, குறுக்கிட்டு… “இல்லீங்கம்மா, இப்படிச் செய்யும்போது மாபிள்ளைக்கு இருக்கிற சில வியாதிகளை எங்களால சொல்லமுடியும். அதனால பல பொண்ணுங்களோட வாழ்க்கையை எங்க மூதாதையர்களும், ஏன் நானும் கூட காப்பாத்தி இருக்கோம். அதுக்காக எல்லா தோல் வியாதிகளையும் பாலுணர்வு தொடர்புடைய நோய்களையும் கண்டுபுடிச்சிட முடியும்னு சொல்ல வரலை…”
“இதோ பாருப்பா மணி… நீ சொல்றதெல்லாம் வைத்திய முறைகள் முன்னேறாத காலத்துல நடந்தது. இனி அந்த மாதிரி தவறுகள், அறியாமைகள் நடக்கக் கூடாதுன்னுதான் இந்த உலகமே போராடுது. இப்ப நிறைய படிச்ச ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், விஞ்ஞானிகள்னு பூமி விரிஞ்சிக்கிட்டிருக்கு. அதற்குன்னு பரிசோதனைச் சாலைகள் இருக்கு. முறைப்படி டாக்டர்களிடம் கேட்டுத்தான் பரிசோதனை செய்யணும்.”
இப்படி பூர்வி கண்டிப்புடன் சொல்வதைப் பார்த்து மணி மட்டுமல்ல, கல்யாணமும் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.
மணி ஊருக்கு அனுப்பப்பட்டான்.
“அப்பா… உடனே கிருஷ்ணா அப்பாகிட்ட பேசுங்க. நானும் கிருஷ்ணா கிட்ட பேசறேன். என்னோட கல்யாணம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை. அவர்கிட்ட சொல்லி ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்த பின்னால கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.”
ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்ததா?
கல்யாணம் நடந்ததா?
என்ன, ஆவலாக உள்ளதா?
இதன் முடிவு தான் என்ன?
நாம் ஏன் கவலைப் படவேண்டும்?
பூர்வி படித்தவள். அவள் கேட்டது நியாயமே. அவளுந்தானே அவளுடைய ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டை கொடுக்கப் போகிறாள்.
லேப் ரிப்போர்ட்டில் பாசிடிவ் என்று வந்தால் அவள் திருமணத்தை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.
அல்லது…
மாபிள்ளையின் நோய் குணமாகிறவரை காத்திருந்து திருமணமும் செய்துக்கொள்ளலாம்.
நெகடிவ் என்று வந்தால் உடனே திருமணம் நடக்கலாம்.
இனி அவள் பார்த்துக்கொள்வாள்.
நாம் யார் அவள் வாழ்க்கையில் தலையிட?
இனிமேல் நாம் நம்முடைய வேலைகளை கவனிக்கலாம் வாங்க.
வேலையை கவனிக்கப் போகின்ற என்னை யார் பிடித்து இழுப்பது…?
“சார்… சார்… அதுவே பூர்விக்கும் ஏதாவது பிரச்சனை ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டில் தெரிய வந்தால் நிலைமை என்னவாகும்?”
“என்ன சார்… இதெல்லாம் கேட்டுக்கிட்டு… மாபிள்ளைக்கு என்ன கதி ஏற்படுமோ அதே கதிதான் பெண்ணுக்கும்!”
சும்மா சொல்லக் கூடாது… இந்தக் காலத்துல எல்லாருமே ரொம்பத் தெளிவாத்தான் இருக்காங்க!