அது ஒரு சாதாரண குடும்பம். குடும்பத் தலைவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண்.
அவரது மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்து விட்டார்.
எல்லா ஆண்களைப் போலவே பிள்ளைகளை வளர்க்க என்று சொல்லி அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அதற்குப் பிறகு இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது மனைவி கிராமத்திலிருந்து வந்தப் பெண் என்றாலும் கோயம்புத்தூருக்கு அருகில் வசித்ததால் கொஞ்சம் சாமர்த்தியமாகத்தான் இருந்தாள்.
அரை டவுசர் போட்டிருந்த மூத்தாளின் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெண்ணையும் அருமையாக ஆக்கிப் போட்டு அண்ணாந்து பார்க்கின்ற அளவுக்கு வளர்த்தாள். அவளது குழந்தைகளும் வளர்ந்தன. முதல் தாரத்துப் பிள்ளைகள் மூன்றும் சித்தி சித்தி என்று அன்பாகத் தான் இருந்தார்கள். ஆண் பிள்ளைகள் அனைவரும் சொந்த சகோதரர்கள் போல் தான் வளர்க்கப்பட்டனர்.
மூத்தாளின் பெரிய பையன் என்ஜினீயருக்குப் படித்தான். இரண்டாவது பையன் படித்துவிட்டு மத்திய அரசில் வேலைக்குச் சேர்ந்தான்.
இடையில் தந்தை இறந்து போனார்.
தங்கைக்குக் கல்யாணம் முடித்தனர். சித்திக்குப் பிறந்த பிள்ளைகள் இரண்டும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.
இதற்கிடையில் என்ஜினீயருக்குப் படித்த பையன் அரசாங்க வேலையில் இருந்ததால் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனான். மாற்றலாகிப் போனாலும் இரண்டாவது பையனின் சம்பளம் குறைவு என்பதால் ஈடு கட்ட முடியாது என்று ஊரில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வெளியூரிலேயே தங்கிவிட்டான்.
பணம் அனுப்புவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
இரண்டாவது பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது.
சித்தியின் பிள்ளைகள் இரண்டு பேருக்குமே படிப்பு ஏறவில்லை. அவர்களும் ஆளுக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டார்கள். பிறகு திருமணமும் நடந்தேறியது. இதற்கிடையில் சித்திக்குப் புற்று நோய் காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
வயிற்றில் பெரிய கட்டி! அறுவை சிகிச்சை நடந்தது. மூத்தாளின் என்ஜினீயர் பிள்ளை பார்க்க வரவில்லை.
மரணப் படுக்கையில் இருந்த சித்தியோ “என் மூத்த மகன் என்ஜினீயர் புள்ள வரவே இல்லையே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
சித்தியின் நிலைமை தெரிந்தும் கூட என்ஜினீயர் பிள்ளை கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வர முடியாததற்கு பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வருகின்ற சுவடே தெரியவில்லை.
மருமகளில் ஒருத்தி, “டவுசர் போட்டிருந்த பசங்க ‘பேண்ட்’ போடறவரை வளர்த்தாளே… சித்தியைப் பார்க்க எப்படி ஒங்க அண்ணா வராம இருக்கார்? ஒங்களை எல்லாம் சொந்தப் பிள்ளைகளாகத் தானே அந்த அம்மா நெனைச்சா… மூத்தாளோடப் பிள்ளைகள்னும் தன்னோடப் பிள்ளைகள்னும் தனியாவா பார்த்து வளர்த்தாள்? இல்லையே! சித்தி மேல என்னதான் தப்பிருந்தாலும் வளர்த்தத நெனச்சி… நன்றிக் கடனைத் தீர்க்கறதுக்காகவாவது வரணும்னு தோனலையே… ஏன் தம்பிகள் நீங்கள்ளாம் என்ன செய்றீங்க… அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா? இன்னைக்கோ நாளைக்கோன்னு உயிர்ப் போற நெலையில இருக்கிறவங்களை பார்க்காம இருக்க எப்படித் தான் மனசு வருதோ? மூலஸ்தானத்துல இருக்கிற அந்தச் சாமியே கூட கோயிலுக்கு வந்து பார்க்க முடியாதவங்களுக்காக தெருவுல உலா வர்றார். உம். இவங்கள்லாம் சாமிக்கும் மேலயா?” என்று புலம்பினாள்.
அதைக் கேட்ட இரண்டாவது தம்பி ஊரிலுள்ள அண்ணனைப் பார்த்து சித்தியைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்ன பிறகு ஏதோ போனால் போகிறது என்பது போல் வந்து பார்த்தான்!
அதன் பிறகு ஆஸ்பத்திரியில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடமெல்லாம் “என்ஜினீயர் புள்ள என்ன வந்துப் பார்த்துட்டாரு… பார்த்துட்டாருன்னு…” பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்த அந்த சித்தியின் ஆன்மா சில நாட்களில் பிரிந்தது!
உலகம் பலவிதம்… அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்!
செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவே கர்ணன் நியாயமற்ற கௌரவர்களின் பாவத்தில் பங்கேற்க நேர்ந்தது. சோற்றுக் கடனைத் தீர்க்காமல் கடனாளியாக உயிர் விட்டால் அந்த உயிர் எங்கே போகும்?
எப்படி அமைதியைப் பெறும்?
அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!