பச்சைத் துரோகங்கள்

அவள் நல்ல நிறம். உயரம். மிகவும் அழகானவள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் உள்ளே கண்கள் ஒளி மின்னலென பளிச்செனத் தெரியும். மெல்லிய உதடுகளில் எப்போதும் புன்னகை ஓடிக்கொண்டிருக்கும். நளினமானவள்! பிரபலமான கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள்.

அவளது பெயரை சுந்தரி என்று வைத்துக்கொள்வோமே.

அழகுக்கு ஏற்றாற்போன்று வகைவகையான புடவைகள். அதற்கேற்ற வண்ணத்தில் கைவளை மற்றும் பொட்டு… இத்யாதி… இத்யாதி.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தப் பெரிய நகரத்தில் அழகானதொரு பங்களா. அதைச் சுற்றிலும் தோட்டம், மரம், செடி, பூ என்று எல்லாமே அழகு.

கணவர் டாக்டர். வீட்டு வேலைகளைச் செய்ய உதவிக்கு ஒரு பெண்மணி. சுந்தரி இருக்கும் போதே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்தப் பெண்மணி அவளது வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அவுட்ஹவுசில் ஒரு குடித்தனம் வாடகைக்கு வைக்கப்பட்டிருந்தது.

கணவர் தினமும் காரில் சுந்தரியை கல்லூரியில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிடுவார். திரும்பவும் சாயங்காலம் வந்து அவளை அழைத்துச் செல்வார். சுந்தரிக்குத் திருமணம் நடந்ததும் குழந்தை உண்டானது. உடனேயே எதற்குக் குழந்தை என்று கணவனும் மனைவியும் கலந்துப் பேசி கருக்கலைப்புச் செய்தனர்.

அதன் பின்னால் சில வருடங்களுக்குப் பிறகு என்ன முயற்சி செய்தும் குழந்தை பிறக்கவில்லை.

நான் பழகிய தோழிகளில் சுந்தரியும் முக்கியமானவள். எல்லோருக்குமே அவளைப் பிடிக்கும். கல்லூரி கேம்பஸ்ஸில் எங்கே என்னைப் பார்த்தாலும் நின்றுப் பேசிவிட்டுத் தான் செல்வாள். வீட்டுக்குச் சாப்பிடவா என்று சதா சொல்லிக்கொண்டிருந்தாள் என்று ஒருமுறை சென்றேன். விதவிதமானப் பலகாரங்களை உதவி செய்யும் பெண்மணியிடம் செய்யச் சொல்லி என்னை அசத்திவிட்டாள்!

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது நிறைய சமயங்களில் உண்மையாகிப் போகின்றது. அவளைப் பார்க்கின்ற யாரும் அவளுக்கு என்ன குறை… குழந்தை இல்லை என்பதைத் தவிர என்று தான் யோசிப்பார்கள்.

எல்லோரையும் கேட்டுப் பாருங்கள்… ஏதாவது குறையைச் சொல்லி அழுவார்கள். வீட்டுக்கு வெளியே நின்று பார்த்தால் ஒன்றும் புரியாது. உள்ளே போய்ப் பார்த்தால் தான் எங்கே ஒழுகுகிறது, எங்கே அழுக்கு என்றெல்லாம் புரியும்.

வேலை நிமித்தமாக நான் திரும்பவும் அந்த ஊருக்குச் சென்றபோது என் பழைய தோழிகள் சுந்தரியைப் பற்றிச் சொன்னபோது பதைபதைத்துப் போனேன். துடிதுடித்துப் போனேன். நான் வெளிப்படையாக அழவில்லையே தவிர என் இதயத்தில் ரத்தம் கசிந்தது.

மூச்சு முட்டும்படி நிறைய வேலைகள் எனக்கு இருந்ததாலும், குழந்தைகளைத் தனியாக என் சின்ன அண்ணன்  விஜி பொறுப்பில் விட்டிருந்ததாலும் (பாவம் என் விஜி அண்ணா எனக்காக அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வந்திருந்தார்), உடனே நான் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் சுந்தரியை எப்படியும் சந்தித்துப் பேசவேண்டும், அதற்காகவே திரும்பவும் அந்த நகரத்திற்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இதோ… இதுவரை என்னால் செல்ல முடியவில்லை… இன்றைக்கு வரை நான் அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்… முடியுமா தெரியவில்லை.

சரி. இடையில் சுந்தரிக்கு என்ன நேர்ந்தது?

அவள் தினமும் கல்லூரிக்குச் சென்றால் திரும்பவும் மாலை தானே வீட்டுக்குச் செல்ல முடிகிறது. அதுவும் மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது கல்லூரிக்கூட்டங்கள், அந்தந்தத் துறைக் கூட்டங்கள், விழாக்கள்… அது இதென்று இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கூட வீட்டுக்குச் செல்கின்றமாதிரி இருக்கும்.

இந்த இடைவெளி அவளது டாக்டர் கணவனுக்கு வசதியாகப் போனது.

எப்படி?

ஆமாம்… அவளது கணவருக்கும் வீட்டில் வேலைக்கு உதவி செய்வதற்கு வந்தப் பெண்மணிக்கும் உறவு ஏற்பட்டு விட்டது!

வாய்க்குவாய் கணவரைப் பற்றிப் பேசியவள். மொத்த அன்பையும் மொத்தமாக அவருக்கே அளித்தவள். உலகமே அவர்தான் என்று உள்ளம் பூரித்தவள். நம்பிக்கையின் நாயகன் என்று நம்பிக்கொண்டிருந்தவள். தன்னை விட்டு இன்னொரு பெண்ணிடம் கணவன் எப்படிப் போக முடியும் என்பதை நம்ப முடியாதவள். அதிர்ச்சிக்குள்ளானாள்… அவதிப்பட்டாள்… ஆழ் கடலுக்குள் அழுத்தப்பட்டதுபோல ஆடிப்போனாள்.

சரி. என்னதான் செய்தாள்?

அவளுக்கு என்ன தோன்றியதோ… உலகமே தன் கையை விட்டுப் போனதாகக் கருதியவள் மிகவும் மனம் சஞ்சலப்பட்டு வேறு மதத்திற்கு மாறிவிட்டாள்!

இப்படி என் தோழிகள் சொன்னபோது என்ன நினைத்து இப்படிச் செய்திருப்பாள் என்று எனக்குப் புரியவில்லை.

கணவர் செய்த தவறுக்கு இவள் ஏன் மதம் மாறவேண்டும்? மதம் மாறுவதால் திருந்திவிடப் போகிறாரா? அல்லது அவருக்கு அவருடைய மதம் மிக முக்கியமானது என்று தெரிந்து அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டுமென்று மதம் மாறிவிட்டாளா?

அடி தோழி…! இதை நீ படிக்க நேர்ந்தால் என்னைத் தொடர்பு கொள். உன்னுடைய இருப்பு எங்கே என்று தெரியாமல் நமது தோழிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்… தேடிக்கொண்டிருக்கிறேன்… நிச்சயம் ஒரு நாள் நான் உன்னைக் கண்டிப்பாகப் பார்ப்பேன் என்று மிக நம்பிக்கையுடன் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

சில ஆண்கள் ஏன் இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கிறார்கள்?

வெளிநாடுகளில் இம்மாதிரியான நிலைகளில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் கலந்துப் பேசி விட்டுக்கொடுத்து அல்லது மீண்டெடுத்து வாழ்வதைப் பார்க்கிறேன். ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் எந்த நிலையிலும் பெண்கள் அதிகம்பேர் கணவரை விட்டுப் பிரியாமலிருக்கத்தானே விரும்புகிறார்கள்!

இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கின்ற ஆண்கள் அவர்களது சகோதரிகளுக்கு இந்த நிலை வரும்போது சும்மா இருப்பார்களா? எப்படித் துடித்துப் போவார்கள்… நினைத்துப் பார்க்க மாட்டார்களா?

அவரது மனைவி அப்படிச் செய்திருந்தால், எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்? அவமானம் அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா, அண்ணன், தங்கைகளுக்கும் என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்!

ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டமா? ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டங்களை எதெதில் வைக்க வேண்டுமோ அததில் பொதுவில் வைப்போம்!

திருமணம் செய்யும் போது ஏழு சப்த அடிகளில் ஒன்றான ‘கஷ்ட நஷ்டத்திலும் உன்னைக் கைவிடமாட்டேன்’ என்று பொருள்பட ஓர் ஆண் திருமணம் செய்கிறான் என்பதை அவனது தாய் மொழியில் சொன்னால் தான் புரியும் போல் தெரிகிறது!

என் தோழி சுந்தரியின் டாக்டர் கணவருக்கு ஒரு கேள்வி. உள்ள உணர்ச்சியை விட உடல் உணர்ச்சிக்கு இடம் கொடுத்த சகோதரரே… வைத்தியரான உங்களுக்குத் தற்காலிக அந்த உணர்ச்சிக்குத் தடை போடத் தெரியவில்லையா?

நீங்களே இப்படிச் செய்தால்?