பழுத்த ஓலை!

சிறுகதை

“ஓய்… எம்மோவ்… அதென்னது இந்த ஏரியில மீன் புடிக்கிறவங்கள்ளாம் நம்மள மாதிரிப் பேசாம வேறமாதிரிப் பேசறாங்க?” தாய் நாகாத்தாளைப் பார்த்து அவளது மகள் சின்னப்பொண்ணு கேட்டாள்.

“அதா… தாயீ… நாம இந்தக் காஞ்சீபுரத்துல சீரும் சிறப்புமா நல்லா வாள்ந்தவங்க… ஒங்க அப்பாரோட அப்பாரு நீரு, நெலம், ஆளு, அம்புன்னு கொடிகட்டி வாள்ந்தவரு… ஆனா… பொம்பள சகவாசத்துல சொத்தெல்லாம் அளிஞ்சி… குடும்பமே நாசமாப் போச்சு. பாவம் ஒங்கப்பாரு என்னைய இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு இந்தக் காஞ்சீபுரம் நத்தம்பட்டு ஏரிக்கு வந்து முன்னப் பின்னத் தெரியாத இந்த மீன் புடிக்கிற வித்தயைக் கத்துக்கிட்டு கஷ்டப்பட்டாரு. இடையில வந்து இந்த சனங்களோட சேர்ந்துக்கிட்டதால முளுசா அவங்க பேசுறமாதிரி நமக்கு வரல இல்ல… மகராசன் என்ன மவராணி மாதிரிதான் வெச்சுருந்தாரு. ஒனக்கும் எனக்கும் கொடுத்து வெக்கல. ஒனக்கு நாலு வயசாகும்போதே ஏதோ சீக்கு வந்து மேல போய் சேந்துட்டாரு. சரி… சரி… கெளம்பு ஏரிக்குப் போவலாம்.”

“என்ன ஏதுக்குக் கூப்பிடற?”

“அடியே… கண்டாங்கிச் சிறுக்கி! பேருதான் சின்னப்பொண்ணு… ஆனா நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோ… மத மதன்னு நீ நிக்கறதப் பாத்தா எனக்குப் பயமாருக்கில்ல? சீக்கிரமா ஒன்ன ஒருத்தன்கிட்டப் புடிச்சுக் குடுத்துட்டேன்னா நான் நிம்மதியாய் ஊருப் போய்ச் சேருவேன். அதுக்கு முன்னால ஒனக்கு இந்த மீன் புடிக்கிற தொளில கத்துக் குடுத்திட்றேன். கெளம்பு… கெளம்பு.”

காற்று நிறைந்த இரண்டு டயர் டியூபுகளையும் கூடவே கில்நெட் எனப்படும் மீன் வலைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

சின்னப்பொண்ணுக்குக் கடல் மாதிரி தெரியற ஏரியைப் பார்க்கவே எப்போதும் பயமாக இருக்கும். நெறைய ஆண்களும் பெண்களும் படகுகளிலும்… சிலர் காற்றடித்த டயர் டியூபுகளின் உள்ளே உடம்பை நுழைத்துக்கொண்டும்… கால்களில் தள்ளியவாறே ஏரியின் உள்ளே செல்வதைப் பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.

“அடி ராசாத்தி… அங்கென்னத்தப் பாக்கற? இந்தா… இப்பிடிக்கா வா. பொடவைய மேல தூக்கிக் கட்டிக்கோ.”

“அய்யோ… எம்மோவ்… கூச்சமா இருக்கு. அல்லாரும் பாக்கறாங்கல்ல?”

“அவ(ன்) பாக்கறான் இவ(ன்) பாக்கறான்னு இருந்தியானா இன்னக்கி நாம மீன் புடிச்சி வெளங்கினாமாதிரிதான். இந்தா… ஒடம்புல இந்த டியூப மாட்டிக்கோ. தோ பாரு… என்னமாதிரி அப்டியே கால்ல தண்ணிய தள்ளிக்குனு உள்ள ஊடாற போகணும். ஏரியக் காக்கற அந்த மகமாயி நம்மளக் காப்பாத்துவா.”

“என்னா… நாகா‍‌யீ… புதுசா பொண்ணுக்குத் தொளில கத்துக் குடுக்கறியா?” கேட்டது அண்ணாச்சி அருமை நாயகம்.

“ஆமா அண்ணாச்சி.”

“சரி… சரி… ஒரு வெஷயம். நாளைக்கி மீன் டிபார்ட்மெண்ட் ஆபீச சீக்கிரமே மூடிப்புடுவாங்களாம்ல. மீன் புடிக்கறதுக்கு டோக்கன் வாங்கனுமில்ல. அதனால நேரத்துலயே போயி டோக்கன் வாங்கிடுங்க… இந்தச் சேதிய அல்லார்கிட்டையும் சொல்லிப்புடு புள்ள.”

“சரிங்க அண்ணாச்சி…”

நாகாத்தாளும் சின்னப்பொண்ணும் அப்படியே டயர் டியூபில் நீந்திக்கொண்டு ஏறக்குறைய ஏரியின் நடுப்பகுதிக்கே வந்து விட்டனர்.

“இத… இதப் பாரு… இத மாதிரித் தான் இந்த கில்நெட்டைப் போடணும்… கொஞ்ச நேரத்துல இதுல நிறைய மீனுங்க உளும்.”

ஒரு நாலு மணிநேரம் மீன் பிடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இப்போதெல்லாம் நாகாத்தாளை விட சின்னப்பொண்ணுதான் மீன் பிடிப்பதில் கெட்டிக்காரி!

சின்னப் பொண்ணு மீன் பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து நத்தம்பட்டி ஏரியே கலகலத்தது.

தினமும் கண்டாங்கிச் சேலையுடன் அவள் நடந்து வருவதே நாட்டியம் போல இருந்தது.

அவள் சேலையைத் தூக்கி மேலே இடுப்பில் கட்டும்போதெல்லாம் கட்டிளங் காளைகள் தலை கிறுகிறுத்துப் போனார்கள்.

இதையெல்லாம் சட்டை செய்யாமலே இருந்தாள் சின்னப்பொண்ணு.

…………………………………………………………………………………………………

கொஞ்ச நாட்களாகவே அவளது தாய் நாகாத்தாளுக்கு உடம்பு முடியாமலே இருந்தது.

அதனால் சின்னப்பொண்ணு கொஞ்ச நாட்கள் மீன் பிடிக்கப் போகாமல் இருந்தாள்.

“எத்தனை நாளுக்குத் தான் தொளிலுக்குப் போகாம இருப்பே? எனுக்கு ஒண்ணும் ஆயிப்புடாது. அதான் வைத்தியன் வந்து மருந்து குடுத்திருக்கான்ல? அல்லாம் சரியாப் போயிடும். நீ கெளம்பு.” நாகாத்தாள் சத்தம் போட்டாள்.

கொஞ்ச நாட்கள் என்றதுபோய் மாதக் கணக்கில் படுத்தப் படுக்கையானாள். அவளுக்குப் பணிவிடை செய்துவிட்டு விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மீன் பிடிக்கச் சென்றுவிடுவாள் சின்னபொண்ணு. ஏதோ… குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று சின்னப்பொண்ணுக்கு உடம்பை என்னமோ செய்தது.

சமாளித்தவாறு டயர் டியூபை கால்களால் தள்ளிக்கொண்டே சென்றவள் ஏரித் தண்ணீரில் கில்நெட்டையும் போட்டுவிட்டாள். மீன்கள் விழத் தொடங்கின. பிறகு அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

விழித்தபோது அவளது குடிசையில் இருந்தாள்.

அவளையே பார்த்தவாறு அழகிய கட்டு மஸ்தான ஒரு வாலிபன் நின்றிருந்தான்!

அவசர அவசரமாக எழப்பார்த்தவளை, “எளாத… எளாத… ஒனக்கும் ஒங்க தாயி மாதிரியே வெஷ ஜுரம். இப்பத்தான் வைத்தியர் வந்து போனாரு. பக்கத்துல கஞ்சி இருக்கு. சாப்டுட்டு… இந்தா இந்த மாத்திரையை போட்டுக்குனு நல்லாத் தூங்கு. ஒங்க ஆத்தா சாப்டுடுச்சி. அதுக்கும் மாத்திரைய நானே குடுத்துப்புட்டேன். சூரியன் சாஞ்சதும் வாரேன்!”

அவன் கிளம்பிவிட்டான்.

சொன்னது போலவே பொழுது சாய்ந்ததும் அவன் வந்தான்… பேசினான்… சென்றான்…

திரும்பவும் வந்தான்… அவளது தாய் மூலமாக அவனது பெயர் அர்ச்சுனன் என்பதும் மீன் பிடித் தொழிலில் கெட்டிக்காரன் என்பதும் ஒரு படகுக்குச் சொந்தக்காரன் என்பதும் தெரிய வந்தது. மயக்கமாக ஏரியில் விழுந்தவளை அவன்தான் காப்பாற்றி வீடு சேர்த்திருக்கிறான்.

அவள் பிடித்த ரோகு, கட்லா, திலப்பியா, வெரால் மீன் மூட்டையையும், கில்நெட் டயர் டியூபையும் தூக்கிக்கொண்டு வந்ததோடு, மீன்களையும் அவனே விற்றுப் பணத்தையும் கொடுத்திருக்கிறான் என்பது தெரிந்து மனம் நெகிழ்ந்து போனாள்.

சின்னப்பொண்ணும் அவளது தாய் நாகாத்தாளும் அவன் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

சின்னப்பொண்ணுவின் நோய் கொஞ்சங்கொஞ்சமாக குணமாகிய அதே நேரத்தில் நாகாத்தாளின் நோய் முற்றத் தொடங்கியது.

எதிர்பாராத ஒரு நாளில் நாகாத்தாள் இறந்து போனாள்.

தாயை இழந்த அதிர்ச்சி நீங்க சின்னப்பொண்ணுவிற்கு நிறைய மாதங்கள் ஆகின.

அந்தச் சமயங்களில் எல்லாம் அர்ச்சுனன் தான் அவளுக்கு ஆதரவாக இருந்தான்.

………………………………………………………………………………………….

நாகாத்தாள் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.

ஏரியைப் பார்த்தவாறு ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருந்தாள் சின்னப்பொண்ணு.

“எந்தக் கோட்டைய புடிக்குறாப்புல?” கேட்டது அர்ச்சுனன்.

“அர்ச்சுனன் கோட்டையைத்தான்!”

“ஆரு? இந்தச் சின்னப்பொண்ணா புடிக்கப்போறது?”

“இல்ல… இல்ல… நான்… இப்போ பெரீய்ய்ய்ய்யப் பொண்ணு. அதென்னது பேரு அர்ச்சுனன்னு? இந்தக் காலத்துல ஆரு ராசா பேரெல்லாம் வெச்சுக்கிறாங்க?”

“நானா வெச்சுக்கிட்டேன்? என்னப் பெத்தவங்க வெச்சப் பேரு.”

“அர்ச்சுனன்னா… வில் அம்பு விடுவியரோ?”

“முன்னாலேயே உட்டுட்டேன்!”

“எப்போ?”

“இப்போதான்!”

‘இப்போவா? யார் மேல?”

“ஒன் மேலதான்… அதான் சாச்சிட்டேன்ல?”

“ஐயே… ரொம்ப வம்படிக்கிறவங்கதான் நீங்களோ?”

“வம்படிக்கச் சொல்றது ஒங்கக் கண் அம்புதாங்கோ!”

“நல்லா இருக்கே நீங்க சொல்றோது… நானே சிவனேன்னு இருக்கேன்!”

“ஐயையோ… யாரது அந்தச் சிவன்?”

“ஐயே… ச்சீ… நான் சொன்னது சாமிய!”

“நீ என்னமோ சிவனேன்னு இருந்தாலும் ஏன் ஜீவன் ஒன்னிட்டுல்ல இருக்கு!”

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் படபடப்புடன் குடிசையை நோக்கி ஓடலானாள். குடிசைக்குள் வந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

“ஏய்… அளாத!”

“இல்ல… என்னோட ஆத்தாளும் போய்ச் சேர்ந்துட்டா. குடிசைல தனியா இருக்க பயமா இருக்கு.”

“ஒண்ணும் பயப்படாத. நா இருக்கேன். தாள்ப்பாள கெட்டிமா போட்டுட்டுத் தூங்கு. எங்க அப்பாரு அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுடறேன்.”

கொஞ்ச நாட்களாக அர்ச்சுனனைக் காணவில்லை. அதனால் வயதான கிழவன் மாணிக்கத்தை காவலுக்கு வைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் – திடீரென்று அவளது பின்புறம் யாரோ நிற்பது போன்ற பிரமை. திரும்பிப் பார்த்தாள்… அர்ச்சுனன்!

அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. வெட்ட வெளியைப் பார்த்தவாறு பாடினாள்.

“தண்ணி மேல போனாலும்
குடிக்கத் தண்ணி கிடைக்கல
அதுபோல
பக்கத்துலையே பாசமா இருந்தாலும்
பளகறதுக்கு ஆசையே இல்ல
நெஞ்சமெல்லாம் நீ இருக்கேன்னு
நெக்குருகி நான் நின்னாலும்
நெடுந்தூரம் போன மச்சானுக்கு
படுந்துயரம் தானா தெரியலையே
ஊரு சனம் என்ன சொல்லுமோ
பாருன்னு என்னைப் பரிதவிக்க
வெச்ச மச்சான்!
வெளியத்தான் கழுகுகள்னா
உள்ளேயும் கிழங்கழுகு
பாழுங் கெணத்துல நான்
விளுந்தப் பின்னாடி நீ
ஓடி வந்தா என்னா…
நடந்துவந்தா என்னா…
இருக்கப் போவது என்னோட
உசிரில்லா ஒடம்பு தானே…
என்னத்த செய்யப் போற?”

அவனுக்கு சிரிப்பு வந்தது. என்றாலும் அவளது பாட்டின் கனம் தெரிந்து அவளைச் சாடுகிறான்.

“அடிக் கிறுக்கி
அழிச்சாட்டிக் கிறுக்கி
ஆலமரத்தைச் சுத்திப்புட்டு
அடிவயத்தைத் தொடறவளே
அவசரம் ஏதுக்கடி
ஆயாளோடப் பேத்தியே
ஒன்ன நெனச்சியே
ஓடி ஓடி ஒளைக்கிறேன்
பின்ன எதுக்குடி
பிச்சிப் பிச்சித் திங்கறே
மச்சான் நான் வருவேன்
மருக்கொளுந்து வாசனையோட
மனம் மகிழ சனம்பார்க்க
ஊரு கூட்டி ஓலகங் கூட்டி
ஒன்ன என்னவளாக்கி
தென்னைப் புன்னை மரத்தூடே ஓடி
என்னை ஒனக்கே கொடுப்பேன்
அதுவரை மாமனுக்காக
காத்திரு மாமரத்துக் கிளியே
மச்சான் இதோ வந்துட்டேன்
அச்சாரம் போடவே
ஆடிக் களிச்சிரு
அரச மரத்தடியில்
முரசு கொட்டி ஒன்ன
முல்லை மலர் மாலையோட
மூச்சுத் திணற திணற
கட்டி அணைப்பேன்
கட்டி முத்தம் தருவேன்
உயிர் பொழச்சி இரடி
உன்மத்தம் புடிச்சவளே
ஓடி வாரேன் இதோ!”

இப்படிப் பாடியவன் “இதோ பார்… திரும்பவும் நான் படகு வாங்கற விஷயமா நாகப்பட்டினம் போற சோலி இருக்கு. சட்டுன்னு வந்துடுவேன். காவலுக்குத் தான் கிழவன் இருக்கான்லே…” சொல்லியவன் அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான்.

…………………………………………………………………………….

“எலேய்… அர்ச்சுனா! ஊருக்கு எப்படா வந்தே?” கேட்டது இன்னொரு மீன் பிடிக்காரன்.

“இப்பத்தேன் வந்தேன்… என்னோட சின்னப்பொண்ணு எப்டி இருக்கா?” இப்படி அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே…

“அடேய் அர்ச்சுனா… அங்கன என்னடா சோலி? ஒன்னோட சின்னப்பொண்ணு காவக்கார கெழவன போட்டுத் தள்ளிட்டா!”

“அய்யோ… அம்மாடீ!” என்றவன் காற்றைவிட வேகமாகச் சென்று அவள் குடிசையை அடைந்தான்.

ஊர் மக்கள் கூடியிருந்தனர்.

காவல்கார கிழவன் மாணிக்கம் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான்.

உடம்பெல்லாம் ரத்தம் தோய சின்னப்பொண்ணு காளி மாதிரி ஆவேசத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

அர்ச்சுனனைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதாள்.

அவள் சொல்லாமலேயே காமக்கிழவனை அவள் வெட்டிய காரணம் புரிந்தது.

பதட்டத்துடன் அர்ச்சுனன் அவளது கையிலுள்ள வெட்டுக் கத்தியை வாங்கிக் கொண்டான்.

“பயப்படாத… இந்தக் கொலையை நீ செய்யலப் புள்ள. நான் செஞ்சிட்டேன்னு போலீஸ் கிட்டச் சொல்றேன்.”

“இல்ல மச்சான்… நான் செஞ்சேன்னு தான் சொல்வேன்.”

“புத்திக் கெட்டுப் போச்சா ஒனக்கு?”

“இல்ல மச்சான்… நீ சொல்றாமாதிரியான வெஷயத்தை சினிமா டிராமாவிலே எல்லாம் பாத்திருக்கேன். ஆனா நா ஏன் நானே செஞ்சதா சொல்லணும்னு நெனக்கறேன்னு தெரியுமா? இந்தா மாதிரியான ஆம்பளைங்கள தயவு தாட்சணியம் இல்லாம பொம்பளைங்க என்ன மாதிரி தகிரியமா வெட்டிச் சாக்கோணம் மச்சான். அப்போதான் காமந்தக்காரனுங்க பயப்படுவானுங்க.”

“அடியே… மதி கெட்டவளே! ஒன்னப் பாத்துதான் பொம்பளைங்க இந்தா மாதிரி செய்வாங்கன்னு நெனச்சுக்காத… மானத்துக்குப் பங்கம் வர்ற போது சாதுவா இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் பொங்கி எளுந்துடுவா.” என்றவன் யாரும் எதிர்பாராத நிலையில் வெட்டுக்கத்தியை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் உடலில் செலுத்தினான்.

“இதோ… இப்போ நானும்தான் அவனை வெட்டிப்புட்டேன்!”

சின்னப்பொண்ணு கதறியவாறு… “ஐயோ, நீ ஜெயிலுக்குப் போனபின்னால பொம்பளச் சிறுக்கி எனக்கு என்னய்யா சோலி இருக்கு இந்த ஒலகத்துல?”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர்த் தலையாரி கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ சமிக்ஞையுடன் பேசினார். எல்லோரும் அவர் சொல்வதற்கு சரி… சரி… எனத் தலையாட்டினர்.

“மாணிக்கம் கெட்டவன்தான்னாலும் அவன் உயிர் துடிக்க நாம பாத்துக்கிட்டிருக்க முடியாது.” என்று சொல்லியவாறு தலையாரி வெட்டுக் கத்தியை எடுத்து இன்னும் கூட உயிர் போகாமலிருந்த மாணிக்கத்தின் உடலை வெட்ட முற்பட, அப்போது குறுக்கிட்ட ஒரு இளைஞன் “ஐயா, எப்ப பதவி கிடைக்கும்… கிராமத்தையே கொள்ளை அடிச்சுடலாம்னு நினைக்கிறவங்க மத்தியில நீங்க பொடம் போட்ட தங்கமா எங்களுக்குக் கிடைச்சிருக்கீங்க. இந்த கிராமத்துக்கு நீங்க வேணுமய்யா… இதோ நாங்க இப்போ ஒவ்வொருத்தரும் கொண்டாந்திருக்கிற வெட்டருவாளைக் கொண்டு மாணிக்கத்தின் உடலை கூறு போட்டுடறோம்…” என வேறு சில இளைஞர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர்.

துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தின் உயிர் மொத்தமாக பிரிந்தது.

இப்போது தலையாரி பேசினார். “அர்ச்சுனா… நீயும் சரி, சின்னப்பொண்ணும் சரி… யாரும் இந்தக் கொலைய செய்யல… ஊரே செஞ்சிருக்கு. வள்ளுவச் சாமியே நம்ப பாட்டன் பூட்டன் காலத்துலேயே சொல்லிப்புட்டாரு… நல்ல காரியத்துக்கு பொய் சொன்னா தப்பில்லையாம். இப்ப இல்லனாலும் சடுதியில நீங்க ரெண்டுபேரும் கல்லாணம் கட்டி வாளறதுக்கு நம்ம ஊரு சனங்க மட்டுமில்ல… நம்ம ஊரு குலதெய்வம் மகமாயியும் உங்கள காப்பாத்துவா…”

அர்ச்சுனன் ஆதுரத்துடன் சின்னப்பொண்ணுவின் கையைப் பிடித்து நிற்க… போலீஸ் வேன் வந்து நின்றது!