எங்கள் காலத்தில் ஐந்து வயது நிறைவடைந்த பிறகுதான் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் என்னையும் என் பெற்றோர் சேர்த்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே ஆர்வமிகுதியால் ஒரு சிறுகதை எழுதி அதனால் நான் கந்தலாகிப் போன கதைதான் கீழே வருவது!
என் தந்தை தான் தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். அந்நாளில் அரசியல் முதற்கொண்டு உலக நடப்புகளை எங்களிடம் உரையாடுவார்.
வாரப் பத்திரிகைகளை படிக்கும் பழக்கம் எங்களது சீனு அண்ணாவினால் தான் ஏற்பட்டது.
பத்திரிகைகள் வந்த உடனேயே யார் முதலில் படிப்பது என்பதற்காக என் அக்கா சாந்தாவிற்கும் அண்ணன் விஜிக்கும் எனக்கும் இடையே பலத்தப் போட்டியே நடக்கும். சில சமயம் சீட்டுக் குலுக்கிப் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அதற்குப் பிறகு அங்கே-இங்கே என்று பத்திரிகை விழுந்து கிடப்பதைப் பார்த்து என் அம்மா “வந்தப்போ இதுக்கு இருந்த வாழ்வென்ன… இப்போ இருக்கற நெலமை என்ன!” என்று அங்கலாய்ப்பார்.
இப்படியாகப் பத்திரிகைகள் படித்ததின் விளைவாக என்னுள் புகைந்து கொண்டிருந்த கதை எழுதும் ஆர்வம் நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, நானா சும்மா இருப்பேன்? பேனாவை எடுத்தேன். என் கற்பனைகளை கதை மாலையாகத் தொடுத்தேன். அந்த மாலையை அப்படியே கசங்காமல் உதிராமல் ‘குமுதம்’ இதழுக்கு அனுப்பி வைத்தேன்.
அப்போது எனக்கு வயது பன்னிரண்டு தான்!
சில நாட்கள் சென்றன…
“போஸ்ட்!”. திடீரென்று ஒரு குரல்.
என் தந்தை தான் அதை வாங்கினார். என் நல்ல காலம், அம்மா உள்ளே ஏதோ வேலையாக இருந்தார்.
“என்னம்மா இது?” என்று சொல்லியவாறே அந்தக் கவரை என்னிடம் கொடுத்தார். கவரின் மேலேயே(!!) இருந்த ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற முத்திரை என்னைப் பார்த்துச் சிரித்தது!
நான் படபடப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்ட போது, என் தந்தை திரும்பவும் கேட்டார்…
“என்னம்மா அது… ராணி?”
“இல்லப்பா… (தயங்கியவாறு)… நான் ஒரு கதை எழுதி குமுதத்துக்கு அனுப்பியிருந்தேன்… அதைத் திருப்பி அனுப்பி இருக்காங்க.” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு உள்ளே போக முயற்சித்தேன்.
“கதையா? எங்க, குடு பாக்கலாம்!”
‘பார்க்கலாம்’ என்பது அவர் வார்த்தையில் ‘படிக்கலாம்’ என்று அர்த்தம் என்பது அவர் படிக்க உட்கார்ந்தபோது தான் எனக்குப் புரிந்தது!
சட்டதிட்டமாக உட்கார்ந்து கண்ணாடிப் போட்டுக்கொண்டு நிதானமாக அவர் வாசிக்க ஆரம்பித்த போது… சத்தியமாகச் சொல்கிறேன், நான் பட்ட அவஸ்தை அதற்குப் பிறகு நான் குழந்தை பெற்றபோது ஏற்பட்டத் தவிப்பைவிட சொல்லமுடியாத அவஸ்தை… அவஸ்தையிலும் அவஸ்தை.
‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற வாசகத்தில் அவர்கள் வருந்துகிறார்களோ இல்லையோ, அதைப் பெறுகின்றவர்கள் வருந்துகின்ற வருத்தம் இருக்கிறதே… சொல்லி மாளாது, சொன்னால் புரியாது!
என் தந்தை ‘படிக்கப்படிக்க’ என் நெஞ்சு ‘படபட’வென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.
வீட்டிலுள்ள ஹாலுக்கும் நடைக்கும் என்று மாற்றி மாற்றி திரிந்துகொண்டிருந்தேன். ஐயோ! இந்தக் கதையைப் படித்தால் அப்பா… என்னைப்பற்றி என்ன நினைப்பார்? கதையில் வரும் கதாநாயகியைப் போல்தான் நானும் என்று நினைத்து விடுவாரே! சத்தியமாக நான் அப்படி நடக்க மாட்டேன் என்று அவருக்கு எப்படிச் சொல்வது? யார் சொல்வது? அல்லது எப்படிப் புரியவைப்பது?! மேலும் நான் எப்படிப்பட்ட கதையை எழுதியிருக்கிறேன் என்பது என் அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான்… என் தாவு தீர்ந்துவிடும்! உயிருக்குயிரான என் அம்மா என்னைக் கொன்றே போட்டுவிடுவாரே! ஐயோ கடவுளே! நான் தெரியாமல் இப்படி ஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு. சத்தியமாக இனிமேல் நான் இந்த மாதிரி கதையெல்லாம் எழுதமாட்டேன். விநாயகா – ஒரு இரண்டணாவுக்கு (அந்தக் காலத்தில் அதிக காசுதான்!) கற்பூரம் வாங்கி உனக்கு ஏற்றிவிடுகிறேன்! (இந்த மாதிரி இரண்டணா கற்பூரங்கள் விநாயகருக்கு நான் நிறைய பாக்கி வைத்திருக்கிறேன்!)
அப்பா படித்து முடித்து விட்டாரா என்று மெல்ல எட்டிப் பார்த்தேன். ஊஹூம். அவர் படித்தார்… படித்தார்… படித்துக்கொண்டே இருந்தார். நிச்சயாமாக நான் தொடர்கதை எழுதவில்லை… சிறுகதைதான் எழுதியிருந்தேன். நெஞ்சு படபடக்க திரும்பவும் திரும்பவும் தவிப்புடன் அங்கேயும் இங்கேயும் நடக்கத் தொடங்கினேன்.
நடுநடுவில் என் அம்மா ஏதோ பேசினார். இப்போது நினைவில் இல்லை! அப்போதும் என் நினைவில் இருந்திருக்காது! ஏனெனில் நான் அரண்டு மிரண்டு போயிருந்த நேரம் அது.
திரும்பவும் என் கற்பனைகள் என்னை கலங்கடித்தன. என் தந்தை நான் எப்படிப்பட்ட சிறுகதை எழுதியிருக்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது திரைப்படம் போல் விஷூவலாக நான் பார்க்க முடிந்ததில் சின்னாபின்னமாகிப் போனேன்.
என் தாய் ஓர் அற்பப் புழுவாக என்னைப் பார்ப்பது போலவும் ஏகத்துக்கும் என்னை ஏசுவது மாதிரியும் கண்டு திண்டாடிப் போனேன்.
ஏனெனில் சாதாரணமாக தந்தை எங்களையெல்லாம் எப்போதுமே எதுவும் கேட்கமாட்டார். கண்டிக்க மாட்டார். அவரின் உருவமும் ஒரு மரியாதைக்கான உருவமாக இருக்கும். அந்தக் காலத்திலேயே அவரை ‘ஜென்டில்மேன்’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பிற்காலத்தில் மெத்தை போட்ட வில் வண்டியில் அவர் கம்பீரமாக ஏறி அமர்ந்து செல்வதைப் பார்க்கவே அழகாக இருக்கும். வில் வண்டியின் சத்தம் மத்தியான நேரங்களில் கேட்டாலே பெரும்பாலும் சரியாக மணி ஒன்றரை இருக்கும் என்று என் பள்ளித் தோழிகள் சொல்லும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். தவறாமல் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொள்வதைப் பார்த்து ‘நம்ப எம்.ஜி.ஆர். போகிறார்ப்பா…’ என்பார்கள். விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்துடன் நிமிர்ந்தப் பார்வையோடு குடும்பச் சண்டைகளை நொடிப்பொழுதில் தீர்த்து வைப்பதிலாகட்டும், ஏழைகளுக்கு பகட்டின்றி கல்வி தர முயன்றதாகட்டும், பதவிகள் தேடிவந்த போதும் அதை மறுத்ததாகட்டும், தருமத்தை எங்கள் தலையில் ஏற்றியதாகட்டும், எல்லா விதத்திலும் ஓர் ஒப்பற்றத் தந்தையாக இருந்து எல்லா பண்புகளையும் அன்புகளையும் நாங்கள் அரவணைக்கக் காரணமானவர். ஆரம்ப காலங்களில் என் தந்தை நீதிக் கட்சியில் (Justice Party) இருந்து, பின் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தைப் பெரியார் அவர்களிடம் இருந்து பிரிந்த உடனே 1949-ல் வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பட்டி தொட்டியெல்லாம் திரண்டுவரும் அளவிற்கு நண்பர்கள் திரு.தரும கவுண்டர், திரு. பொன்னுசாமி கவுண்டர் அவர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் மாநாடு நடத்தியவர்! மேடையில் நகைச்சுவை வேந்தர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கடத்தைத் தட்டிக்கொண்டே பாடியது நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் காலத்திலேயே குடுமி தேவையில்லை என்று கிராப் வைத்துக்கொண்டவர்!
அதனாலேயே இப்படிப்பட்ட தந்தையின் மதிப்பில் நான் குறைந்துவிடுவேனோ என்ற தவிப்பு என்னைத் தடுமாறச் செய்தது.
என் அம்மா அப்படியே அப்பாவிற்கு நேர் எதிர். கொளுத்திப் போட்ட ஊசிப் பட்டாசுதான்! படபடவென்று வெடிப்பவர். அப்போதைக்கு அப்போதே பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்! முகத்துக்கு நேராக எதையும் கேட்டு எகிறிவிடுவார்! அந்தக் கால பெண்மணி என்பதால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். குற்றம் செய்தவர் யாராயினும் குற்றவாளிக் கூண்டில் நின்றே ஆகவேண்டும். அன்பை ஆறாக… இல்லை இல்லை… கடலாக… இல்லை இல்லை… வானமாகக் காட்டித் திக்குமுக்காட வைப்பவர். அவர் மடியில் நாங்கள் புரண்ட காலத்தை மறக்கமுடியுமா? நான் எம்.ஏ. படிக்கும்போது கூட எங்கள் ஐந்து பேருக்கும் சோறு ஊட்டியவர். ஆனால் தவறு என்று வரும்போது ரொம்பவுமே ஸ்ட்ரிக்ட் ஆனவர்.
ஹூம். இந்தச் சிறுகதையை நான்தான் எழுதினேன் என்று தெரிந்தால் அவர் எவ்வளவு வருத்தப்படுவார் என்பதுடன்… வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் முதுகில் ‘டின்’ கட்டிவிடுவார் என்ற பயமும் ஆட்டிப்படைத்தது!
“எப்படியெல்லாம் வளர்த்தேன்… இப்படி எழுதிவிட்டாயே…?” என்று நினைப்பதுடன் விடமாட்டாரே… “எப்படி இப்படி எழுத உனக்கு மனத்துணிவு வந்தது?” என்று வேறு கேட்பாரே… இதற்கு நான் என்ன பதில் சொல்வது! எப்படிச் சொல்லப்போகிறேன்? என்னால் நிச்சயமாக உண்மையான பதிலைச் சொல்லமுடியும்… சொல்லுவேன்… ஆனால் அம்மா அதை ஏற்றுக்கொள்வாரா?
அது கிடக்கட்டும். அப்பா படித்து முடித்துவிட்டாரா… எட்டிப் பார்க்கிறேன்! ம்ஹூம்… இன்னும் முடிக்கவில்லை. ‘ஐயோ… அப்பா! என்னப்பா… எழுத்துக் கூட்டியா படிக்கிறீங்க… சீக்கிரம் படிங்களேன்… என் கஷ்டம் எனக்கு. அவர் சரியாகத்தான் படித்துக்கொண்டிருந்தார்!’
திரும்பவும் திரும்பவும் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து என் கழுத்து ஒட்டகச் சிவிங்கி போல் அப்போது நீண்டிருக்குமோ?
அப்பாடா! ஒருவழியாக படித்து முடித்து விட்டார்! ஆஹா… என்ன மகிழ்ச்சி! விறுவிறுவென்று அவரை நோக்கிச் சென்றேன்.பலிஆடுபோல் இருந்தேன். என்ன சொல்லப் போகிறாரோ என்று திருதிருவென்று முட்டைக் கண்கள் பிதுங்க விழித்தவாறு நிற்க… அவர் “இந்தாம்மா!” என்று கதைத் தாள்களைக் கொடுத்துவிட்டு, இயல்பாக… மிகவும் இயல்பாக… அவரது வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்!
நான் திகைத்து நின்றேன். என்னால் நம்பவே முடியவில்லை!
அன்றைக்கு மட்டுமல்ல… அதற்குப் பிறகு வந்த நாட்களில் கூட அவர் அந்தக் கதையைப் பற்றி ஒன்றுமே கூறவுமில்லை கேட்கவுமில்லை. அப்படியும் என்றோ ஒருநாள் என் அம்மாவிடம் இதைச் சொல்லப் போகிறார்… அதனால் பூமி கிடுகிடுக்கப் போகிறது என்று பலநாட்கள் காத்திருந்தேன்.
ஊஹூம். ஒன்றுமே நடக்கவில்லை!
அதை நினைக்கும் போதெல்லாம் என் தந்தை உண்மையாகவே ஒரு ‘ஜென்டில்மேன்’ தான் என்று நினைத்து மகிழ்வதுண்டு.
சரி… ஒரு சின்னக் கதையை எழுதிவிட்டு நான் ஏன் இப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டேன்?
அப்படி என்னதான் அந்தக் கதையில் இருந்தது?
இருபது நூறாண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் காதல் திருமணங்கள் கிழிந்த நிலையில் இருக்கும்போது… சுமார் ஓர் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன்பே காதலர்கள் குடும்பத்தின் அனுமதி கிடைக்காததால் ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் அவர்களாகவே சென்று திருமணம் செய்துக்கொள்வதுபோல் கதை எழுதியிருந்தேன்! இது இப்போது மிகச் சாதாரண ஒரு கதைதான். ஆனால் அப்போது அது தலையைப் பலியாக எடுக்கக் கூடிய கதை! அக்காலத்தில் குமுதத்தின் தாக்கம் எனக்கு அதிகம் இருந்தது. ரெஜிஸ்ட்ரார் திருமணம் என் குடும்பத்தில் உறவினர் ஒருவர் அப்போது செய்திருந்தார். அதைக் கதையில் சேர்த்துக் கொண்டேன். அப்படியே ஈயடிச்சான்-காப்பி மாதிரியான ஒரு கதை!
புரட்சிகரமாக கதை எழுதிவிட்டதாக நினைப்பு! இன்னொன்று… யாருக்கு தெரியப் போகிறது என்று நினைத்தேன்! கதையைத் திருப்பி அனுப்புவார்கள் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது!
முக்கியமாக… நான் அந்தக் கதையில் வரும் கதாநாயகி போல் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்வேன் என்று பெற்றோர்கள் நினைத்துவிடுவார்களே என்பதுடன்… பன்னிரண்டு வயதிலேயே இப்படி எழுதிவிட்டேனே என்று என் அம்மா நினைத்து விடுவார் என்ற கவலை தான் என்னை வாட்டி எடுத்துவிட்டது! நல்ல காலம். என் தந்தை என்னைக் காப்பாற்றி விட்டார்! (ஏழு வயதிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா… நீங்கள் நினைப்பதுபோல் அது காதல் கதையல்ல, துப்பறியும் கதை!)
இப்போதெல்லாம் சிறுவயதிலேயே எழுத்தாளர் ஆவதெல்லாம் போற்றப்படுகிறது. போதிய வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
விளையும் பயிரின் ஆர்வம் தெரியாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்களே… பாவம் நான்!
‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்கிற முத்திரையுடன் கதைகள் திரும்பி வந்தால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளர் ஆகப்போகிறீர்கள் என்பதற்கு அதுதான் முதல் படி!
ஏறுங்கள்… நீங்களும் ஏறுங்கள்!