இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இருக்கு ஆனால் இல்லை என்பது போல்… யாருக்கும் சொந்தமில்லை என்று ஒரு சாராரும், எல்லோருக்கும் சொந்தம் என்று மறுசாராரும் சொல்லலாம்.
நான் மறுசாரார் பக்கம்! ஆமாம்… உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்… ஏன், உயிருள்ள சகல உயிரினங்களுக்கும் இந்த உலகம் சொந்தம்.
ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?
உணவு.
உடை.
உறையுள் எனப்படும் வீடு.
வசதியுள்ளவர்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருப்பதில்லை.
ஓரளவுக்கு உணவு, உடை, அரசாங்கங்களின் உதவியாலோ அல்லது நல்ல உள்ளங்களின் உதவியாலோ கிடைத்துவிடுகிறது.
ஆனால் வீடு?
வெயில், மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், மனக்கொடுமையாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வீடு தேவை தானே?
இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
எங்கே காலி இடம் உள்ளதோ அங்கே தற்காலிகமாக குடிசை போட்டுக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். இவர்களைத் தான் நாம் புறம்போக்கு நிலத்தில் வாழ்கிறவர்கள் என்று சொல்கிறோம்!
இதில் இரண்டு வகையினர்.
பலர் – பல வருடங்களாக இருப்பவர்கள்.
சிலர் – சில வருடங்களாக இருப்பவர்கள்.
எப்படியோ, கால் வயிறு, அரை வயிறு உண்டு, அரை குறை ஆடைகளையாவது குழந்தைகளுக்கு அணிவித்து, முழு வயிறு சாப்பாடு தந்து, முடிந்தவரை பள்ளிக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பார்கள்.
கேட்டுப் பாருங்கள்… பெருமையாக “எம்புள்ள அஞ்சாப்பு படிக்குதான்” என்பார்கள்.
ஏனெனில் இந்தக் காலத்தில் கல்வியின் முக்கியத்துவம் கற்றோருக்கு மட்டுமல்ல, கஞ்சி குடிப்பவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை! இருப்பதை வைத்துக்கொண்டு இன்பமாக இருப்பவர்கள்… ஆசை உண்டு… ஆனால் பேராசை கிடையாது.
விடுமுறை நாட்களில் கருவாட்டுக் குழம்போ அல்லது நெத்திலி மீன் குழம்போ, சாம்பாரோ வைத்துச் சாப்பிட்டு விட்டு, குறைந்த கட்டணத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு, மறுநாள் வாரத்தின் முதல் நாளை (அது தான் திங்கட்கிழமையைச் சொல்கிறேன்) கொண்டாட (திண்டாட) கிளம்பி விடுவார்கள்.
இதோ… இப்படி எதற்கும் கவலைப்படாமல் இருப்பவர்கள் வாழ்வில் திடீரென்று ‘இடி’ விழுகின்றது…
என்ன அது?
திடீரென்று காவலர்கள் திபு திபுவென்று அவர்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி நிற்கிறார்கள்…
கோட்டு சூட்டு போட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரிலும் ஜீப்புகளிலும் வந்திறங்குகிறார்கள்…
அதில் ஒருவர் கேட்கிறார்… “யாருப்பா இங்கே… குருங்கிறது?”
கூட்டத்திலிருந்து ஒரு குரல், “சார்… எம் பேர் தான் குரு!… இன்னா சார் வெஷயம்?”
“ஓ… அப்படின்னா… நீங்க தான் இங்க இருக்கிறவங்களுக்கெல்லாம் குருவா?”
“சார்… நா… வந்து…”
“அதாம்பா, தலைவனான்னு கேக்கறேன்…”
“ஆமா சார்!”
“அரசாங்கத்தில இருந்து உத்தரவு… இதுவரைக்கும் இந்த இடத்தைக் காலி பண்ணச் சொல்லியும் நீங்கள்ளாம் காலி பண்ணல… அதனால இப்ப… (மென்று முழுங்கிக்கொண்டே சொல்கிறார்) உங்க வீட்டையெல்லாம் இடிக்கப் போறோம்!”
கூட்டம் பதறுகிறது…
கூட்டத்தில் ஒரு வயதானப் பெண்மணி, “அய்யா… தருமதொரைங்களே… இப்டி துடுதிப்புன்னு சொன்னாக்கா நாங்க இன்னா செய்வோம்… நாங்க ரொம்ப வர்ஷமா கீறோம்… அத்னால இது அப்டியே கீட்டோம், நாங்க…” என்று அவர் முடிப்பதற்குள்… “இவங்கள்லாம் இப்படித்தாம்பா, சொன்னப் பேச்சை கேக்கமாட்டாங்க… நீங்க இடிக்க ஆரம்பிங்க” என்று ஆபீசர் சொன்னவுடன், புல்டோசர்கள் கட்டிடங்களை இடிக்க ஆரம்பிக்கின்றன…
அதற்குள் பதறிய குரு சொல்கிறான்… “சார், நீங்க சொல்றா மாதிரி எங்களாண்ட யாரும் சொல்லிக்கிலே… இதோ பாரு, ஆபீசர் சாரு… தம்மாத்தூண்டு டையிம் குடுத்துவுடு… அப்பால பாரு… நயினா, நாங்க ஒட்டுக்க காலி செஞ்சிடறோம். ஆனா அதுக்கு மொத வேலையா நீங்க எங்ளுக்கு வேற வால்றதுக்கு எடம், பூவாவுக்கு வலி(ழி) செஞ்சி…” என்று அவன் முடிக்கும் முன்பே… கட்டிட இடிப்புகள் தொடர்கின்றன…
கூட்டம் கதறுகின்றது… மண்ணில் புரண்டு புரண்டு அழுகின்றது…
பாவம், தலைவனான குருவுக்கும் தெரியாது வாரத்தின் முதல் நாளான திங்களன்று அவனுக்கு ‘குருப் பெயர்ச்சி’ என்பது!
இனி என்ன செய்யப் போகிறான் அவன்?
அவன் கேட்டதில் ஏதாவது தவறு உள்ளதா?
வசதியானவர்களுக்குக் கூட காசு கொடுத்தாலும் உடனே வீடு கிடைக்காதே… இந்த நரகத்தில்!
இந்த நேரத்தில் தலைவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட குரு, முதலில் இந்த இரவைக் கழிக்க கூட்டத்தினருக்கு எப்படி உதவி செய்யப் போகிறான்?
என்ன வழி என்று தெரியாமல் திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறானே…
இம்மாதிரியானச் செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யாருக்கோ, எங்கேயோ நடக்கின்றதைப் பற்றி நமக்கென்ன கவலை?
விடுங்கள்… நாம் சாப்பிடலாம், தூங்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், கடற்கரை போகலாம், திரைப்படம் பார்க்கலாம்…
ஏன், வெட்டியாகவே கூட இருக்கலாம்…
நம்மைப் பாதிக்காதவரை எல்லாம் சுகமே!
ஆனாலும் மனம் கேட்கவில்லையே. இதற்கு என்ன தீர்வு?
ஏழைகளுக்கு தங்க இடம் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எவ்வளவோ நல்லதைச் செய்துகொண்டிருக்கிற அரசு இதையும் கவனத்தில் கொண்டால் ‘எங்களுக்கு இடம் இல்லை’ என்று சொல்வதையே இடமில்லாமல் ஆக்கிவிடலாம்.
அரசு இவற்றைச் செய்யாதா என்ன?
நிச்சயம் செய்யும்!
நம்புவோம்!!