1964-ம் வருடம். வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். மொத்தமே அந்த வகுப்பில் ஒன்பது பேர் தான்! அவ்வகுப்பில் என்னுடன் படித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கனகமணியை ரயிலில் ஏற்றுவதற்காக நானும் எனது மற்றொரு தோழி உமாவும் சேர்ந்து காட்பாடி ஜங்ஷனுக்குச் சென்றோம்.
அந்தக் காலத்தில் பட்ட வகுப்பில் முதலாண்டு படிப்பவர்களுக்கு பல்கலைக்கழகத் தேர்வு கிடையாது. எல்லோருக்கும் ‘பாஸ்’ போட்டு விடுவார்கள். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு தான் தேர்வு உண்டு.
அதனால் முதலாம் ஆண்டு முழுவதும் ஆட்டம் பாட்டம் தான்.
பட்ட வகுப்பு என்பதால் வானத்தில் ‘பட்டம்’ பறப்பது போல் பறந்துக் கொண்டிருப்போம்.
அந்தக் காலத்து திரைப் படங்களில் வருவது போல் குதிரை வால் கொண்டை, கூலிங் கிளாஸ், இரண்டு அங்குல உயரமுள்ள குதிகால் உயர்ந்த ‘பாட்டா’ செருப்புடன் (மேலே வெள்ளையாக இரண்டு பட்டைகளுடன் இருக்கும், மாடு போல் உழைக்கும்) அலைந்துக் கொண்டிருப்போம்.
ஏன்?
ஏனென்றால் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தையே முழு நேர படிப்பாக எடுத்துப் படிக்கிறோம் இல்லையா… அதனால்தான்!
தலையில் கொம்பு முளைக்காத குறைதான்!
சரி. விஷயத்திற்கு வருகிறேனே.
மேற்சொன்ன அலங்காரங்களுடன் ஆளுக்கொரு ஹாண்ட்பேக்கை கையில் எடுத்துக்கொண்டு காட்பாடி ஸ்டேஷனில் சென்னையை நோக்கிச் செல்லும் ரயில் வருகின்றவரை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே இங்கே என்று ஸ்டேஷனில் அலைந்துக்கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரம் அரட்டை அடித்தோம். பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடித்தோம். காத்துக் கொண்டிருந்த பயணிகள் எங்களைப் பார்ப்பதைப் பார்த்து பெருமை பிடிபடவில்லை… அவர்களை நோக்கி அனாவசியப் பார்வை வீசினோம்.
பாமர மக்கள் முன்னால் நாங்கள் தான் அறிவுக் களஞ்சியங்கள் என்று நின்றோம்.
அப்பாடா… எப்படியோ பிளாட்ஃபாரம் அதிர அதிர ரயில் வந்து நின்றது!
கனகமணி ரயிலில் ஏறி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து விட்டாள். ஒரு பத்து நிமிடம் அவளிடம் பேசிக்கொண்டிருந்திருப்போம்.
ரயில் புறப்படத் துவங்கியதும் கனகமணியிடம், “பத்திரமாகப் போய்ச் சேர்” என்றவர்கள் கடைசியாக “ஹாவ் எ நைஸ் ஜர்னி” (Have a nice journey) என்று கையசைத்தவாறு நின்றோம். எதுவரை? ரயிலின் வால் தெரிகிறவரை!
அவளுக்கு ‘நைஸ் ஜர்னி’ சொன்ன எங்களுக்குத் தெரியாது நாங்கள் ‘பேட் ஜர்னியை’ (bad journey) நோக்கிச் செல்கிறோம் என்று.
பிளாட்ஃபார முடிவில் இருக்கிற படிகளை நோக்கி ஏறும் போது பாதி வழியில் தான் கவனித்தோம்… படி முடிகின்ற இடத்தில் டிக்கட் பரிசோதகர் நின்று கொண்டு டிக்கெட் கலெக்ட் செய்து கொண்டிருந்தார்!
அறிவுக் களஞ்சியமான(?) நாங்கள் பிளாட்ஃபார டிக்கட் வாங்க மறந்துவிட்டோம் என்பதும் எங்களுக்கு முன்னால் போன பெரும்பான்மையான பாமரர்கள்(!) எல்லோரும் டிக்கட் வாங்கியிருக்கிறார்கள் என்பதும் அப்போது தான் புரிந்தது!
இரண்டு பேருக்குமே நெஞ்சு ‘படபட’வென்று அடித்துக்கொண்டது.
ஆட்டம் பாட்டம் அடங்கிப் போனது.
துச்சமாகப் பார்த்தது துயரமாகிப் போனது. மிச்சம் என்ன இருக்கப் போகிறது? எங்கள் மானம் கப்பல் ஏறப் போகிறது ரயில் வழியாக என்பது திண்ணமாக, திண்டாடித்தான் போனோம்!
ஊரில் பிரபலாமாக உள்ள என் தந்தையை நினைத்ததும் வேர்த்துக் கொட்டியது.
வடஆர்க்காடு மாவட்டத்தின் தலைமை ஊர் வேலூர் என்பதால் எங்களது ஊரான திருப்பத்தூரிலிருந்து நிறைய பேர் பல வேலைகளை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து வழியாக வேலூர் வருவதுண்டு. அவர்களில் யாராவது ஒருவர் பார்த்தால் கூட போதும். என் தந்தையிடம் சொல்லி விட்டால், ‘என் பெண் டிக்கட் வாங்காமல் பரிசோதகரிடம் தலை குனிந்து நின்றாள்’ என்று தந்தை வருத்தப்படுவதுடன், தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டோமே என்ற எண்ண அலைகள் ஏழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அவசர அவசரமாக போட்டிருந்த கூலிங் கிளாஸ்களைக் கழட்டி கைகளில் வைத்தவாறு… தயங்கிய வாறு… இரண்டு பேரும் முழி முழி என்று முழித்தவாறு பரிசோதகரை நோக்கி நடந்தோம்.
ஏற்கனவே எனக்கு முட்டைக் கண்ணி என்று பெயர்… எப்படி முழித்திருப்பேன் என்று பாருங்கள்! ஒருவகையில் என் கண்களே பரவாயில்லை… முட்டைக் கண்ணி என்ற பெயரோடு போனது…
என் தோழி உமாவின் கண்களைப் பார்த்தீர்கள் என்றால் அவளது கண்களுக்கு முன்னால் என் கண்கள் சிறியது தான் என்று ஒத்துக் கொள்வீர்கள். ஆமாம்… உண்மையத்தான் சொல்கிறேன்… இதோ… ‘இப்போதே நான் வெளியே வந்து விழுந்து விடப்போகிறேன்’ என்று சொல்லும் அளவிற்கு நம் பழைய காலத்து நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் கண்களைப் போன்று பெரிய்ய்ய்ய்ய்ய்ய சோடா கோலிக் குண்டுக் கண்கள் அவளுடையது!
பரிசோதகர் பார்த்துப் பயந்து போயிருப்பாரோ? உம்ஹூம். அது தான் இல்லை!
ஒரு சமயம் அப்படியே பின்வாங்கி ஓடிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது! ச்சீ… கேவலம் அது. வருவது வரட்டும் என்று மெல்ல பரிசோதகரிடம் போய் நின்றோம். “டிக்கட்” என்று அவர் கேட்டார். மென்று முழுங்கியவாறு “நாங்கள் வாங்கலை” என்றோம்.
“என்னது, வாங்கலையா?” என்னமோ நாங்கள் வெடிகுண்டு போட்டது போன்ற அதிர்ச்சியைக் குரலில் காட்டினார்!
நாங்கள் பதில் சொல்லவில்லை.
“எங்கிருந்து வர்றீங்க?” என்று திரும்பவும் கேட்டார்.
“ஃபிரண்ட ரயில் ஏத்த வந்தோம்”.
“டிக்கட் வாங்கலைனா எப்படி? எங்க… ஜோலார்பேட்டைலருந்து வர்றீங்களா? அங்கிருந்து காட்பாடிக்கு வர்றதுக்கு எவ்வளவு சார்ஜோ அதுதான் ஃபைன் தெரியுமா?” என்றவாறு எங்களை நக்கலாகப் பார்த்தார்.
பதறிய நான், “ஐயய்யோ ஜோலார்பேட்டையிலருந்து வரலை, நாங்க முன்ன சொன்ன மாதிரி சத்தியமா ஃபிரண்ட ரயில் ஏத்தத் தான் வந்தோம்”, என்றேன்.
முன்பே நாங்கள் பிளாட்ஃபாரத்தில் சுத்திக் கொண்டிருந்ததை அவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் தெரியாதது போல் பேசியதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இடையிடையே எங்கள் ஊர்க்காரர்கள் யாராவது தெரிகிறார்களா என்று என் கண்கள் அலை மோத, பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று, “சரி சார், நாங்க செஞ்சது தப்புதான். ரெண்டு பேரும் ஃபைனை கட்டிட்றோம். ஏய் உமா! பத்து ரூபா குடு டீ” என்றவள், என் ஹாண்ட்பேக்கில் இருந்து இன்னொரு பத்து ரூபாயையும் எடுத்து மொத்தமாக இருபது ரூபாயை அவரிடம் நீட்டினேன். அந்தக் காலத்தில் அந்தப் பணமே கொஞ்சம் அதிகம்தான்!
கொடுத்தப் பணத்தை வாங்காமல், “ரயில் ஏத்தத்தான் வந்தீங்க என்று எனக்கும் தெரியும்… காலேஜில படிச்சா மட்டும் போதாது… பிளாட்ஃபார டிக்கட் வாங்கவும் தெரியணும்… தெரியும்ல? சரி சரி… போங்க”, என்றாரே பார்க்கலாம்!
நாங்களும் ‘சரி சரி’ என்று ‘பூம் பூம்’ மாடு மாதிரி தலையாட்டிவிட்டுத் ‘தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’ என விட்டால் போதுமென்று தலைதெறிக்க ஓடினோம்!
கல்லூரி விடுதிக்கு வந்த பிறகு, எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்த கதை… அது பெரிய கதை.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் (அப்போது குரோம்பேட்டை பெண்கள் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தாள் கனகமணி) கனகமணி என் வீட்டிற்கு வந்த போது என் பெண்களிடம் இதைப் பற்றிப் பேசிச் சிரித்தது நினைவுக்கு வருகிறது.
ஆனால் கடைசி வரை என் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசாத திருட்டுக் கழுதை தான் நான்! மேலே உள்ள என் தந்தை என்னை மன்னிப்பாராக!
இதனால் நாம் அறிவது யாதெனில் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள் அதாவது ‘பிளாட்ஃபார டிக்கட்’ இல்லாதவர்கள், ஃபைன் கட்டவேண்டும்… சில சமயம் எந்த இடத்தில் இருந்து ரயில் புறப்பட்டு வருகிறதோ, அந்த இடத்தில் இருந்து நம்மைப் பிடித்த இடத்தின் ஸ்டேஷன் தூரம்வரைக் கூட கணக்கிடப்பட்டு ஃபைன் கட்ட வேண்டி இருக்கும்.
எங்களைப் போல் தப்பித்து விட முடியும் என்று நினைத்து விட வேண்டாம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஊருக்கு யார் புறப்பட்டாலும், அவர்களை வழியனுப்ப யார் போனாலும் சரி… ‘பிளாட்ஃபாரம் டிக்கட் வாங்க மறந்துடாதீங்க’ என்று எனது நினைவூட்டலை எல்லோருக்கும் இலவசமாக செய்து கொண்டிருக்கிருக்கிறேன்!
இந்தச் சேவைக்காக எனக்கு ரயில்வே நிர்வாகம் என்ன சம்பளமா தரப் போகிறது?