சென்ட்ரல் ஸ்டேஷன்.
லண்டனில் இருந்து தோழி சாந்தா சென்னை வந்திருந்தாள்.
புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் தீவிர பக்தையான சாந்தா, பாபாவின் பிறந்தநாளன்று பெங்களூருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
சென்னை வரும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டில் தங்குவாள்.
அவளை ஷதாப்தி ரயிலில் ஏற்ற விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் நானும் எனது பெரிய பெண் கவிதாவும் சென்ட்ரலுக்குச் சென்றோம்.
அங்கே பிளாட்ஃபாரத்தில் இருந்த பெஞ்சில் நல்ல முழு மேக்கப்புடன் சிவந்த நிறமுள்ள வட இந்தியப் பெண்மணி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் கூட வாட்டசாட்டமாக அவரது கணவரும் இருந்தார்.
இருவரும் மாற்றி மாற்றி இந்தியாவில் உள்ளக் குறைகளைச் சுட்டிக் காட்டி ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
திட்டுவது சரி… ஆனால் ஏன் மெனக்கெட்டு உணர்ச்சிகளைக் கொட்டிப் பேசி உடம்பைக் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.
ரொம்ப டென்ஷனாக இருந்தார்கள்.
இடையில் அவரது கணவர் ஏதோ வேலையாக எழுந்து போனார்.
ரயில் வருவதற்கு நிறைய நேரம் இருந்ததனாலும் ஏற்கெனவே காலில் சுளுக்குடன் முந்தினநாள் காய்ச்சலும் இருந்ததால் அந்தப் பெஞ்சில் உட்காரலாம் என்று நான் போனேன்.
உட்கார்ந்தும் விட்டேன்!
ஏற்கெனவே உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சத்தமாக வசை பாட ஆரம்பித்தார். “போன என் கணவர் வந்தால் உட்கார வேண்டும். அதுமட்டுமல்ல, என் பையனும் இதோ வந்திடுவான். அதுக்காகவே நான் இந்த இடத்தைப் புடிச்சி வெச்சிருக்கேன்… உட்காராதீங்க… எழுங்க…”
இப்படி அவர் சொன்னதும் என் பெண் கவிதா “பாருங்க… எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல, இப்ப நீங்க மட்டும் தானே உட்கார்ந்து இருக்கீங்க… கொஞ்ச நேரம் உட்கார விடுங்க” என்றாள்.
“உங்களுக்கு நான் சொல்றது புரியலையா? இப்பவே என் பையனும் கணவனும் வந்தா எங்கே உட்காருவாங்க?”
நான் அப்போது குறுக்கிட்டு, “கவலையேபடாதீங்க… அவங்க வந்ததும் கண்டிப்பா நான் எழுந்திடறேன்” என்றேன்.
ஊஹூம்… அந்த அம்மா நாங்கள் சொன்னதையே காதில் போட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டே இருந்தார். அதனாலேயே நானும் விடாப்பிடியாக உடக்கார்ந்துக் கொண்டிருந்தேன்.
எங்கோ சென்ற அவரது கணவரும் பையனும் திரும்பி வந்தார்கள்.
நான் எழுந்துக் கொண்டேன்.
அப்போது பார்த்து ரயில் வந்து பிளாட்ஃபாரத்தில் நின்றது.
திடீரென்று ஓர் அதிர்ச்சி…!
ரயில் பெட்டியில் ஏறப்போன அந்த வட இந்தியப் பெண்மணி மயங்கிக் கீழே விழுந்து விட்டார்!
இதைப் பார்த்த நாங்களும் அதிர்ச்சியுற்று உடனே செயல்பட ஆரம்பித்தோம். என் பெண் கவிதா ஓடிப்போய் உடனே அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து “இதோ பாருங்கம்மா… ஒண்ணும் பதட்டப்படாதீங்க… அப்படியே மூச்சை நல்லா உள்ளிழுத்து மெல்ல நிதானமா வெளியே விடுங்க” என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போதே நான் “கவி! நான் போய் உடனே டாக்டர கூட்டிட்டு வரேன். நீயும் சாந்தா ஆன்ட்டியும் அந்த அம்மாளைக் கவனிச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகளி’ல் வந்த நடிகர் சந்திரசேகரைப் போல் காலில் முந்தின நாள் இருந்த சுளுக்கின் காரணமாக நான் ‘லொடுக்குப் பாண்டி’ நிலையில் இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது…!
நடக்கிறேன்… நடக்கிறேன்… (விந்தி… விந்திதான்!) சென்ட்ரலின் முன்பகுதி வரவே மாட்டேன் என்கிறது! அப்போதுதான் பிளாட்ஃபாரம் ரொம்ப நீ…ளம் என்பது புரிந்தது. எரிச்சலாக இருந்தது.
என்ன அவசரமாக நடந்தாலும் தூரம் விடியவில்லை.
எட்டி… எட்டிக் காலை வைத்தால் முட்டி வலிக்கிறது.
அந்த அம்மாளின் நிலையை நினைத்தாலோ பாவமாக இருந்தது.
உலகத்தில் உள்ள கடவுளரை எல்லாம் (அவர்கள் என்னென்ன வேலையில் பிசியாக இருந்தார்களோ தெரியாது!) அந்த அம்மாளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொண்டு ஒரு வழியாக அவசர உதவிக்காக இருந்த டாக்டரின் அறையை அடைந்தேன்.
அறையில் இருந்தவரிடம் நான் பதற்றமாக “ஒரு அம்மா மயக்கமா கீழே விழுந்துட்டாங்க… டாக்டர் எங்கே? சீக்கிரமா கூப்பிடுங்க. ரொம்ப அவசரம்” என்றேன்.
மாடிக்குச் சென்றுவிட்டுக் கீழே வந்தவர் சர்வ சாதாரணமாக… “டாக்டர்லாம் வரமுடியாது. வேணும்னா நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க” என்றாரே பார்க்கலாம்!
ஓர் உயிருக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை சிறிது கூட இல்லாமல், அபாய நேரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் சாவதானமாக பேசுகின்ற ஆளிடம் நானும் அதேபோல் நிதானமாகப் பேசிக்கொண்டு இருக்க முடியாது என்பதால்,”இதோ பாருங்க. நான் ஒரு பத்திரிகைக்காரி. போய் உங்க டாக்டர் கிட்ட கேளுங்க… மயக்கமா விழுந்து கிடக்கிற ஒருத்தர நீங்க இருக்கிற இடத்துக்கு எப்படி கூட்டிட்டு வரமுடியும்னு? இப்போ டாக்டரால வரமுடியுமா முடியாதா? அந்த அம்மாளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா… இந்த விஷயத்தை அப்படியே விடமாட்டேன். சீக்கிரம் மாடிக்குப் போய் டாக்டர கூட்டிட்டு வாங்க”.
நான் போட்ட சத்தத்திலும் பத்திரிகைக்காரி என்ற வார்த்தையையும் கேட்டு அடுத்த நிமிடம் டாக்டர் தட… தடவென்று மேலேயிருந்து கீழே இறங்கி ஓடி வந்தார்.
வேக… வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.
டாக்டரும் கூடவே உதவிக்கு வந்த ஆளும் என்னைத் தாண்டி வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
லொடுக்குப் பாண்டியான நான் என்ன முயற்சி செய்தும் அவர்களுடன் சமமாக நடக்க முடியவில்லை!
மனதில் இருந்த வேகத்தை உடம்பில் எவ்வளவு கூட்டிப் பார்த்தும் என் வேகம் என்னவோ ஆமையளவுதான்!
அவர்களுக்கும் எனக்கும் ஒரு நூறடி வித்தியாசம் இருந்துகொண்டே இருந்தது.
நாங்கள் செல்வதற்குள் ரயில் பெட்டியில் மயக்கமுற்ற பெண்மணியின் குடும்பத்தாருடன் என் பெண் கவிதா பேசிக்கொண்டிருந்தாள்.
டாக்டர் அந்த அம்மாளைப் பரிசோதனை செய்தார். “ஒன்றும் பயப்பட வேண்டாம். இப்போது எல்லாம் நார்மல் தான். பெங்களூர் போனதும் டாக்டரிடம் சென்று பீ.பி., சர்க்கரை இதெல்லாம் செக் செய்துக் கொள்ளுங்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை.” என்றதும் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.
நல்ல உறக்கத்திலிருந்த டாக்டர் ஏற்கெனவே கூப்பிட்டவுடன் தான் வரவில்லையே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு நன்றி சொல்லியபோது ‘அவசர காலத்தில் யார் என்ற பேதமில்லாமல் செயல்படவேண்டும்’ என்பதை நாசுக்காகவே சொன்னேன். முற்றிலும் உணர்ந்தவர் போல் கேட்டுக்கொண்டார்.
நான் அடுத்தப் பெட்டியில் இருந்த டி.டி.இ.யை அழைத்து வந்து வடநாட்டுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டி அவருக்கு நேர்ந்ததைச் சொல்லி, “தயவு செய்து இந்தப் பெட்டியிலோ அல்லது வேறு எந்தப் பெட்டியிலோ டாக்டர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உங்கள் சார்ட்டில் பார்த்துத் தப்பித் தவறி இந்த அம்மாளுக்குத் திரும்பவும் இதுமாதிரி ஏற்பட்டால் உடனே கவனியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தேன். டி.டி.இ. நல்ல மனிதர். “கவலையேபடாதீங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்தீங்க… இனிமேல் நாங்க பார்த்துக்கறோம். அதுவும் இல்லாம எந்த உதவின்னாலும் எங்கிட்ட கேக்கச் சொல்லுங்க. நான் போய் டாக்டர் யாராவது இருக்காங்களா என்று பார்த்து வைக்கிறேன்” என்றாரே பார்க்கலாம்!
எல்லாம் முடிந்தவுடன்… அந்த வடநாட்டுப் பெண்மணி, அவரது கணவர், மகன் மூவரும் நன்றிப்பெருக்குடன் என் பெண் கவிதா மற்றும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்க “ஆப் மாஃப் கர்தீஜியே… ஆப் மாஃப் கர்தீஜியே… என்றவர்கள் தொடர்ந்து… “தப்பா நினச்சுக்காதீங்க… நாங்க தப்பு செஞ்சிட்டோம். அவசரத்துக்கு நீங்க இந்த அளவு உதவி செய்வீங்கன்னு நாங்க நினைக்கலை” என்று ஆங்கிலத்தில் கூறியபோது, நான் கூறினேன், “பரவாயில்லை. உலகத்துல நமதுன்னு நினைக்கிற குழந்தைகள், பெற்றோர், வீடு, சொத்து, சுகம்னு எதுவுமே நம்ம கிட்ட கடைசி வரைக்கும் இருக்கப் போவதில்லை. இதுல நடுவுல வந்து போகிற ரயிலோ, பஸ்ஸோ, நாம உட்கார்ந்திருந்த பெஞ்சோ மட்டும் நிரந்திரமா என்ன? நிச்சயமா இல்ல… முடிந்த வரைக்கும் நாம மத்தவங்களுக்கு உதவியா இருந்தா எப்போதும் நல்லதே நடக்கும். ஒங்களையும் தப்பு சொல்ல முடியாது. ஒங்களுக்கும்… ஒடம்பு சரியில்லை போலிருக்கு… பரவாயில்லை, ஒடம்பைப் பார்த்துக்கோங்க.”
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தோழி சாந்தா, ‘அப்பாடா… எல்லாம் நல்லபடியாக முடிந்தது’ என்ற அர்த்தத்தில் பெருமூச்சுடன் கையசைக்க, ஷதாப்தி எக்ஸ்பிரஸ் புஸ்… புஸ்… என்று புகையின்றி ஸ்டேஷனை விட்டுக் கிளம்பியது.
நமக்கும் யாரிடமும் பகையில்லை!
பின் குறிப்பு: இதைப் படித்துவிட்டு வட இந்திய மக்களே இப்படித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனெனில், பிரயாணங்களில் நாம் கண் கூடாகப் பார்க்கிறோம்… தென் இந்தியர்கள் கூட டிக்கட் வாங்கிவிட்டாலே ரயிலே அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல் நினைத்துச் செயல்படுவார்கள். மனிதாபிமானம் ஈவு இரக்கம் இல்லாமல் நடப்பதைப் பார்க்கும் போது சில சமயங்களில் வட இந்தியர்களே பரவாயில்லையோ என்று தோன்றும். பொதுவாக நாம் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்!