கவிதை

நான் இல்லாமல் போய்விட்டேன்…

நீ பார்க்கும்போது வேர்க்கிறேன். பழகும்போது பரிதவிக்கிறேன். உணரும்போது உருகுகிறேன். தொட்டுவிட்டாலோ துவண்டுவிடுகிறேன். இதழ் பட்டுவிட்டாலோ இல்லாமலே போய் விடுகிறேன்!

உலகம் நம் கையில்!

நீ மானா… மயிலா? தேனா… திரவியமா? இயற்றமிழா… இசைத்தமிழா? நாடகத்தமிழா? அல்லது நான் பாடும் தேவகானமா? நீ என்னில் நான் உன்னில் எனில், இந்த உலகம் யார் கையில்?

என்னை இழந்தது…

இதென்ன தேகமா திருவாரூர்த் தேரா? இதென்ன கூந்தலா மழை மேகமா? இதென்ன கண்களா ஒளி மின்னலா? இதென்ன இதழா தேவாமிர்தமா? இதெல்லாம் கண்டு என்னை மறந்தாலும், பரவாயில்லை மீள்வேன். ஆனால்… என்னை இழந்ததுதான் இந்த யுகத்தின் சோகம்!

காதல்!

காதல் வயப்படுகையில் உலகில் எல்லாமே துச்சம்! காதலன் கைவிடும்போது உலகில் என்ன மிச்சம்? நீ தனி. அவன் தனி. மாறு… ரயிலைத் தவறவிட்டவள் மறு ரயிலில் ஏறவில்லையா?

எறும்பு

குறும்பு செய்யும் எறும்பு எனச் செயல்படு கரும்பு என மொழிந்திடு துரும்பு என நினைப்போரிடம் இரும்பு என இருப்பைக் காட்டு இனி – இவ்வுலகம் உன் கையில்!

வீழ்வதெனில்…

வீழ்வது இயல்பு. அதைவிட மீண்டும் எழுவது மிக மிக இயல்பு! பச்சிளம் குழந்தை இச்சகத்துக்கு வந்தப் பிறகு விழவில்லையா? விழுந்தாலும் திரும்பத் திரும்பப் போராடி நிற்கவில்லையா! எழு! நில்!! நட!!!

என் வாழ்க்கை…

இரு-பத்துக் கூட்டணி ஆறில் நான் ஒருத்தி (கன்னி), இரு-பத்துக் கூட்டணி ஏழில் நான் இரண்டு ஆனேன் (கணவர்) ஆண்டுகள் ஐந்தில் பெண்டுகள் இரண்டு சாதனைகளைத் தேடி ஓடியபோது வேதனைகள் எனை வேதனைச் செய உலகம் புரியாமல் தடுமாற உந்தி எழச் செய்த முயற்சி பிந்திக் கழுத்தில் ஓர் அறை விட்டு முந்திப் போ முந்திப் போ…

அடங்கு மனிதா!

உன் சம்மதமின்றி இவ்வுலகத்தில் உதித்தாய்! அதே போல்… உன் சம்மதமின்றி அவ்வுலகத்திற்குப் போகப் போகிறாய் என்பது நிதர்சனம் எனில்… இதில் என்ன ஆட்டம் பாட்டம், அடங்கு மனிதா… அடங்கு!

Page 3 of 41234