ஊடல் ஊறுகாய் அளவுதானடா!
என்ன சரசமடா உனக்கு
பெண்ணை ஆள நினைக்கிறாய்
என்னைப் பாடாய்ப் படுத்துகிறாய்
முன்னை நினைவுகள் எனைத்
தள்ள தடுமாறிப் போகிறேன்
கோபமெனில் வாய் பேசாதோ?
ஊடல் ஊறுகாய் அளவுதானடா
ஊதிஊதிப் பெரிசாக்கும் உன்
வல்லமையால் வாய்ப் பிளக்கிறேனடா!
ஊடலில் ஊஞ்சலாடியே
ஊன்றுகோல் காலம் வந்துவிடுமோ?
என்னைப் பார்… ஏகாந்த நிலையைப் பார்
ஆட்கொள்ளாமல் அவதியுண்டாக்கும்
அன்பரசா…
எனை ஆண்டுவிடு
இல்லையேல்
கண்பார்வை விட்டு ஓடிவிடு!
சர்வாங்கம்
சிறுகதை
ட்ரிங்… ட்ரிங்… ஃபோன் அலறியது.
“ஹலோ!”
“உம்… வந்து… நான் ராமபத்ரன். லண்டன்ல இருந்து பேசறேன்….”
“அடடே… சொல்லுங்கோ மிஸ்டர் ராமபத்ரன்… நான் தான் பொண்ணோட ஃபாதர் கல்யாணம் பேசறேன்… சொல்லுங்கோ…”
“ஓங்கப் பேருக்கு ஏத்தா மாதிரி நம்மப் பிள்ளைகளோட கல்யாணத்தைப் பத்தி தான் பேசலாம்னு… நாங்க அடுத்த வாரம் பெண் பார்த்துட்டு அப்படியே கல்யாணத் தேதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டு திரும்பிடலாம்னு இருக்கோம்.”
“ஓ… அப்படியா? பேஷ்… பேஷ்… அப்படியே செஞ்சுடலாம். முதல்ல வாங்க. நீங்க சொல்றா மாதிரியே எல்லாத்தையும் முடிச்சுடலாம்… சரிங்க… சரிங்க… பை பை…”
ஃபோனை வைத்தவாறு… “அடி… கோமு… மாப்ள வீட்லேர்ந்து ஃபோனு… அவாள்லாம் அடுத்த வாரம் இந்தியா வர்றாளாம்… கல்யாணத்தை சட்டுப் புட்டுன்னு முடிக்கணும்ங்கறா…” என்று மனைவியிடம் கூறினார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க… அவா என்ன கேட்டாலும் செஞ்சுடலாம்… ஒங்கப் புள்ளாண்டான் வந்ததும் அவன் காதுலயும் போடுங்க. நாம வேற ஆச்சாரக் குடும்பம்! அவா எப்படி இருப்பாளோ தெரியல.”
“அவாளும் ஆச்சாரக் குடும்பம் தான்டீ… ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட பேசும் போது சொல்லிண்டு இருந்தார்… அவாள்லாம் லண்டன்ல இருந்தாலும் எந்த ஆச்சார அனுஷ்டானத்தையும் விடறதில்லையாம். எல்லாம் நேர்த்தியா செஞ்சிண்டிருக்காளாம். நாம தான் இங்க மாடர்ன்… மாடர்ன்னு சொல்லிண்டு நாட்டையும் வீட்டையும் கெடுத்துண்டிருக்கோம்!”
………………………………………………………………………………………………
“மாப்ள ஆத்துலேர்ந்து எல்லாரும் வந்துண்டிருக்காளாம்… ஏம்மா பூர்வி! ரெடியா?” கல்யாணம் பதற்றத்துடன் கேட்டார்.
“இதோ… ரெடிப்பா… இந்த வாசு அண்ணாவைக் கொஞ்சம் கவனியுங்களேன். என்னைப் பாடாய்ப் படுத்தறான். பட்டுப் புடவையைக் கட்டிண்டு, தலை நிறையப் பூவை வெச்சுண்டு, கழுத்து நிறைய நகையைப் பூட்டிண்டு வந்து நில்லுங்கிறான்பா… என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது! கொஞ்சம் சொல்லுங்கோ அவனாண்ட.”
“டேய் வாசு… அவளைப் படுத்தாதேடா. எம்.ஏ. படிச்ச அவளுக்கு அதெல்லாம் தேவையில்லைன்னு தோணறதோ என்னமோ… விடுடா. நோக்கு பொண்ணப் பார்க்கும்போது அப்படியே செஞ்சுடலாம். அவளை இப்போதைக்கு விடு.”
“உலகத்துல நடக்காததையா நான் சொல்லிட்டேன்! எப்படியோ போங்க…” சலித்துக் கொண்டான் வாசு.
வீடே அமர்க்களமாக இருந்தது. இப்போதே வீடு கல்யாணக் களை கட்டியது.
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பூர்வியை மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“ஓங்கப் பொண்ணு அப்சரஸ் மாதிரின்னா இருக்கா. அதான் கிருஷ்ணா சரண்டர் ஆயிட்டான்…” ராமபத்ரன் கூறினார்.
“ஏன்… ஓங்கப் புள்ளாண்டான் மட்டும் என்னக் குறைச்சலா… அப்படியே ‘கிருஷ்ணா … முகுந்தா… முராரே’ன்கிறா மாதிரியில்ல திவ்யமா இருக்கார்! படிச்சிருந்தும் நெத்தில நாமத்த வரிச்சுண்டு வந்திருக்காரே… அப்படியே சாட்சாத் ராமபிரானைப் பார்த்தா மாதிரி இருக்கு. எம்பொண்ணும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கா” – கல்யாணம் பதிலுக்குக் கூறினார்.
இதற்கிடையில்…
கல்யாணத்தின் மனைவி கோமு அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்…
“என்னம்மா பூர்வி… என்ன விஷயம்?”
“அப்பா… இல்லப்பா… அவரு லண்டன்ல இருக்கார்… நமக்கு அவா குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியாது… அதனால… அதனால…”
“அதனால?”
“ஹெல்த் வைஸ் அவர் பர்ஃபெக்டுங்கிறா மாதிரி ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வாங்கித் தந்தார்னா நன்னா இருக்கும்.”
“என்ன சொல்லிண்டிருக்கே நீ… அவா அதுக்கெல்லாம் ஒத்துப்பாளா?”
“ஒத்துக்க வைக்கணும்பா… பின்னால ஏதாச்சும் பிரச்சினை வந்தா பாதிப்பு எனக்குத் தானே? அதுவும் இல்லாம இதுக்கு ஒத்துக்கிட்டா தான் கல்யாணத்துக்கு சரிம்பேன்… நானும் எனக்கான ஹெல்த் சர்டிஃபிக்கேட்டை அவா சொல்ற டாக்டர் கிட்டேயே வாங்கித் தந்துடறேன்!”
கண்டிப்பு அவள் குரலில் தெரியவே ராமபத்ரனிடம் கூறினார்.
ராமபத்ரன் மகனிடம் கூறினார்.
“ஓ… அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சு” என்றவன், “நான் கொஞ்சம் தனியாப் பொண்ணோட பேசணுமே” என்றான்.
பேச அனுமதிக்கப்பட்டனர்.
“பூர்வி… அப்படியே என்னைக் கிறங்கடிச்சுட்ட…”
“நீங்க மட்டும் என்னவாம்?”
“உண்மையாவா?”
“உண்மையாதான்!”
“அது சரி… அதென்ன, என்னமோ டாக்டர் சர்டிஃபிக்கேட் அது இதுன்னு கேக்கறதா அப்பா சொன்னாரே…”
“ஆமா… நான் தான் சஜஸ்ட் செய்தேன்!”
“ஏன்… என்மேல நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை எல்லாம் இருக்கு. ஆனாலும் ஓங்கப் ஃபேமிலி பத்தி முக்கியமா உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே… அதனாலத்தான்… அதுவுமில்லாம… நாம ரெண்டு பேருமே படிச்சிருக்கோம். இப்போவெல்லாம்… மத்தவாளே டிமாண்ட் பண்றா… நாம இன்னும் சிரத்தையா இருக்கணும்ல…?”
“ஆமாமா… நீ சொல்றதும் சரிதான்… அதெல்லாம் செஞ்சிடலாம்… சரியா? நான் ஒண்ணு கேக்கறேன்… மறுக்கக் கூடாது.”
“மறுக்கக் கூடாததைக் கேளுங்களேன்!”
“பாருடா… கெட்டிக்காரத்தனத்தை! சரி… சரி… நம்மக் கல்யாணத்துக்கு இடைவெளி ரெண்டு மாசம்கிறது கொஞ்சம் அதிகமாகவே தெரியுது. அதுவரைக்கும் எனக்குப் பொறுமையில்ல. அடுத்த மாசம் நீ லண்டன் வர்றதுக்கு டிக்கட் அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாள் என்னோட இருந்திட்டு நீ இந்தியா திரும்பிடலாம்.”
“ஐயய்யோ… எனக்கு லீவு கிடைக்காது… ஆபீஸ்ல நிறைய வேலையிருக்கு… அதுவுமில்லாம…”
“இதோ பார், பொறுப்புகளை தவிர்த்துட்டு வான்னு சொல்லல… ஒன்னோட வேலை செய்யற பிரண்ட்ஸ்களிடம் வேலைகளை ஒப்படைச்சுட்டு வா. இந்த இளமைக் காலத்துல இதையெல்லாம் அனுபவிக்கலைன்னா எப்போதான் அனுபவிக்கிறது? கல்யாணமானதும் எதுக்குமே நேரமிருக்காது. ஏன் ஒனக்கு என்னைப் பிடிக்கலையா?”
“ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லை.”
“பிடிச்சிருக்கில்லே?”
“உம்.”
“பின்ன என்ன?”
“ஒண்ணும் இல்ல. சரி. ட்ரை பண்றேன்.”
பூர்வி ஒரு மாதத்தில் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸில் பறந்தாள்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் கிருஷ்ணா நின்றிருந்ததைப் பார்த்ததும் பூர்விக்கு என்னவென்று சொல்லமுடியாத ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.
கிருஷ்ணா அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.
அவசர அவசரமாக அவனிடமிருந்து விலகிக் கொண்டவள் “எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“எனக்கென்ன… ராஜாவாட்டம் இருக்கேன்… நீ?”
“நானும் ராணி மாதிரி தான் இருக்கேன்.”
இருவரும் ஓவென்று சிரித்தனர்.
டாக்சியில் ஏறினர்.
டாக்சி லண்டனிலிருந்து பிரிஸ்டலை நோக்கிச் சென்றது. அங்கே ‘ப்ரிமியர் இன்’ ஹோட்டலின் முன் நின்றது.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் ஹோட்டலுக்கு?”
“பயப்படாத. நான் ஒண்ணும் புலி இல்லை. கடிச்சித் தின்னுட மாட்டேன்.”
“எத்தனை நாள் தங்கப் போறோம்?”
“ஒரு ரெண்டு நாள் தான்.”
“ஒங்க பேரண்ட்ஸுக்குத் தெரியுமா?”
“ஓ… தெரியுமே.”
அதைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
இதற்கு இடையில் அவன் செல் ஃபோன் அலறியது.
“ஓ மை காட். ஐயம் சாரி… ஐ ஹாவ் கம்ப்ளீட்லீ ஃபர்காட்டன். சாரி… சாரி… ஐ எம் ரஷிங் நவ். வில் பி தேர் இன் தர்ட்டி மினிட்ஸ்.”
“பூர்வி… நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. ரெண்டு மணி நேரத்துக்குள்ள ஃபோன் பண்றேன்.”
ஏதோ ஆபீஸ் வேலையாக அவசரமாகப் போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் குளித்துவிட்டு நன்றாகத் தூங்கினாள்.
அவளது செல் ஃபோன் ட்ரிங்கியது.
எடுத்தாள். அடுத்த முனையில் கிருஷ்ணா!
“பூர்வி… சாரி… நீ ஒண்ணு செய்… ஒரு டாக்சி புடிச்சு…”
“ஐயையோ… இந்த ஊர்ல எனக்கு ஒண்ணும் தெரியாது… டாக்சி நம்பர் கூட…”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு… நீ படிச்சப் பொண்ணு தானே? நான் சொல்ற டாக்சி நம்பரை குறிச்சு வச்சிக்கோ… ஃபோன் செஞ்சு நீ ‘ப்ரிமியர் இன்’ல தங்கியிருக்கேன்னு சொல்லி அட்ரஸ் விவரங்களைச் சொல்லி டாக்சி வந்ததும் ரிசப்ஷன்ல சொல்லச் சொல்லு. அவங்க ஒண்ணோட ரூமுக்கு ஃபோன் செய்வாங்க. நீ டாக்ஸில ஏறி ‘க்ரிப்ஸ் காஸ்வே’ போகணும்னு சொல்லு. அங்க ‘மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்’ மால் கிட்ட இறக்கி விடச் சொல்லு. அந்த கட்டடத்துக்கு உள்ளே நுழைஞ்சி லெஃப்ட்ல திரும்பி நீளமா நடந்து வந்தா அங்கே ‘ரிகிஸ்’ என்கிற சலூன்ல நான் ஹேர் கட்டிங் செஞ்சுண்டிருக்கேன். நீ வந்ததும் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுட்டு ஹோட்டலுக்கு திரும்பிடலாம்.”
அவளுக்குப் பட… பட… வென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. எதற்காக இவன் என்னை இப்படி அலைக் கழிக்கறான். இவன் பேச்சைக் கேட்டு வந்திருக்கவே கூடாதோ. எப்படிப் போய்ச் சேரப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தவள் தத்தக்கா பித்தக்கா என்று வந்து சேர்ந்தாள்.
சொன்னமாதிரியே ‘ரிகிஸ்’சில் அவன் ஹேர் கட் செய்து கொண்டிருந்தான். அவளைக் குறும்பாகப் பார்த்தபடி “உன்ன இந்த ஊர்ல இருக்கிற இடங்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ட்ரெய்னிங் குடுக்கறேன்” என்றான்.
அவள் பதில் பேசவில்லை. ‘பாழாய்ப் போச்சு’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அங்கே இருந்த வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்றவன் அவள் மலைத்துப் போகின்ற அளவிற்கு விலையில் உள்ள டைமண்ட் ரிஸ்ட் வாட்ச் ஒன்றை வாங்கினான். அவள் எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை.
ஹோட்டலுக்குத் திரும்பினார்கள்.
அவன் குளித்து முடித்தான். சாப்பிட்டார்கள். சென்ட் வாசம் ரூம் எங்கும்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்குக் கூச்சமாக இருந்தது.
பின்பு ரிஸ்ட் வாட்சை எடுத்து அவள் கையில் கட்டினான். கையைப் பிடித்தவன் பிடித்தவன்தான்.
அவள் விடுவிக்க… அவன் பிடிக்க… என்ற நிலையில்… “ப்ளீஸ்… எனக்கு இதெல்லாம் பிடிக்கல…”
“நீ என்ன பழைய பஞ்சாங்கமா? நம்ம ரெண்டுபேர் குடும்பமும் ஆச்சாரக் குடும்பம் தான்… எனக்கும் தெரியும்… ஆனா காலம் மாறிடுச்சு… கொஞ்சம் புரிஞ்சுக்கோ…” என்றவன் அவளை நெருங்கினான்.
எதிர்பாராத நிலையில் அவளைக் கட்டித் தழுவியவனை அப்படியே பிடித்துத் தள்ளினாள்.
“மிஸ்டர் கிருஷ்ணா! கல்யாணத்துக்கு முந்தியே நீங்க இப்படிச் செய்யறது இங்க இந்த நாட்டுல எல்லாம் சரியா இருக்கலாம். ஆனா என்னால இதைக் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது.”
“ஏய்… நாளைக்கே நீ என்னுடைய மனைவியாகப் போகிறவள் தானே.”
“நான் மனைவி ஆகலன்னா?”
“ஏய்… நீ என்ன சொல்ற?”
“ஆமா… இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நிச்சயா நமக்கு கல்யாணம் ஆயிடும்னுல்லாம் நான் பாசிடிவா நினைச்சுட்டு இருக்க முடியாது. தயவு செய்து உடனே நான் இந்தியாவுக்குப் போக ஏற்பாடு செய்யுங்க.”
“ஓ… நீ என்னை ரொம்பத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். ஒகே… ஒகே… நாளைக்கே டிக்கட் கிடைச்சதும் நீ போகலாம். நான் எப்படியாவது ஏற்பாடு செய்யறேன்.”
அவள் இந்தியாவுக்குத் திரும்பினாள். கல்யாணத் தேதி நெருங்கியது.
இரண்டு நாட்கள் முன்பாக மாப்பிள்ளை வீட்டார் சென்னை வந்து இறங்கினார்கள்.
வந்த உடனே கிருஷ்ணா பூர்விக்குப் ஃபோன் செய்தான்.
“ஹாய் டார்லிங்… எப்படி இருக்கே?”
“நல்ல இருக்கேன்!”
“கோபமெல்லாம் போச்சா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே… என்னோட பாதுகாப்புக்குத்தான் நான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன். தப்பா நினைக்காதீங்க.”
“ச்சே… ச்சே… அதெல்லாம் பரவாயில்லை… ஸீ யூ ஸூன்!”
……………………………………………………………………………………………
பூர்வி நிம்மதியற்று அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தாள்.
“அப்பா… கிருஷ்ணாவோட அப்பாகிட்ட ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் என்னாச்சுன்னு கேட்டீங்களா?”
“ஆமாமா.. கல்யாணக் கலாட்டால நான் கூட மறந்துட்டேம்மா. இதோ இப்பவே ஃபோன் செஞ்சு கேக்கறேன்.”
பத்து நிமிடம் கழித்து அவர் வந்தார். “பூரு… நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கறதுனால முழு டெஸ்டும் பண்ண நாள் போறாதாம். அப்படியே செஞ்சி முடிச்சாலும் மறு நாள் தான் லேப் ரிப்போர்ட் கிடைக்குமாம். அவா இதைப் பத்தி கம்ப்ளீட்டா மறந்துட்டாளாம். ‘அதனால என்ன சம்பந்தி, கல்யாணத்துக்கு மறுநாள் ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைச்சுடும்’கிறார் கிருஷ்ணாவோட அப்பா.”
“இல்லப்பா… கல்யாணத்துக்கு முந்தியே கிடைச்சா தான் நான் கேட்டதுக்கு அர்த்தமிருக்கும். நாளைக்குள்ள என் கைல ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கலைன்னா கண்டிப்பா கல்யாணத்தையே நிறுத்த வேண்டியிருக்கும்.”
அதிர்ச்சியுற்றவராக அவர் ஓடிப்போய் சம்பந்தியிடம் சொல்ல… அவர் கிருஷ்ணாவிடம் சொல்ல… என்று அவர்களுக்குள்ளே பெரிய சர்ச்சையே நடந்தது.
இதற்கிடையில் பூர்வியின் அப்பா கல்யாணத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.
என்ன அது?
பூர்வ காலத்து நம்பிக்கைதான்!!
மாபிள்ளைக்கு ‘சர்வாங்கம்’ செய்வது என்பதுதான் அது!
அதென்ன சர்வாங்கம்?
அந்தக் கா…லத்தில் வெகு… வெகு… வருடங்களுக்கு முன் ஒரு வழக்கம் இருந்தது.
பெண் வீட்டார் ஏற்பாடு செய்து தர, நாவிதர் திருமணத்திற்கு முந்தின நாள் மாப்பிள்ளையின் தலையைத் தவிர சில சமயம் தலையிலேர்ந்து உடம்பு பூராவும் இருக்கின்ற முடியை மொத்தமாக மழித்து விடுவார். அப்படி மழிக்கும் போது மாப்பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. கூச்சப் படக்கூடாது. உடம்பைத் தப்பித் தவறி கொஞ்சம் நெளித்தால் கூட படக்கூடாத இடத்தில் கத்தி பட்டு விடும்…
………………………………………………………………….
“என்னங்க… ஏன் ஒரே டென்ஷனா இருக்கேள்?”
“இல்லேடீ… நேத்து தான் கும்பகோணத்துல இருக்கானே என்னோட ஃபிரண்டு நடேசபாண்டியன் ருக்மாங்கதனுக்குப் ஃபோன் பண்ணேன். ‘சர்வாங்கம்’ பண்றவங்கள்ளாம் ரொம்பவே குறைஞ்சிட்டாங்களாம். அந்த ஊர்ல கூட ரெண்டொருத்தர் தான் இருக்காங்களாம். எப்படியும் அனுப்பி வைக்கிறேன். காலைல பத்து மணிக்கெல்லாம் வந்துடுவான்னு சொன்னான். அதான் காத்துண்டிருக்கேன்… அந்த ஆளோட பேர் கூட மணின்னு சொன்னான். நான் தப்பு பண்ணிட்டேன்னு தோன்றது கோமு. என்னோட ஃபிரண்டு, அதான் உனக்கு தெரியுமே, கிச்சா கூட ‘இதென்ன கேலிக் கூத்தான்னா இருக்கு, இந்த யோசனைக்கு மாப்பிள்ள ஆத்துல ஒத்துக்க மாட்டாளே… காதும் காதும் வெச்சாப்ல நாவிதனை ஊருக்கு அனுப்பி வையுடா’ன்னு சொன்னான். இதக் கேள்விப்பட்டா பூர்விக்கும் பொல்லாத கோபம் வந்துடும். அதான் மணி வந்ததும் மொதல்ல அவனை ஊருக்கு மூட்டைக் கட்டணும்னு பார்த்துண்டிருக்கேன்.”
அதே சமயம் – “சார்… இங்க… கல்யாணம் சார்ன்னு… ஒருத்தர்…” என்று கேட்டுக்கொண்டு மணி வந்தான்.
“வாப்பா… வாப்பா மணி… தப்பா நினைச்சுக்காதப்பா… இப்போதைக்கு மாப்பிள்ளைக்கு ‘சர்வாங்கம்’ செய்யறது முடியாமப் போச்சு. இந்தாப்பா, இந்தக் கவர்ல செலவுக்கு ரூபா ஆயிரம் வெச்சிருக்கேன். நீ உடனே கிளம்புப்பா…” என்றபடி அவனை அவசரப்படுத்தினார்.
அந்தச் சமயம் பார்த்து அங்கே வந்த பூர்வி… “யாருப்பா இவரு? என்ன… ஏதோ பணம் கூட கொடுத்த மாதிரி இருக்கு?”
“ஓ… அதுவா? உனக்குச் சொல்லவே இல்லை… இல்லையா? மறந்துடுச்சி.”… என்று ஆரம்பித்துத் தயங்கியவாறு… ‘சர்வாங்கம்’ பற்றி யாருக்கும் தெரியாமல் அவர் எடுத்த முடிவு பற்றி அவளிடம் தெரிவித்தார்.
அவள் மிகவும் அதிர்ச்சியுடன்… “அப்பா! நீங்க என்ன சொல்றேள்? நல்ல காலம் மாப்பிள்ளை ஆத்துல பகிர்ந்துக்கலை. வெளிய தெரிஞ்சா பலபேர் வாயில நீங்க விழுந்து எழுந்திருக்க வேண்டியிருக்கும். இது ரொம்ப அநியாயமா தெரியலையா ஒங்களுக்கு?”
“அதான், நானே வேண்டாம்னுதான் மணியை ஊருக்குப் போகச் சொல்லிட்டேனே…”
அதற்குள் இடைமறித்த மணி, குறுக்கிட்டு… “இல்லீங்கம்மா, இப்படிச் செய்யும்போது மாபிள்ளைக்கு இருக்கிற சில வியாதிகளை எங்களால சொல்லமுடியும். அதனால பல பொண்ணுங்களோட வாழ்க்கையை எங்க மூதாதையர்களும், ஏன் நானும் கூட காப்பாத்தி இருக்கோம். அதுக்காக எல்லா தோல் வியாதிகளையும் பாலுணர்வு தொடர்புடைய நோய்களையும் கண்டுபுடிச்சிட முடியும்னு சொல்ல வரலை…”
“இதோ பாருப்பா மணி… நீ சொல்றதெல்லாம் வைத்திய முறைகள் முன்னேறாத காலத்துல நடந்தது. இனி அந்த மாதிரி தவறுகள், அறியாமைகள் நடக்கக் கூடாதுன்னுதான் இந்த உலகமே போராடுது. இப்ப நிறைய படிச்ச ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், விஞ்ஞானிகள்னு பூமி விரிஞ்சிக்கிட்டிருக்கு. அதற்குன்னு பரிசோதனைச் சாலைகள் இருக்கு. முறைப்படி டாக்டர்களிடம் கேட்டுத்தான் பரிசோதனை செய்யணும்.”
இப்படி பூர்வி கண்டிப்புடன் சொல்வதைப் பார்த்து மணி மட்டுமல்ல, கல்யாணமும் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.
மணி ஊருக்கு அனுப்பப்பட்டான்.
“அப்பா… உடனே கிருஷ்ணா அப்பாகிட்ட பேசுங்க. நானும் கிருஷ்ணா கிட்ட பேசறேன். என்னோட கல்யாணம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை. அவர்கிட்ட சொல்லி ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்த பின்னால கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.”
ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட் வந்ததா?
கல்யாணம் நடந்ததா?
என்ன, ஆவலாக உள்ளதா?
இதன் முடிவு தான் என்ன?
நாம் ஏன் கவலைப் படவேண்டும்?
பூர்வி படித்தவள். அவள் கேட்டது நியாயமே. அவளுந்தானே அவளுடைய ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டை கொடுக்கப் போகிறாள்.
லேப் ரிப்போர்ட்டில் பாசிடிவ் என்று வந்தால் அவள் திருமணத்தை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.
அல்லது…
மாபிள்ளையின் நோய் குணமாகிறவரை காத்திருந்து திருமணமும் செய்துக்கொள்ளலாம்.
நெகடிவ் என்று வந்தால் உடனே திருமணம் நடக்கலாம்.
இனி அவள் பார்த்துக்கொள்வாள்.
நாம் யார் அவள் வாழ்க்கையில் தலையிட?
இனிமேல் நாம் நம்முடைய வேலைகளை கவனிக்கலாம் வாங்க.
வேலையை கவனிக்கப் போகின்ற என்னை யார் பிடித்து இழுப்பது…?
“சார்… சார்… அதுவே பூர்விக்கும் ஏதாவது பிரச்சனை ஹெல்த் சர்ட்டிஃபிக்கேட்டில் தெரிய வந்தால் நிலைமை என்னவாகும்?”
“என்ன சார்… இதெல்லாம் கேட்டுக்கிட்டு… மாபிள்ளைக்கு என்ன கதி ஏற்படுமோ அதே கதிதான் பெண்ணுக்கும்!”
சும்மா சொல்லக் கூடாது… இந்தக் காலத்துல எல்லாருமே ரொம்பத் தெளிவாத்தான் இருக்காங்க!
முதல் இரவும் ராதாவிளயாடியும்…
சிறுகதை
முதல் இரவு!
அறை முழுவதும் பூக்களின் வாசனை. கூடவே ஊதுபத்திகளின் மணம்.
மூலையில் பழம் இனிப்பு வகைகளுடன் வழக்கம் போல் பால் சொம்பு!
கண்ணதாசன் என்ற நான் அறை வாசற்படியை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது என் மனைவி ‘ராதாவிளயாடி’ வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அவள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நாலு வகைக் குணங்களுடன் மெல்ல அறையில் கால் எடுத்து வைக்கும் போது அப்படியே ஆலிங்கனம் செய்து அவளைத் திக்கு முக்காட வைக்க வேண்டும் என்று படபடப்புடன் எதிர் நோக்கி நின்றேன்.
இன்னும் அவள் வரவில்லை.
பொறுமையாகக் காத்திருந்தேன்.
மழை வருவதற்கான அறிகுறியாக வெளியே மின்னலுடன் லேசான குளிர் காற்றும் வீசியது.
ஆனால் மணப்பெண், அதுதான் என் மனைவி ராதாவிளயாடி வருவதற்கான அறிகுறி மட்டும் தெரியவில்லை.
திடீரென்று இடி இடித்தது…
தட… தட… என்று… டமால்… டுமால்… என்ற சத்தத்துடன்… புலிப்பாய்ச்சலில் ஓடி வந்து என் மேல் விழுந்தாள் ராதாவிளயாடி!
அவளுடைய கனம் தாங்காமல் அதிர்ச்சியுடன் நான் கட்டிலில் விழுந்தேன்!
எழலாம்… எழலாம்… என்று முயற்சித்தாலும் எழ முடியவில்லை. என்னவானது எனக்கு?
ஓ… இப்போது தான் புரிந்தது… நூறு கிலோ பெரிய அரிசி மூட்டை ஒன்று என் மேல் விழுந்தது என்று… முக்கி முனகி “அம்மா ராதாவிளயாடி! கொஞ்சம்… கொஞ்சம்… ஒன்னோட ஒடம்ப அப்படியே லேசா ரைட்டிலையோ அல்லது லெஃப்டுலையோ தள்ளி கட்டில்ல இறக்கி வையும்மா… மூ…ச்சு… தடுமாறுது… செத்துடுவேன் போல இருக்கு… சீக்கிரம் இறங்கு!”
முதல் அனுபவமே ரொம்ப நல்லா தான் இருக்குடீயம்மா!
“ஐய்யோ… ஸாரிங்க… எங்கயாவது அடிப்பட்டுடுச்சா?”
“எங்கயாவதா? அங்க இங்கன்னு இல்லாம ஒடம்பு பூராவுமா வலிக்குது! அதுவும் இல்லாம ஒன்னோட ஒடம்ப இறக்கி கட்டில்ல வையும்மான்னு சொன்னா திரும்பவும் என்னோட வலது கை மேல வெச்சுட்டியே, இப்போ இந்தக் கை அவுட் ஆஃப் ஆர்டர்! நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல… உன்ன வெச்சிக்கிட்டு…”
“ஐய்யே… திரும்பவும் ஸாரிங்க! ஆனா இந்த மாதிரி ‘வெச்சுக்கிட்டு-கிச்சுக்கிட்டு’ன்னுலாம் சொல்லாதீங்க! நான் ஒங்களோட மனைவியாக்கும்!”
“நான் அப்படி எல்லாம் தப்பா சொல்லுவேனா? என் மூடையே மாத்திட்டியே… நீ வர்றதுக்கு முன்னால நான் என்னவெல்லாம் கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன் தெரியுமா? அது சரி, ஏன் வெண்கலக் கடையில யானைப் பூந்தாமாதிரி இப்படித் திடீர்னு என் மேல வந்து விழுந்தே?”
‘ஓ… அதுவா? சினிமாவுல வர்ற மாதிரி என் கூட தோழிகள், சொந்தக்காரங்க, அவங்க இவங்கன்னு கூட்டமா வந்துதான் இந்த அறையில என்னைக் கொண்டாந்து விடுவாங்களாம். ஏன்னா முதல் இரவாம்! ‘போங்கடி லூஸுங்களா… இது போய் முதல் இரவா’ன்னு சொல்லிட்டு நான் வேகமா ஓடி வந்தேனா… அப்போ பார்த்து திடீர்னு இடி இடிச்சதும் பயந்து போய் ஓடி வந்து ஒங்க மேல விழுந்துட்டேன்… ஸாரி… ஸாரி…”
“அதென்ன… ‘இது போய் முதலிரவா’ன்னு அவங்க கிட்ட சொன்னேன்கிற?”
“ஆமாம்… பின்ன என்ன… இது போய் முதல் இரவா? இது மாதிரி எத்தனையோ இரவுகளை நான் பார்த்தாச்சு.”
“அம்மா… பரதேவதை… நீ என்ன சொல்றே?”
என் வயிற்றில் புளி கரைந்தது!
‘என்னத்தச் சொல்றேன்னா… உண்மையைத் தானே சொல்றேன்…?”
“அப்படின்னா? முதல்லேயே இந்த மாதிரி நிறைய இரவுகளைப் பார்த்திருக்கியா?”
“ஐய்யே… இது என்னடா வம்பாப் போச்சு… நான் மட்டுமே இல்ல, எல்லாருமே பார்த்தவங்க தான்!”
“மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நீ பார்த்தியாங்கறது தான் கேள்வி.”
“அதான் மொதல்லயே சொல்லிட்டேனே. வேற ஏதாவது கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா பேசுங்களேன்.”
அடிப் பாவி. ஒன்னோட பதிலைக் கேட்டப் பின்னால நான் எங்கடி இன்ட்ரஸ்டாவும்-கொன்ட்ரஸ்டாவும் பேசுறது. எதுக்கும் நாம அவசரப் படக் கூடாது. இன்னும் கொஞ்சம் பேசிப் பார்த்துப் பிறகே முடிவுக்கு வரணும்…
யாரு இவளுக்கு ராதாவிளயாடின்னு பேரு வெச்சாங்கன்னு தெரியலையே… பேரப் பாரு… பேரு… ராதாவிளயாடி… விளயாடி… சனியன்… சனியன்…!
“ஏங்க… என்ன… ஏதாவது நீங்களாவே பேசிக்கறீங்களா?”
“ச்சே… ச்சே… அதெல்லாம் இல்ல. சரி, ஆப்பிள் சாப்பிடறியா?”
“ஊஹூம்… வேண்டாம்ப்பா”
“திராட்சை?”
“ஊஹூம்…”
“சரி… சரி… சொம்புல இருக்கிற பாலை டம்பிளர்ல ஊத்திக் கொண்டு வா.”
“இந்தாங்க… பால்!”
“நீயும் குடி… இந்தா…”
“ஐய்யே… எனக்கு இந்தப் பாலு பழம் எல்லாம் எப்பப் பாரு சாப்ட்டு சாப்ட்டு போர் அடிக்குது!”
அடிப் பாவி அந்த அளவுக்கு… ச்சே ச்சே, நீ பெரிய விளயாடி தான்டீ!
இன்னும் எப்படி டெஸ்ட் பண்ணலாம்?
“உனக்கு பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?”
“ஓ… நிறைய… வண்டி வண்டியா இருக்காங்க!”
கிராதகி… என்னக் கொல்றியே!
“அவங்களோட வெளிய எல்லாம் போவியா?”
“ஓ… போவேனே!”
“எங்கே கூப்ட்டாலும் போவியா?”
“எங்கே கூப்ட்டாலும் போவேன்!”
“ஏன்?”
“ஏன்னா ஜாலியா இருக்கும்! அதுவும்… நான் சொன்னா கோவிச்சுக்கக் கூடாது…”
“சொல்லு… கோவிச்சுக்க மாட்டேன்…”
பேயே!
“ரொம்ப ஜாலியா இருக்கும்!”
என் கோபம் தலைக்கு ஏறியது.
“உனக்கெல்லாம் தாலி எதுக்குடீ?”
“ஆமா… எனக்கு மட்டும் போட்டுக்கணும்னு ஆசையா என்ன? எல்லாரும் கம்பெல் பண்ணாங்கன்னுதான் கட்டிக்கிட்டேன்!”
“சரி… பாய் ஃபிரண்ட்ஸ்ஸோட எங்கல்லாம் போயிருக்க?”
“ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர், சிம்லா… செம குளிர் தெரியுமா? ஏங்க… ஏங்க… நாம்பளும் போகலாமா?”
“ஏன்… அவங்களோட போனது ஒனக்குப் பத்தலையா? நான் வேற வேணுமா?”
“அதான்… அவங்களோடல்லாம் போய் வந்துட்டேனே… உங்களோட வர்றது புதுசில்லையா?”
“ஒனக்குப் புதுசு தான் பிடிக்குமா?”
“ஆமா… பின்னே… புதுப் பொடவ, புதுச் செருப்பு, புது நெயில் பாலிஷ்… ஏன், தொடப்பம்கூட… இப்படி எல்லாமே புதுசு தான் எனக்குப் பிடிக்கும். ஒங்களுக்கு?”
“எனக்கு முதல் முதல்ல கிடைக்கிற புதுசு பிடிக்கும். பழையதான புதுசு பிடிக்காது!”
“என்ன சொல்றீங்கன்னே புரியல…! சரி… என்ன மாதிரி ஒங்களுக்கும் கேர்ள் ஃபிரண்ட்ஸ் உண்டா?”
ரொம்பத் தேவை, இந்தக் கேள்வி… இந்தச் சமயத்துல…
“கிடையாது!”
“சரி… முக்கியமான விஷயம்… மொத… மொதல்ல எனக்குப் பொடவை கட்டி விட்டது யார் தெரியுமா?”
குரல் கம்ம நான் கேட்டேன் “யாரு?”
ஐய்யோ… என்ன குண்டைப் போடப் போறாளோ தெரியலையே!
‘சொல்லுடீ…”
“ரமணி தான்!”
கெட்டது காரியம். கண்ணதாசனான எனக்கு கண்ணெல்லாம் சுற்றத் துவங்கியது. அவள் தொடர்ந்தாள்.
“அப்புறம்… ஆங்… நீங்க என்னோடப் புருஷங்கிறதால ஒங்கக்கிட்ட மட்டும் சொல்றேன்… யார் கிட்டயும் சொல்லிடாதீங்க… பப்பி ஷேம் ஆயிடும். ஒரு தடவ என் பொடவைய அவிழ்த்து விட்டதும் ரமணிதான்!”
ஐயய்யோ… அது… நடந்திருக்குமோ?
“ஏய்… நேரடியா விஷயத்திற்கு வரேன்… நீ கலச்சிருக்கியா?”
“ஓ… நிறைய தடவ!”
கோபம் மூக்கு முட்ட “இப்போ சொல்லுடி, யாரோடெல்லாம் கலச்ச?”
“ஏன்… பாஸ்கர்… சதீஷ்… மோகன்… தனித் தனியா எதுக்குப் பேர சொல்லிக்கிட்டு… மொத்தமா எல்லாம் என்னோட பாய் ஃபிரண்ட்ஸுடன் தான்” என்று சொல்லியவள்… ‘ஓ’ வென்று வாய் விட்டுச் சிரித்தவளாக… “ஐய்ய… அது கலச்சிக்கிறது இல்ல… கலாய்ச்சறது… ஏங்க… ஏங்க… என்னாச்சு உங்களுக்கு… ஏன் தலையைப் புடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கறீங்க? நான் சொல்றது எதுவும் உங்க காதுல விழலையா?” என்றபடி என்னைப் பிடித்து உலுக்கினாள்.
ஒரு மாதிரியாக நினைவு வந்தவனாக… என்ன இது… கலச்சியான்னா… கலாய்ச்சிறதுங்கறா… சரி, வேற மாதிரி கேட்டுப் பார்ப்பமே என்ற முடிவுக்கு வந்தேன்.
“இதப் பாரு. அம்மா விளயாடி. உன்னோட விளையாட எனக்கு தெம்பே இல்லம்மா. நொந்து போயிருக்கேன். தயவு செஞ்சி நான் கேக்கறத நல்லாப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லு. நீ வயத்தக் கழுவியிருக்கியா?”
“ஓ… நிறைய தடவை. ஆனால் வருஷத்துக்கு ஒரு தடவை தான்!”
இது என்னது. வரும் ஆனா வராதுங்கிற மாதிரி இந்த நாற வாய்ப் பொண்ணு பேசுறது ஒண்ணுமே புரியமாட்டேன்கிறது!
“அந்த எழவு சமாச்சாரத்துக்கு ஒன்னக் கூட்டிட்டுப் போறது யாரு?”
“எங்க அம்மா… இல்லேன்னா எங்க அப்பாதான்.”
என்னது… குடும்பமே குல விளக்குகள் தான் போல!
“எழவு சமாச்சாரம்னு சொல்லாதீங்க… அது ஒடம்புக்கு ரொம்பவும் நல்லது!”
“என்னது… ஒடம்புக்கு நல்லதா… யார் அப்படிச் சொல்றது?”
“வேற யாரு! எங்க அம்மா அப்பாதான்! அவங்க ரொம்ப நல்லவங்க!”
நாசமாப் போச்சு! நல்லவங்களாம்… சரியான நாசக்கார குடும்பம்… ஐய்யோ… இவ பேருக்கேத்த மாதிரி ரொம்பவே விளையாடறாளே!
இந்தச் சமயம் பார்த்து ரிசெப்ஷனுக்கு வந்த ராதாவிளயாடியின் பாய் ஃபிரண்டுகளில் ஒருவன் பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு ‘ஹாய்! ராதாவிளயாடி… கல்யாணம் ஆயிடுச்சு… இனிமே முந்தி மாதிரி எல்லாம் விளையாடிக்கிட்டு இருக்கக் கூடாது. மிஸ்டர் கண்ணதாசன்! இவளைக் கொஞ்சம் பத்திரமாப் பார்த்துக்கோங்க. இல்லையின்னா ஏமாத்திட்டு ரொம்பவே விளையாடிடுவா!’ என்று சொன்னது எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது.
“இதப் பாரு ராதாவிளயாடி… மரியாதையா ரூமை விட்டு வெளியே போ!”
“ஐய்ய… என்ன ஆச்சு ஒங்களுக்கு? நான் ஒண்ணும் போக முடியாது!”
“ஏன் போக முடியாது?”
“ஏன்னா… இது எங்க வீடு… நீங்க வேணும்னா வெளிய போங்க…”
……………………………………………………………………………………………………………..
“அடிப் பாவி! எல்லாத்தையும் கெடுத்திட்டியே… நகை நட்டு பாத்திரம் சத்திரம் சாப்பாடுன்னு லட்சக் கணக்கா செலவு செய்த பணமெல்லாம் பாழடிக்கிறா மாதிரி வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வந்து நிக்கறியே… பத்தாததுக்கு முதலிரவுன்னு பால் பழங்கள்னு அதுவேற தண்டச் செலவு.” ராதாவிளயாடியின் அம்மா புலம்புகிறாள்.
“ஆமா இல்ல… நிறைய செலவு தான் ஆயிடுச்சி! ஆனா அம்மா நீ கவலைப்படாதே. அவர் தான் கோபிச்சிக்குனு மூட்டை முடிச்செல்லாம் கட்டின்னு இருக்காரே… போயிடுவார்… இனிமே நமக்கு தலைத் தீபாவளி, பொங்கல்னு எல்லாச் செலவும் மிச்சம்! நல்ல காலம் இப்பவாவது தப்பிச்சமே!”
“ஏண்டீ என் வயித்துல வந்து பொறந்தே? ஒன்னப் பொண்ணாப் பெத்ததுக்கு ஒரு குழவிக் கல்லைப் பெத்திருக்கலாம்.”
ராதாவிளயாடி ‘கொல்’ என்று சிரிக்கிறாள்.
“பெத்த வயிறு பத்தி எரியுது… இப்ப எதுக்குடி சிரிக்கிற?”
“இல்ல நீ சொன்னியே, குழவிக் கல்லு, அத நீ உன் வயித்துல வெச்சிருந்தையானா வயிறு பிஞ்சிடும்! அது மட்டுமில்ல… அது என்ன மாதிரி புத்திசாலியா பேசுமா… சிரிக்குமா?”
ராதாவிளயாடியின் அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள்.
……………………………………………………………………………………………………………..
“மாப்ளை… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…”
“வேண்டாம் அத்தை… ஆளை விடுங்க… ஐயய்யோ… இந்தமாதிரிக் குடும்பத்தை…” என்று நான் முடிப்பதற்குள் என்னைத் தரதரவென்று இழுத்துச் சென்றார் என் அத்தை. அங்கே ராதாவிளயாடி நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்னோடப் பொண்ணு நடந்ததையெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டா. நாங்க முதல்லேயே எங்கப் பொண்ணு கொஞ்சம் விவரம் தெரியாதவள்னு சொல்லியிருக்கணும். எங்கத் தப்பு தான். மறந்துடுங்க.”
அவர் தொடர்ந்தார்.
“அவ நிறைய இரவைப் பார்த்திருக்கேன்னு சொன்னது பிறந்ததுலேர்ந்து அவள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிற இரவைப் பத்திதான்.”
“அப்போ… பால் பழம் போர் அடிக்குதுன்னு சொன்னது?”
“சின்ன வயசுல காலைல மாலைல பால் சாப்டுகிட்டு வர்றதையும் பழங்களைச் சாப்ட்டு வர்றதையும்தான் ‘எனக்கு இந்தப் பாலு பழம் எல்லாம் எப்பப் பாரு சாப்ட்டு சாப்ட்டு போர் அடிக்குது’ன்னு சொன்னது.”
“பாய் ஃபிரண்ட்ஸ்ஸோட ஜாலியா இருந்தேன்னு அவளே சொன்னாளே!”
“ஐயோ மாப்ளை… அவளுக்கு நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸும் உண்டு!”
“அவ அதச் சொல்லலியே?”
“நீங்க கேக்கலியே! அது மட்டும் இல்ல, எல்லாரும் சேர்ந்து தான் பிக்னிக் போவாங்க!”
“அப்ப இதுக்குப் பதில் சொல்லுங்க… அவளே ரமணிங்கிறவன்தான் அவளுக்கு ஒரு தடவை புடவயைக் கட்டி…” என்று நான் முடிப்பதற்குள் என் அத்தை “இன்னுமா ஒங்களுக்கு புரியல… ரமணிங்கற பேரு ஒரு ஆணாத் தான் இருக்கணுமா… பெண்ணா இருக்கக் கூடாதா… ரமணிங்கற பேர ரெண்டு பேருக்குமே வெப்பாங்க… சின்ன வயசுல அவளோட ஃபிரண்டு ரமணி செஞ்சத தான் சொல்லி இருக்கா!”
எனக்குக் கொஞ்சம் புரிந்தது மாதிரி இருந்தது.
“அப்ப… வயித்தக் கழுவினையான்னு கேட்டதுக்கு…”
“ஓ… அதுவா… வருஷத்துக்கு ஒருமுறை ஹோமியோபதி டாக்டர் அலீம் கிட்ட போய் வயித்தால போறதுக்கு மாத்திரை வாங்கிக் கொடுப்போம். ஒரு நாலைந்து முறை வயித்தால போனா உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு அப்படிச் செய்வோம்! ராதாவிளயாடி சின்னவளாய் இருந்ததிலேர்ந்து செஞ்சிட்டு வர்றோம். அதைத் தான் சொல்லியிருக்கா.”
பெட்டியில் அடுக்கிய மூட்டை முடிச்சுக்களை திரும்பவும் எடுத்து வைத்தவாறு “ஒரே ஒரு வார்த்தை அத்தை” என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தார். அவரிடம் “ஒங்க பொண்ணு ராதாவிளயாடியை கட்டிக்கிட்டு வாழ்நாள் பூரா என்னென்ன அவஸ்தைப் படப் போறேனோ தெரியல… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நான் ஒன்னு கேக்க… அவ ஒன்னு சொல்ல… எங்க வாழ்க்கை விளங்கிடும்!” என்றேன்.
மறுநாள்.
முதல் இரவு இரண்டாவது நாளிரவில் வைக்கப்படுகிறது.
“ராதாவிளயாடி… உனக்கேன் இந்தப் பேரு?”
“நான் எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கிறதனால ஸ்கூல்ல அப்படி பேரு வெச்சிட்டாங்க!
“உனக்கு என்னப் புடிச்சிருக்கா?”
“கொஞ்சம் கூடப் பிடிக்கல!”
அதிர்ச்சியுடன்… “என்னடீ… கதை திரும்பவும் வேற மாதிரி போகுது… சரி, ஏன் பிடிக்கலைன்னு சொல்லித் தொலை!”
“பின்ன? நேத்துலர்ந்து தான் ஒங்களப் பார்க்கறேன்… நேத்து வேற நான் சொன்னதையெல்லாம் தப்பு தப்பாப் புரிஞ்சுக்கிட்டு லூசு மாதிரி நடந்துக்கிட்டீங்க இல்ல?”
“யாரு… நானா? தேவுடா…!”
“அதனாலத்தான்… இனிமே நீங்க எப்படி நடந்துக்கறீங்கன்னு பார்த்துட்டு அப்புறமா சொல்றேன்… அதுவரைக்கும்” என்றவளை அப்படியே ஆலிங்கனம் செய்தேன்.
சும்மாச் சொல்லக் கூடாது. என் மனைவியின் கலாய்ச்சலில் சில சமயம் காய்ச்சலே வந்து விடுகிறது எனக்கு!
குண்டுகள்!
குண்டுக் குழந்தை அழகு.
குண்டுக் கண்கள் அழகு.
குண்டுக் கன்னம் அழகு.
குண்டுப் பெண் அழகு.
குண்டுப் பையன் அழகு.
குண்டுப் பயில்வான் அழகு.
குண்டு அம்மா அழகு.
குண்டு அப்பா அழகு.
குண்டுப் பூ அழகு.
குண்டுப் பழம் அழகு.
குண்டுக் கையெழுத்து அழகு.
குண்டு நாய் அழகு.
குண்டுப் பூனை அழகு.
குண்டைத் தூக்க முடியாததால்…
குண்டு போட முடியவில்லை.
எனவே
அதுவும் அழகு!
வாய்க்கு வஞ்சனை செய்யேன்!
பெட்டிப் பெட்டியாகத் தின்றவள்.
‘லட்டு’வை லட்டு லட்டாகவே
லவட்டியவள்.
இப்போது…
பிட்டுப் பிட்டுத் தின் என
மனம்
விட்டு விட்டுத் துடிக்கிறதே!
கட்டுக் கட்டுச் சோற்றை
கொட்டிக் கொட்டித்
தட்டுத் தட்டாகச் சாப்பிட்டவள்…
இப்போது
அன்னத்தை அண்ணாந்து பார்க்கிறேனே!
ஐஸ் கிரீம் எனில் ஆலாய்ப் பறப்பவள்!
அதிரசம் எனில் அடிதடி தான்!
போளி இலையெனில்
காளி ஆயிடுவேன்!
கொழுக்கட்டை இலையெனில்
கொலை கூட செய்வேன்!
இப்படி…
வாய்க்கு வஞ்சனை செய்யாமல்
வாய் வளர்த்த என்னை…
வஞ்சனை செய்தது
சர்க்கரை நோய்!
இதோ என் பிடி சாபம்!
சர்க்கரைக்கு சர்க்கரை வந்து
சாகட்டும்!
அப்பா… ஒழிந்தது சர்க்கரை!
தீபா’வலி’
இனி தித்திக்கும்
தீபாவளிதான்!
தெய்வமே தேரில் வீதி உலா வருகிறது!
அது ஒரு சாதாரண குடும்பம். குடும்பத் தலைவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண்.
அவரது மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்து விட்டார்.
எல்லா ஆண்களைப் போலவே பிள்ளைகளை வளர்க்க என்று சொல்லி அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அதற்குப் பிறகு இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது மனைவி கிராமத்திலிருந்து வந்தப் பெண் என்றாலும் கோயம்புத்தூருக்கு அருகில் வசித்ததால் கொஞ்சம் சாமர்த்தியமாகத்தான் இருந்தாள்.
அரை டவுசர் போட்டிருந்த மூத்தாளின் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெண்ணையும் அருமையாக ஆக்கிப் போட்டு அண்ணாந்து பார்க்கின்ற அளவுக்கு வளர்த்தாள். அவளது குழந்தைகளும் வளர்ந்தன. முதல் தாரத்துப் பிள்ளைகள் மூன்றும் சித்தி சித்தி என்று அன்பாகத் தான் இருந்தார்கள். ஆண் பிள்ளைகள் அனைவரும் சொந்த சகோதரர்கள் போல் தான் வளர்க்கப்பட்டனர்.
மூத்தாளின் பெரிய பையன் என்ஜினீயருக்குப் படித்தான். இரண்டாவது பையன் படித்துவிட்டு மத்திய அரசில் வேலைக்குச் சேர்ந்தான்.
இடையில் தந்தை இறந்து போனார்.
தங்கைக்குக் கல்யாணம் முடித்தனர். சித்திக்குப் பிறந்த பிள்ளைகள் இரண்டும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.
இதற்கிடையில் என்ஜினீயருக்குப் படித்த பையன் அரசாங்க வேலையில் இருந்ததால் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனான். மாற்றலாகிப் போனாலும் இரண்டாவது பையனின் சம்பளம் குறைவு என்பதால் ஈடு கட்ட முடியாது என்று ஊரில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வெளியூரிலேயே தங்கிவிட்டான்.
பணம் அனுப்புவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
இரண்டாவது பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது.
சித்தியின் பிள்ளைகள் இரண்டு பேருக்குமே படிப்பு ஏறவில்லை. அவர்களும் ஆளுக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டார்கள். பிறகு திருமணமும் நடந்தேறியது. இதற்கிடையில் சித்திக்குப் புற்று நோய் காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
வயிற்றில் பெரிய கட்டி! அறுவை சிகிச்சை நடந்தது. மூத்தாளின் என்ஜினீயர் பிள்ளை பார்க்க வரவில்லை.
மரணப் படுக்கையில் இருந்த சித்தியோ “என் மூத்த மகன் என்ஜினீயர் புள்ள வரவே இல்லையே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
சித்தியின் நிலைமை தெரிந்தும் கூட என்ஜினீயர் பிள்ளை கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வர முடியாததற்கு பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வருகின்ற சுவடே தெரியவில்லை.
மருமகளில் ஒருத்தி, “டவுசர் போட்டிருந்த பசங்க ‘பேண்ட்’ போடறவரை வளர்த்தாளே… சித்தியைப் பார்க்க எப்படி ஒங்க அண்ணா வராம இருக்கார்? ஒங்களை எல்லாம் சொந்தப் பிள்ளைகளாகத் தானே அந்த அம்மா நெனைச்சா… மூத்தாளோடப் பிள்ளைகள்னும் தன்னோடப் பிள்ளைகள்னும் தனியாவா பார்த்து வளர்த்தாள்? இல்லையே! சித்தி மேல என்னதான் தப்பிருந்தாலும் வளர்த்தத நெனச்சி… நன்றிக் கடனைத் தீர்க்கறதுக்காகவாவது வரணும்னு தோனலையே… ஏன் தம்பிகள் நீங்கள்ளாம் என்ன செய்றீங்க… அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா? இன்னைக்கோ நாளைக்கோன்னு உயிர்ப் போற நெலையில இருக்கிறவங்களை பார்க்காம இருக்க எப்படித் தான் மனசு வருதோ? மூலஸ்தானத்துல இருக்கிற அந்தச் சாமியே கூட கோயிலுக்கு வந்து பார்க்க முடியாதவங்களுக்காக தெருவுல உலா வர்றார். உம். இவங்கள்லாம் சாமிக்கும் மேலயா?” என்று புலம்பினாள்.
அதைக் கேட்ட இரண்டாவது தம்பி ஊரிலுள்ள அண்ணனைப் பார்த்து சித்தியைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்ன பிறகு ஏதோ போனால் போகிறது என்பது போல் வந்து பார்த்தான்!
அதன் பிறகு ஆஸ்பத்திரியில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடமெல்லாம் “என்ஜினீயர் புள்ள என்ன வந்துப் பார்த்துட்டாரு… பார்த்துட்டாருன்னு…” பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்த அந்த சித்தியின் ஆன்மா சில நாட்களில் பிரிந்தது!
உலகம் பலவிதம்… அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்!
செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவே கர்ணன் நியாயமற்ற கௌரவர்களின் பாவத்தில் பங்கேற்க நேர்ந்தது. சோற்றுக் கடனைத் தீர்க்காமல் கடனாளியாக உயிர் விட்டால் அந்த உயிர் எங்கே போகும்?
எப்படி அமைதியைப் பெறும்?
அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
முத்துச் சிரிப்பு!
முத்துச் சிரிப்பில் முகிழ்ந்தேன்
சத்தச் சிரிப்பில் சிலிர்த்தேன்…
பஞ்சு போன்ற மெல்விரல் தொட
பாதாதிகேசம் பரவசமானது…
தேடித் தேடிப் பார்க்கிறேன்
ஓடி ஓடி ஒளிகிறாய்!
உனை
நாடி நாடி
நாலு புறமும் நோக்கி
வாடி வாடி களைத்துப் போனேன்!
காலில் சக்கரமா?
சுழன்று சுழன்று ஆடுகிறாய்!
கழன்று கழன்று விழும் காப்புகளை
எத்தனை முறை தான் பூட்டுவது?
எந்தப் பொருளையும் எடுத்தெறிகிறாய்,
எக்காளமாய்ச் சிரிக்கிறாய்!
நீ கையில் எடுக்கின்ற சோறு
வாயில் வகையாகப் போகாமல்
மெய்யில் மேலோங்கி உள்ளதே!
குடிக்கும் தண்ணீரை
வாய்க் குழாயால் என் முகத்தை
நனைக்கும்
உனது நமட்டுச் சிரிப்பைப்
பார்த்து
அணைத்து அள்ளிக் கொள்ள
நினைத்து ஆர்வமாய் வந்தால்,
எனை விட்டுத் தொலை தூரம் போகும்
உனை விட்டேனா பார்!
விலையில்லா மனைவி!
பள்ளி போனதும்,
பாடம் படித்ததும்,
சிட்டாய்ப் பறந்து பறந்து
விளையாடியதும்,
வயதுக்கு வந்ததும்
வாயிலின் மூலையில்
வாலறுந்து உட்கார்ந்ததும்,
கல்லூரிக்குப் போனதும்,
காலில் சிறகுக் கட்டி
அங்கே இங்கே என்று ஓடிப்
பூமியில் பூபாளம் பாடியதும்,
முன்பின் தெரியாத ஒருவனை
அன்பின் வழியது என்று சொல்லிக்
கணவனாக்கிய கொடுமையால்,
நான் ஒன்று சொல்ல
அவன் வேறொன்று நினைக்க
இவள் பாடு பெரும்பாடு ஆனதே!
பெற்றோரே!
அறிந்தப் பையனும்
அறிந்தப் பெண்ணும்
அவரவர் கைப்பற்ற
அன்பு கொண்டு அனுமதித்தால்
அது
தலை வாழ்க்கை அல்லவா?
கலை வென்ற கன்னியை
விலை கொடுத்து வாங்கிய
மாப்பிள்ளைக்கு
வரதட்சணை
சீர் செல்வம் கொடுத்து
விலையில்லா மனைவியாக்கலாமா?
பச்சைத் துரோகங்கள்
அவள் நல்ல நிறம். உயரம். மிகவும் அழகானவள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் உள்ளே கண்கள் ஒளி மின்னலென பளிச்செனத் தெரியும். மெல்லிய உதடுகளில் எப்போதும் புன்னகை ஓடிக்கொண்டிருக்கும். நளினமானவள்! பிரபலமான கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள்.
அவளது பெயரை சுந்தரி என்று வைத்துக்கொள்வோமே.
அழகுக்கு ஏற்றாற்போன்று வகைவகையான புடவைகள். அதற்கேற்ற வண்ணத்தில் கைவளை மற்றும் பொட்டு… இத்யாதி… இத்யாதி.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தப் பெரிய நகரத்தில் அழகானதொரு பங்களா. அதைச் சுற்றிலும் தோட்டம், மரம், செடி, பூ என்று எல்லாமே அழகு.
கணவர் டாக்டர். வீட்டு வேலைகளைச் செய்ய உதவிக்கு ஒரு பெண்மணி. சுந்தரி இருக்கும் போதே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்தப் பெண்மணி அவளது வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அவுட்ஹவுசில் ஒரு குடித்தனம் வாடகைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கணவர் தினமும் காரில் சுந்தரியை கல்லூரியில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிடுவார். திரும்பவும் சாயங்காலம் வந்து அவளை அழைத்துச் செல்வார். சுந்தரிக்குத் திருமணம் நடந்ததும் குழந்தை உண்டானது. உடனேயே எதற்குக் குழந்தை என்று கணவனும் மனைவியும் கலந்துப் பேசி கருக்கலைப்புச் செய்தனர்.
அதன் பின்னால் சில வருடங்களுக்குப் பிறகு என்ன முயற்சி செய்தும் குழந்தை பிறக்கவில்லை.
நான் பழகிய தோழிகளில் சுந்தரியும் முக்கியமானவள். எல்லோருக்குமே அவளைப் பிடிக்கும். கல்லூரி கேம்பஸ்ஸில் எங்கே என்னைப் பார்த்தாலும் நின்றுப் பேசிவிட்டுத் தான் செல்வாள். வீட்டுக்குச் சாப்பிடவா என்று சதா சொல்லிக்கொண்டிருந்தாள் என்று ஒருமுறை சென்றேன். விதவிதமானப் பலகாரங்களை உதவி செய்யும் பெண்மணியிடம் செய்யச் சொல்லி என்னை அசத்திவிட்டாள்!
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது நிறைய சமயங்களில் உண்மையாகிப் போகின்றது. அவளைப் பார்க்கின்ற யாரும் அவளுக்கு என்ன குறை… குழந்தை இல்லை என்பதைத் தவிர என்று தான் யோசிப்பார்கள்.
எல்லோரையும் கேட்டுப் பாருங்கள்… ஏதாவது குறையைச் சொல்லி அழுவார்கள். வீட்டுக்கு வெளியே நின்று பார்த்தால் ஒன்றும் புரியாது. உள்ளே போய்ப் பார்த்தால் தான் எங்கே ஒழுகுகிறது, எங்கே அழுக்கு என்றெல்லாம் புரியும்.
வேலை நிமித்தமாக நான் திரும்பவும் அந்த ஊருக்குச் சென்றபோது என் பழைய தோழிகள் சுந்தரியைப் பற்றிச் சொன்னபோது பதைபதைத்துப் போனேன். துடிதுடித்துப் போனேன். நான் வெளிப்படையாக அழவில்லையே தவிர என் இதயத்தில் ரத்தம் கசிந்தது.
மூச்சு முட்டும்படி நிறைய வேலைகள் எனக்கு இருந்ததாலும், குழந்தைகளைத் தனியாக என் சின்ன அண்ணன் விஜி பொறுப்பில் விட்டிருந்ததாலும் (பாவம் என் விஜி அண்ணா எனக்காக அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வந்திருந்தார்), உடனே நான் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் சுந்தரியை எப்படியும் சந்தித்துப் பேசவேண்டும், அதற்காகவே திரும்பவும் அந்த நகரத்திற்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதோ… இதுவரை என்னால் செல்ல முடியவில்லை… இன்றைக்கு வரை நான் அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்… முடியுமா தெரியவில்லை.
சரி. இடையில் சுந்தரிக்கு என்ன நேர்ந்தது?
அவள் தினமும் கல்லூரிக்குச் சென்றால் திரும்பவும் மாலை தானே வீட்டுக்குச் செல்ல முடிகிறது. அதுவும் மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது கல்லூரிக்கூட்டங்கள், அந்தந்தத் துறைக் கூட்டங்கள், விழாக்கள்… அது இதென்று இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கூட வீட்டுக்குச் செல்கின்றமாதிரி இருக்கும்.
இந்த இடைவெளி அவளது டாக்டர் கணவனுக்கு வசதியாகப் போனது.
எப்படி?
ஆமாம்… அவளது கணவருக்கும் வீட்டில் வேலைக்கு உதவி செய்வதற்கு வந்தப் பெண்மணிக்கும் உறவு ஏற்பட்டு விட்டது!
வாய்க்குவாய் கணவரைப் பற்றிப் பேசியவள். மொத்த அன்பையும் மொத்தமாக அவருக்கே அளித்தவள். உலகமே அவர்தான் என்று உள்ளம் பூரித்தவள். நம்பிக்கையின் நாயகன் என்று நம்பிக்கொண்டிருந்தவள். தன்னை விட்டு இன்னொரு பெண்ணிடம் கணவன் எப்படிப் போக முடியும் என்பதை நம்ப முடியாதவள். அதிர்ச்சிக்குள்ளானாள்… அவதிப்பட்டாள்… ஆழ் கடலுக்குள் அழுத்தப்பட்டதுபோல ஆடிப்போனாள்.
சரி. என்னதான் செய்தாள்?
அவளுக்கு என்ன தோன்றியதோ… உலகமே தன் கையை விட்டுப் போனதாகக் கருதியவள் மிகவும் மனம் சஞ்சலப்பட்டு வேறு மதத்திற்கு மாறிவிட்டாள்!
இப்படி என் தோழிகள் சொன்னபோது என்ன நினைத்து இப்படிச் செய்திருப்பாள் என்று எனக்குப் புரியவில்லை.
கணவர் செய்த தவறுக்கு இவள் ஏன் மதம் மாறவேண்டும்? மதம் மாறுவதால் திருந்திவிடப் போகிறாரா? அல்லது அவருக்கு அவருடைய மதம் மிக முக்கியமானது என்று தெரிந்து அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டுமென்று மதம் மாறிவிட்டாளா?
அடி தோழி…! இதை நீ படிக்க நேர்ந்தால் என்னைத் தொடர்பு கொள். உன்னுடைய இருப்பு எங்கே என்று தெரியாமல் நமது தோழிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்… தேடிக்கொண்டிருக்கிறேன்… நிச்சயம் ஒரு நாள் நான் உன்னைக் கண்டிப்பாகப் பார்ப்பேன் என்று மிக நம்பிக்கையுடன் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
சில ஆண்கள் ஏன் இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கிறார்கள்?
வெளிநாடுகளில் இம்மாதிரியான நிலைகளில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் கலந்துப் பேசி விட்டுக்கொடுத்து அல்லது மீண்டெடுத்து வாழ்வதைப் பார்க்கிறேன். ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் எந்த நிலையிலும் பெண்கள் அதிகம்பேர் கணவரை விட்டுப் பிரியாமலிருக்கத்தானே விரும்புகிறார்கள்!
இப்படி மனைவிக்குத் துரோகம் செய்கின்ற ஆண்கள் அவர்களது சகோதரிகளுக்கு இந்த நிலை வரும்போது சும்மா இருப்பார்களா? எப்படித் துடித்துப் போவார்கள்… நினைத்துப் பார்க்க மாட்டார்களா?
அவரது மனைவி அப்படிச் செய்திருந்தால், எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்? அவமானம் அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா, அண்ணன், தங்கைகளுக்கும் என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்!
ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டமா? ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டங்களை எதெதில் வைக்க வேண்டுமோ அததில் பொதுவில் வைப்போம்!
திருமணம் செய்யும் போது ஏழு சப்த அடிகளில் ஒன்றான ‘கஷ்ட நஷ்டத்திலும் உன்னைக் கைவிடமாட்டேன்’ என்று பொருள்பட ஓர் ஆண் திருமணம் செய்கிறான் என்பதை அவனது தாய் மொழியில் சொன்னால் தான் புரியும் போல் தெரிகிறது!
என் தோழி சுந்தரியின் டாக்டர் கணவருக்கு ஒரு கேள்வி. உள்ள உணர்ச்சியை விட உடல் உணர்ச்சிக்கு இடம் கொடுத்த சகோதரரே… வைத்தியரான உங்களுக்குத் தற்காலிக அந்த உணர்ச்சிக்குத் தடை போடத் தெரியவில்லையா?
நீங்களே இப்படிச் செய்தால்?