சிறுகதை
“அடடே கிரீஷ், எங்கடா இந்தப் பக்கம்? வா… வா… உள்ள வா.”
“சும்மா தான் வந்தேன். வாடா வெளிய போலாம்… அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரலாம்.”
“இல்லடா… எனக்கு வீட்ல வேல இருக்கு.”
“என்னடா, எப்பப் பார்த்தாலும் உனக்கு வீடு, பொண்டாட்டி, புள்ள… இதே கதை தான்.” இப்படிச் சொன்னவன் கோபித்துக்கொண்டு ‘விருட்’டென்று கிளம்பிவிட்டான்.
……………………………………
“ட்ரிங்…” “ட்ரிங்…”
“ஹலோ… யார் பேசறது?”
“டேய் ரமேஷ், நான்தாண்டா… கிரீஷ்! இன்னைக்கு சாயங்காலம் ஆறுமணிக்கு நேரு ஸ்டேடியம் வந்துட்றா… அங்க சினி ஸ்டார்ஸ் ‘நட்சத்திர இரவு’க்கு ரெண்டு டிக்கெட் எனக்குக் கிடைச்சிருக்கு.”
“டேய்… டேய்… ஸாரி டா, எனக்கு வீட்ல நிறைய வேலை இருக்கு. ஒண்ணு செய். ஒன்னோட மனைவியைக் கூட்டிட்டுப் போ.”
“எனக்குத் தெரியாதா… யாரை கூட்டிட்டுப் போகணும்னு? வைடா ஃபோனை!”
இந்த உரையாடலைக் கேட்ட ரமேஷின் மனைவி உமா, “ஏங்க உங்க ஃபிரண்டு தான் கூப்பிடறாரே… ஏன் எப்பப் பார்த்தாலும் அவரைத் தவிர்க்கறீங்க?” என்று கேட்க, அவன், “உனக்குத் தெரியாது அவனைப் பத்தி. அவன் ஒரு சுயநலக்காரன். என்னைக்கோ ஒரு நாளைக்கு என்கிட்ட வாங்கிக் கட்டிக்கப் போறான் பாரேன்…” என்றான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே போய்விட்டாள்.
மனைவி சொன்னது கொஞ்சம் உறுத்தலாக இருக்கவே, ஒரு நாள் கிரீஷின் வீட்டுக்குச் செல்வது என்று ரமேஷ் முடிவு செய்தான்.
கிரீஷின் வீட்டை நெருங்கும்போதே ஒரே சத்தம். அவனது பிள்ளைகளின் ஒரே இரைச்சல். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“உள்ளே அங்கே என்னத்தைக் கிழிக்கற… ஏண்டி இப்படி உன் புள்ளைங்க கத்தறாங்க? அடக்கத் தெரியாது?”… கிரீஷின் குரல்.
ரமேஷ் அவன் எதிரே போய் நின்றான்.
“டேய்! வாடா… வாடா… என்னடா, தெரியாம என் அட்ரஸ்ல வந்து நின்னுட்டியா என்ன?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மாதான் ரொம்ப நாளாச்சேன்னு பார்க்க வந்தேன்.”
அதற்குள் கிரீஷின் மனைவி சதா, “வாங்கண்ணே! எங்க, இந்தப் பக்கம் வரவே மாட்டேங்கிறீங்க…” என்றாள்.
“நேரமே இல்லம்மா…” என்றவன் அவள் மிகவும் அயர்வுடன் இருப்பதைப் பார்த்து “சதாங்கிற பேருக்கு ஏத்த மாதிரி சதா வேல செஞ்சுட்டே இருக்கீங்க போலிருக்கே… இந்தத் தடியன் ஒண்ணும் உதவி செய்யறதில்லையா?” என்றான்.
அவள் அதற்குப் பதில் சொல்லாமல், “ஒரு நிமிஷம் இருங்கண்ணா, நான் காஃபி கொண்டாறேன்…” என்றவாறு உள்ளே போனாள்.
“ஏண்டா… உனக்குப் புத்தி ஏதாவது இருக்கா? ஆம்பளை என்னைப் போய் அவளுக்கு உதவி செய்யலயான்னு கேக்கறியே… பொண்ணுன்னா அவதான் எல்லாத்தையும் செய்யணும். குடும்ப பாரத்தைச் சுமக்கறவளுக்குப் பேருதான் குடும்பத் தலைவி. இன்னுஞ் சொல்லப் போனா, பொட்டச்சி வேலைய பொட்டச்சியும், ஆம்பளைங்க செய்ய வேண்டிய வேலைய ஆம்பளைங்களும் செய்யணும்… தெரியுதா?”
“நீ என்னைக்குத் தான் திருந்தப் போறேன்னு பாக்கறேண்டா!”
கையில் காஃபியோடு வந்த சதா, “அது நடக்காத காரியம் அண்ணா…” என்று முடிப்பதற்குள்… “என்னடி, வாய் திமிரா… இதுவரைக்கும் என்னை எதிர்த்துப் பேசாதவ, கூட பேசறதுக்கு ஆள் கிடைச்சிட்டான்னு வாய் நீளுதா?” என்றவன், எதிர்பாராத நிலையில் ‘பளார்’ என்று அவள் கன்னத்தில் அறைய… அவள் கையில் இருந்த டம்ப்ளர் கீழே விழுந்து காஃபி சிதறுகிறது.
அதைக் காணச் சகியாமல் ரமேஷ் ‘சட்’டென்று கிளம்புகிறான்.
……………………………………
சென்னை, தி.நகர், நடேசன் பார்க்!
சின்னப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரமேஷ்… அவனைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற சிறுவர்களுக்குக் கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
அப்போது மெல்ல அங்கே வந்து நிற்கிறான் கிரீஷ்.
அவனைக் கவனியாதவன் போல் ரமேஷ் கதை சொல்வதைத் தொடர்கிறான்.
அவன் கதை சொல்லி முடிக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தவன், “ஸாரி டா, அன்னைக்கு ஏடா கூடமா போயிடுச்சு… நீ கூட காஃபி குடிக்காமையே வந்துட்டே…” என்று மென்று இழுத்துப் பேசினான்.
“பரவாயில்ல விடுடா… காஃபியா பெருசு… நம்ம நட்புதான்!”
“ஆமா எல்லாம் சரி, அதென்ன இந்தச் சின்னப் பசங்களையெல்லாம் செருகி வெச்சுனு பேசிக்கிட்டிருக்கே…? அப்பப்ப அவங்களுக்கு வாய்த் தீனி வேற…”
“ஆரம்பிச்சுட்டியா உன் வேலைய… கொஞ்சம் எடம் குடுத்தா உன் புத்தியை காட்றியே… இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்… உனக்கு நல்லதே சொல்லத் தெரியாதா?”
“ஏண்டா (இளக்காரமாக)… இந்தப் பஞ்சப் பனாதைப் பசங்களோட என்னடா சகவாசம்னா… பிச்சைக்காரப் பயல்களோட…”
கோபம் தலைக்கேறிய நிலையில் ரமேஷ் வெடிக்கிறான்… “போதும் நிறுத்துடா! நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்… யாருடா பஞ்சப் பனாதை? நீதாண்டா. உன்கிட்ட எவ்வளவோ காசிருக்கு… என்னடா பிரயோசனம்? உன் கை உன் வாய்க்குத் தான் பிரயோசனப் பட்டிருக்கு. மத்தவங்களுக்கு பிரயோசனப் பட்டிருக்கா? ஆனா பஞ்சப் பனாதைன்னு சொல்றியே, அவங்களப் போய் பாரு… பக்கத்து வீட்ல சோறு இல்லைன்னா பகிர்ந்துக்கிறாங்க… பிச்சைக்காரங்கன்னு சொல்றியே, அவங்க கூடப் பக்கத்துல இருக்கிற பிச்சைக்காரனுக்கு சோறு கிடைக்கலைன்னா தங்க சோத்துல பாதிய அள்ளித் தர்றாங்க தெரியுமா? ஏன்… பக்கத்துல நின்னு அவனையே பார்த்திட்டிருக்கிற நாய்க்கும் கொஞ்சம் சோத்த கொடுத்துட்டு தான் சாப்பிடறான்! ஆனா நீ… என்னைக்காவது இதையெல்லாம் நினைச்சுப் பார்த்திருக்கியா? உனக்குத் தான் தருமம் தெரியல… செய்யறவங்கள ஏன் தடுக்கற? தருமத்த தடுத்தா ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம்னு கம்ப ராமாயணம் சொல்லுது. உன்னப் பெத்தவங்க இத உனக்கு சொல்லித் தந்திருக்கணும். ரத்தத்திலேயே இந்த உணர்வு இருக்கணும்… அத விடு, அவங்க இல்லைன்னா என்ன… மாடு மாதிரி வளர்ந்திருக்கியே, நாலு பேர் சொல்லக் கேட்டதில்லையா? இல்ல நல்ல புத்தகங்களைக் கூடவா படிச்சித் தெரிஞ்சிக்கல? நல்ல சினிமாக்களைப் பார்த்துக் கூட உன்னாலப் புரிஞ்சிக்க முடியலையா? அப்படியுங் கூட உனக்கு வரலன்னா, நீ மனிதன்லயே சேர்த்தியில்லை! நீ வாழ்ந்து என்ன பிரயோசனம்? நாம வாழற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கணும். உனக்கு இதெல்லாம் எங்கப் புரியப் போகுது? அன்னைக்கு எனக்கு ‘குடும்பத் தலைவி’ன்னா என்ன அர்த்தம்னு சொன்னியே, நா இப்ப கேக்கறேன்… ‘குடும்பத் தலைவன்’னா என்ன அர்த்தம்? யோசிச்சுப் பாரு… நீ எந்தக் காலத்துல இருக்கற? பொம்பளைன்னா இளக்காரமா இருக்கு… மனைவியோட சுக துக்கங்கள்ள பங்கு பெறுவதா சொல்லித்தான் தாலி கட்டுறோம், தெரியுமா? புரியாத வடமொழியில மந்திரங்கள சொல்றதுனால அதன் அர்த்தம் புரியல. அதனாலத்தான் அவங்கவங்க தாய் மொழியில மந்திரத்த சொல்லணும்கிறது. வேலை செய்யறதில பொட்டச்சி வேலை, ஆம்பள வேலைன்னு எல்லாம் பாகுபாடு தேவையில்லை. வீட்டுப் பொம்பள அழுதா அந்த வீடு விளங்காது… உருப்படாது. மொதல்ல உன் வீட்டைக் கவனி… மனைவிக்கு என்ன வேணும்கிறத கவனி… பிள்ளைகளைக் கவனி… நல்ல மனைவிய அலங்கோலமாக விட்டிருக்கியே, மனசாட்சி இல்லையா உனக்கு? உன்னோட சந்தோஷத்தை மட்டும் பார்த்துக்குறியே, ஒரு நல்ல நாள்னு மனைவி குழந்தைகளை எங்கயாவது அழைச்சிப் போயிருக்கியா? குடும்பத்தைக் கவனிச்சிக்குற உன் கடமையை செய்யறதுக்கு தான் ‘சுய தர்மம்’னு சொல்வாங்க. அந்த சுய தர்மமே தெரியாத உன்கிட்ட போய் ‘பிற தர்மத்’தைப் பேசற என்னைக் கட்டையாலத் தான் நான் அடிச்சிக்கணும். வேண்டாம்ப்பா, போதும் ஆளை விடு! என் மேல நல்ல காத்து தான் படணும். வர்றேன். குட் பை!”
கோபமாக ரமேஷ் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கிரீஷ்… தீவிர யோசனையுடன் வீட்டை நோக்கி நடக்கலானான். இனிமேலும் அவன் மாறாமல் இருப்பானா? நிச்சயம் மாறத் தான் போகிறான்…
ஏனெனில் அவனும் மனிதன் தான்!