உலகம் நம் கையில்!
நீ மானா… மயிலா?
தேனா… திரவியமா?
இயற்றமிழா… இசைத்தமிழா?
நாடகத்தமிழா?
அல்லது
நான் பாடும் தேவகானமா?
நீ என்னில்
நான் உன்னில்
எனில்,
இந்த உலகம் யார் கையில்?
என்னை இழந்தது…
இதென்ன தேகமா
திருவாரூர்த் தேரா?
இதென்ன கூந்தலா
மழை மேகமா?
இதென்ன கண்களா
ஒளி மின்னலா?
இதென்ன இதழா
தேவாமிர்தமா?
இதெல்லாம் கண்டு
என்னை மறந்தாலும்,
பரவாயில்லை மீள்வேன்.
ஆனால்…
என்னை இழந்ததுதான்
இந்த யுகத்தின் சோகம்!
கஞ்சி கால்வயிறு…
இப்போது காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் எளிமையான வாழ்க்கையைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
ஆனால் இப்போது ஆடம்பரம் அதிகமாகிவிட்டது.
ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. உண்மைதான். ஆனால் அதற்காக… தொலக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாகனம், எல்லாமே ‘பெரியதாக’ அதிக விலை உயர்ந்ததாக வாங்கவேண்டும் என்று நினைக்கலாமா?
தெரிந்தவர், உறவினர், தோழர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே போட்டிபோட்டுக்கொண்டு வாங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
செல்வேந்திரர்கள் வாங்கி விட்டார்கள் என்பதற்காக, கையேந்திரர்கள் வாங்க நினைப்பது தவறில்லையா?
கடனை வாங்கியாவது ஒரு பொருளை அடம் பிடித்து வாங்குவதன் விளைவு என்ன ஆகும்? ஒன்றுமில்லை… நீங்கள் கடனாளியாக இருப்பீர்கள்!
வரவுக்கேற்ற செலவு செய்யாமல் எல்லை மீறியதன் விளைவால் தெருவில் நின்றவர்கள் பல பேர்.
ஊர்ப் பெருமைக்காக ஊரையே திருமணத்திற்கு அழைத்து ‘தாம் தூம்’ என்று செலவு செய்துவிட்டுப் பிறகு செல்லாக்காசாகி, கடனாளியானவுடன் ஊர் முகத்தில் விழிக்க முடியாமல் முகத்துக்கு முக்காடு போட்டுக்கொண்டு போவதைப் பார்த்திருக்கின்றேன்…
கடன் வாங்கிக் கையில் காசிருக்கின்ற வரை வீடே கல்யாணக்களைதான்! கடன்காரன் வந்து காசு கேட்டு நெருக்கும்போது கவலை மனிதனை காவு கொள்கிறது.
கடன்காரனின் சுடு சொற்களால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் கதைகளைக் கேட்டதன் பின்பும் திருந்தாதவர்கள் திருந்தவேண்டும் என்பதற்காக திரும்பித் திரும்பிக் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்…
எந்தக் காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காதீர்கள்.
திருப்பிக் கொடுக்கின்ற சக்தி இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.
விரும்பி வாங்குகின்ற பணத்தைத் திருப்பி அளித்தால் தானே திரும்பி வராத உலகத்திற்கு போனாலும் நம் சந்ததிகள் நம்மை வாழ்த்தும்.
உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கடனைச் சேர்த்து அவர்களையும் கடனாளியாக்கிவிடாதீர்கள்.
1950-60களில் சென்னைக்குப் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைப்பது என்பது மிகப் பெருமையாகக் கருதப்பட்டக் காலம்!
என் மாமாக்களில் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகளில் இருவரை சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.
ஊரிலேயே பெரிய வீடாகக் கட்ட வேண்டுமென்று சக்திக்கு மீறி பெரிய பங்களா ஒன்றைக் கட்டினார். கடனை அடைக்க வேண்டிய நேரத்தில் காசு வரக்கூடிய வாசற்கதவு அழுத்தமாக சாத்திக்கொண்டது! இதற்கிடையில் இரண்டாவது பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. பங்களாவை விற்றார். பிள்ளைகள் ஆளுக்கொரு வேலையைத் தேடி சென்னைக்குச் சென்றார்கள். சிலருக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையைச் செய்தார்கள்.
மாமா சிங்கம் போல் வாழ்ந்தவர்… சிறுத்துப் போனார். ‘சீற’வேண்டிய சிங்கம் ‘வேற’மாதிரிப் போனது. பிள்ளைகள் இவரைச் சார்ந்து நின்றதுபோய், பிள்ளைகளைச் சார்ந்து இவர் நின்ற நிலையில் சுயம் இழந்து, வெந்து, நொந்து, நூலாகி இறந்து போனார்.
உறவினர்கள் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.
ஏன்?
தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கலாம். உறவினர்களை அவர் மதியாமல் இருந்திருக்கலாம்… சேர்க்காமல் இருந்திருக்கலாம்… எவ்வளவோ குறைகள் இருந்திருக்கலாம்… குறையில்லா மனிதர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. உறவினர்களுடன் உறவு இல்லாத வாழ்க்கை வீண்.
எந்த அளவுக்கு இராவணன் வருத்தப்பட்டிருந்தால் ‘கடன் பட்டாற் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் எழுதியிருப்பார். அதே நிலையில் இருந்த என் மாமாவுக்கு உறவினர் செய்யத் தவறியது என்ன தெரியுமா? ஆளுக்குக் கொஞ்சம் முதல் போட்டு அவரது தொழிலுக்கு உதவி செய்திருந்தால் அந்தக் குடும்பமும் உருப்பட்டிருக்கும்… செய்த உறவினர்களுக்கும் புண்ணியம் சேர்ந்திருக்கும்…
அப்படியும் அவர் எக்கேடுகெட்டால் எங்களுக்கு என்ன, அவருக்கு ஏன் நாங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் இன்னொரு வழியில் உதவியிருக்கலாம்… திருமணத்திற்கு மொய் எழுதுவதுபோல் பணத்தை மொத்தமாக வட்டியில்லாமல் கொடுத்துவிட்டு, அவருக்கு எப்போது முடியுமோ அப்போது திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் அல்லது மாதம் இவ்வளவு பணம் என்று கொடுக்கும்படியும் கேட்டு வாங்கியிருக்கலாம். அப்படியும் அவர் திருப்பி அளிக்க மாட்டார் என்று தோன்றினால் ‘காந்தி’ கணக்கில் எழுதி விட்டிருக்கலாம்.
வசதியானவர்கள் தர்மம் செய்வது தவறா?
ஒருவரின் வயதான காலத்தில் ஒன்றுமே இல்லாமல் நிற்கும்போது முடிந்தவரை உதவவேண்டும். அவரது பழைய வாழ்க்கையைக் கிளறி குற்றங்களைக் கண்டுபிடிப்பதைவிட கை தூக்கி விட்டால் போகின்ற இடத்திற்குப் புண்ணியமாக போகமுடியும்.
எதுவாகினும் “கஞ்சி கால்வயிறு குடித்தாலும் பரவாயில்லை, கடனில்லாத வாழ்க்கை போதும்!” என்ற தெளிவும், மனவுறுதியும் இருந்தால் அதுவே நிம்மதி!
காதல்!
காதல் வயப்படுகையில்
உலகில் எல்லாமே துச்சம்!
காதலன் கைவிடும்போது
உலகில் என்ன மிச்சம்?
நீ தனி.
அவன் தனி.
மாறு…
ரயிலைத் தவறவிட்டவள்
மறு ரயிலில் ஏறவில்லையா?
கலங்காதே…
ஏறு நிலையில் எகிருகிறாய்
வீழு நிலையில் பதறுகிறாய்
ஏறு… முன்னேறு…
பின் எல்லாம்
பேறு… பெரும் பேறுதான்!
எறும்பு
குறும்பு செய்யும்
எறும்பு எனச் செயல்படு
கரும்பு என மொழிந்திடு
துரும்பு என நினைப்போரிடம்
இரும்பு என இருப்பைக் காட்டு
இனி –
இவ்வுலகம் உன் கையில்!
வீழ்வதெனில்…
வீழ்வது இயல்பு.
அதைவிட மீண்டும்
எழுவது மிக மிக இயல்பு!
பச்சிளம் குழந்தை
இச்சகத்துக்கு வந்தப் பிறகு
விழவில்லையா?
விழுந்தாலும் திரும்பத் திரும்பப்
போராடி நிற்கவில்லையா!
எழு! நில்!! நட!!!
காதலுக்குத் தேவை என்ன?
காதலுக்குத் தேவை
மண்ணுமல்ல…
பொன்னுமல்ல…
வாழ்தலுக்கான உள்ளமே!
குருப் பெயர்ச்சி!
இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இருக்கு ஆனால் இல்லை என்பது போல்… யாருக்கும் சொந்தமில்லை என்று ஒரு சாராரும், எல்லோருக்கும் சொந்தம் என்று மறுசாராரும் சொல்லலாம்.
நான் மறுசாரார் பக்கம்! ஆமாம்… உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்… ஏன், உயிருள்ள சகல உயிரினங்களுக்கும் இந்த உலகம் சொந்தம்.
ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?
உணவு.
உடை.
உறையுள் எனப்படும் வீடு.
வசதியுள்ளவர்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருப்பதில்லை.
ஓரளவுக்கு உணவு, உடை, அரசாங்கங்களின் உதவியாலோ அல்லது நல்ல உள்ளங்களின் உதவியாலோ கிடைத்துவிடுகிறது.
ஆனால் வீடு?
வெயில், மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், மனக்கொடுமையாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வீடு தேவை தானே?
இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
எங்கே காலி இடம் உள்ளதோ அங்கே தற்காலிகமாக குடிசை போட்டுக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். இவர்களைத் தான் நாம் புறம்போக்கு நிலத்தில் வாழ்கிறவர்கள் என்று சொல்கிறோம்!
இதில் இரண்டு வகையினர்.
பலர் – பல வருடங்களாக இருப்பவர்கள்.
சிலர் – சில வருடங்களாக இருப்பவர்கள்.
எப்படியோ, கால் வயிறு, அரை வயிறு உண்டு, அரை குறை ஆடைகளையாவது குழந்தைகளுக்கு அணிவித்து, முழு வயிறு சாப்பாடு தந்து, முடிந்தவரை பள்ளிக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பார்கள்.
கேட்டுப் பாருங்கள்… பெருமையாக “எம்புள்ள அஞ்சாப்பு படிக்குதான்” என்பார்கள்.
ஏனெனில் இந்தக் காலத்தில் கல்வியின் முக்கியத்துவம் கற்றோருக்கு மட்டுமல்ல, கஞ்சி குடிப்பவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை! இருப்பதை வைத்துக்கொண்டு இன்பமாக இருப்பவர்கள்… ஆசை உண்டு… ஆனால் பேராசை கிடையாது.
விடுமுறை நாட்களில் கருவாட்டுக் குழம்போ அல்லது நெத்திலி மீன் குழம்போ, சாம்பாரோ வைத்துச் சாப்பிட்டு விட்டு, குறைந்த கட்டணத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு, மறுநாள் வாரத்தின் முதல் நாளை (அது தான் திங்கட்கிழமையைச் சொல்கிறேன்) கொண்டாட (திண்டாட) கிளம்பி விடுவார்கள்.
இதோ… இப்படி எதற்கும் கவலைப்படாமல் இருப்பவர்கள் வாழ்வில் திடீரென்று ‘இடி’ விழுகின்றது…
என்ன அது?
திடீரென்று காவலர்கள் திபு திபுவென்று அவர்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி நிற்கிறார்கள்…
கோட்டு சூட்டு போட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரிலும் ஜீப்புகளிலும் வந்திறங்குகிறார்கள்…
அதில் ஒருவர் கேட்கிறார்… “யாருப்பா இங்கே… குருங்கிறது?”
கூட்டத்திலிருந்து ஒரு குரல், “சார்… எம் பேர் தான் குரு!… இன்னா சார் வெஷயம்?”
“ஓ… அப்படின்னா… நீங்க தான் இங்க இருக்கிறவங்களுக்கெல்லாம் குருவா?”
“சார்… நா… வந்து…”
“அதாம்பா, தலைவனான்னு கேக்கறேன்…”
“ஆமா சார்!”
“அரசாங்கத்தில இருந்து உத்தரவு… இதுவரைக்கும் இந்த இடத்தைக் காலி பண்ணச் சொல்லியும் நீங்கள்ளாம் காலி பண்ணல… அதனால இப்ப… (மென்று முழுங்கிக்கொண்டே சொல்கிறார்) உங்க வீட்டையெல்லாம் இடிக்கப் போறோம்!”
கூட்டம் பதறுகிறது…
கூட்டத்தில் ஒரு வயதானப் பெண்மணி, “அய்யா… தருமதொரைங்களே… இப்டி துடுதிப்புன்னு சொன்னாக்கா நாங்க இன்னா செய்வோம்… நாங்க ரொம்ப வர்ஷமா கீறோம்… அத்னால இது அப்டியே கீட்டோம், நாங்க…” என்று அவர் முடிப்பதற்குள்… “இவங்கள்லாம் இப்படித்தாம்பா, சொன்னப் பேச்சை கேக்கமாட்டாங்க… நீங்க இடிக்க ஆரம்பிங்க” என்று ஆபீசர் சொன்னவுடன், புல்டோசர்கள் கட்டிடங்களை இடிக்க ஆரம்பிக்கின்றன…
அதற்குள் பதறிய குரு சொல்கிறான்… “சார், நீங்க சொல்றா மாதிரி எங்களாண்ட யாரும் சொல்லிக்கிலே… இதோ பாரு, ஆபீசர் சாரு… தம்மாத்தூண்டு டையிம் குடுத்துவுடு… அப்பால பாரு… நயினா, நாங்க ஒட்டுக்க காலி செஞ்சிடறோம். ஆனா அதுக்கு மொத வேலையா நீங்க எங்ளுக்கு வேற வால்றதுக்கு எடம், பூவாவுக்கு வலி(ழி) செஞ்சி…” என்று அவன் முடிக்கும் முன்பே… கட்டிட இடிப்புகள் தொடர்கின்றன…
கூட்டம் கதறுகின்றது… மண்ணில் புரண்டு புரண்டு அழுகின்றது…
பாவம், தலைவனான குருவுக்கும் தெரியாது வாரத்தின் முதல் நாளான திங்களன்று அவனுக்கு ‘குருப் பெயர்ச்சி’ என்பது!
இனி என்ன செய்யப் போகிறான் அவன்?
அவன் கேட்டதில் ஏதாவது தவறு உள்ளதா?
வசதியானவர்களுக்குக் கூட காசு கொடுத்தாலும் உடனே வீடு கிடைக்காதே… இந்த நரகத்தில்!
இந்த நேரத்தில் தலைவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட குரு, முதலில் இந்த இரவைக் கழிக்க கூட்டத்தினருக்கு எப்படி உதவி செய்யப் போகிறான்?
என்ன வழி என்று தெரியாமல் திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறானே…
இம்மாதிரியானச் செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யாருக்கோ, எங்கேயோ நடக்கின்றதைப் பற்றி நமக்கென்ன கவலை?
விடுங்கள்… நாம் சாப்பிடலாம், தூங்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், கடற்கரை போகலாம், திரைப்படம் பார்க்கலாம்…
ஏன், வெட்டியாகவே கூட இருக்கலாம்…
நம்மைப் பாதிக்காதவரை எல்லாம் சுகமே!
ஆனாலும் மனம் கேட்கவில்லையே. இதற்கு என்ன தீர்வு?
ஏழைகளுக்கு தங்க இடம் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எவ்வளவோ நல்லதைச் செய்துகொண்டிருக்கிற அரசு இதையும் கவனத்தில் கொண்டால் ‘எங்களுக்கு இடம் இல்லை’ என்று சொல்வதையே இடமில்லாமல் ஆக்கிவிடலாம்.
அரசு இவற்றைச் செய்யாதா என்ன?
நிச்சயம் செய்யும்!
நம்புவோம்!!