அடங்கு மனிதா!
உன் சம்மதமின்றி
இவ்வுலகத்தில் உதித்தாய்!
அதே போல்…
உன் சம்மதமின்றி
அவ்வுலகத்திற்குப் போகப் போகிறாய்
என்பது நிதர்சனம் எனில்…
இதில் என்ன ஆட்டம் பாட்டம்,
அடங்கு மனிதா… அடங்கு!
உடல்!
உடல் மொழி
உன்மத்தைத் தரும்.
உள்ள மொழி
உயர்வைத் தரும்!
மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்
சரி, இனி நடப்பவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். நமது வீடுகளில் அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சிகள், தம்பிகள், அண்ணிகள், தாத்தா பாட்டிகள்… இவர்களைப் பற்றி அக்கறை நமக்கு உள்ளதா? காலங்காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு, காலன் (எமன்) வருகின்றவரை ‘ஓய்வு’ கொடுக்காமல் இருக்கின்றோம். இது நியாயமா? நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
உழைத்து, ஓடாகி, எலும்பு தேய்ந்து, நரம்புகள் புடைத்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓர் அறுபது எழுபது வயதுக்கு மேலேயும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்ற ஆண், பெண் இருபாலாரையும் பார்க்கும்போது மனது பதறுகிறதே… முதியவர்களின் முதுகு வளைந்த நிலையிலும், கண், காது சரியாக செயல்படாத நிலையிலும், கால்கள் தடுமாறும் நிலையிலும், அவர்கள் மீது வேலை திணிக்கப்படும்போது தட்டுத் தடுமாறுகிறார்களே… நமக்கு மனம் பதறவில்லையா? ஏன்… அந்த அளவுக்கு மனம் கல்லாகிப் போனதா?
இல்லை… நிச்சயமாக நாம் அவ்வளவு மோசமில்லை… என்று தான் நினைக்கிறேன். கொஞ்சம் பார்வைக் குறைபாடு நம்மிடம் உள்ளது. அதை நேராக்கிவிட்டால் முதியவர்களின் நிலையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.
சென்னை தி.நகரில் 22 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததைக் கூறுகிறேன். நான் வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு நல்ல வசதியான குடும்பம். கணவன், மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், இவர்களுடன் கணவனின் தந்தை. அவருக்கு ஏறக்குறைய 70 வயதுக்கு மேல் இருக்கும். வெட வெடத்த… ஒல்லியான தேகம்… பார்க்கவே பாவமாக இருக்கும். அவரது மகன் குழந்தைகளை தன் காரில் தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.
அவருக்கு முடியாத நேரங்களில் மருமகள் பெண் குழந்தைகள் இரண்டையும், ஒன்று 5 வயதிருக்கும் இன்னொன்று 6 வயதிருக்கும்… பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் இல்லையா? பள்ளிக்கும் வீட்டிற்கும்… ஓர் இரண்டு தெரு நீளம் தான் இருக்கும். ஆனால் அவர் அழைத்துச் செல்ல மாட்டார்.
அப்பெண்மணியின் மாமனார் தான் அழைத்துச் செல்வார்… எப்படி? தட்டுத் தடுமாறி அவர் நடப்பதைப் பார்த்தாலே நமக்கு மனம் தத்தளிக்கும். இரண்டு பேரக்குழந்தைகளின் கைகளையும் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு, அவர்களது புத்தக மூட்டை இரண்டையும் முதுகில் முடியாது என்பதால் தோளில் போட்டுக்கொண்டு… மெதுவாக… மிக மெதுவாக… நடப்பார்.
அது சரி… அவருக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில்… பாதுகாப்பற்ற நிலையில் நடக்கக் கூடிய அவரை நம்பி, சின்னஞ்சிறு குழந்தைகளை ஒரு தாய் எப்படி அனுப்பினார் என்பது இப்போது நினைத்தாலும் எனக்கு செரிக்கவில்லை…
உங்களுக்கு எப்படி…?
அப்பெண்மணியின் தந்தையாக இருந்தாலும் அவர் அப்படித்தான் நடத்துவாரா?
நான் ஊருக்குச் சென்ற போது இதே போன்று… என் உறவுப் பெண் ஒருவர் ‘இப்போவெல்லாம் என்னால வேலை செய்ய முடியலைங்க’ என்று சொன்னதும் என் மனதில் சொல்லமுடியாத வருத்தம்.. என் பங்குக்கு நான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தாலும்… முழுவதும் அவர்கள் வேலையிலிருந்து விடுதலை பெற சிந்திக்க வேண்டியவர்கள் அவரது மகள்கள், மகன்கள், மற்றும் அவரது கணவர் தான் யோசிக்க வேண்டும்.
சில மரங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும், காற்று விடுவதில்லை!